இறைவனுக்கும் சூர்யாவுக்கும் நன்றி!: அருண் விஜய் பேட்டி

இறைவனுக்கும் சூர்யாவுக்கும் நன்றி!: அருண் விஜய் பேட்டி
Updated on
2 min read

கதாநாயகன், வில்லன் எனக் கலவையான கதாபாத்திரங்களில் ரசிகர்களைத் தன்வசமாக்கி வைத்திருப்பவர் அருண் விஜய். ‘இமேஜ்’ பற்றிய எவ்விதப் பதற்றமும் இல்லாமல், தெலுங்கு, கன்னட சினிமாவிலும் கால் பதித்து நடித்து வருகிறார். தற்போது சூர்யா - ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத் தயாரிப்பில், சரோவ் ஷண்முகம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ஓ மை டாக்’ படத்தில், தன்னுடைய தந்தை விஜயகுமார், மகன் அர்னவ் விஜய் ஆகியோருடன் நடித்திருக்கிறார். படம் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கும் நிலையில் 'இந்து தமிழ் திசை'க்கு அருண் விஜய் அளித்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி..

திரையில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை கடந்த 2020-ல் நீங்கள் கொண்டாடவில்லையே?

கரோனாவால் மக்கள் அல்லாடிக்கொண்டிருந்த சமயத்தில் நான் எந்தக் கொண்டாட்டத்திலும் ஈடுபட விரும்பவில்லை. 27 வருடங்கள் அவ்வளவு வேகமாக நகர்ந்துவிட்டன. மிகச்சிறிய வயதிலேயே நடிக்க வந்துவிட்டேன். இப்போது நினைத்துப் பார்த்தால், இன்னும் கொஞ்சம் பக்குவத்துடன், இன்னும் கற்றுக்கொண்டு நடிக்க வந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். என்றாலும் நிறைய கற்றுக்கொண்டுவிட்டேன். என்னுடைய வெற்றியின் பின்னால் எனது குடும்பம் மட்டுமல்ல, எனக்கு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களைக் கொடுத்து அழகுபார்த்த இயக்குநர்கள், படங்களில் என்னுடன் பணிபுரிந்த ‘டச் அப்’ பாய், லைட் மேன் வரை பலர் என்னுடைய முன்னேற்றத்துக்காக உழைத்திருக்கிறார்கள். பத்திரிகை, ஊடக நண்பர்கள் என்னைத் தட்டிக்கொடுத்து வளர்த்திருக்கிறார்கள். இவை எதையுமே என்னால் மறக்க முடியாது.

உங்கள் மகனை இப்போதே சினிமாவில் நடிக்க அழைத்து வந்துவிட்டீர்களே..?

என் மகனைத் தேர்வு செய்தது சூர்யா சார். இந்தப் படத்தின் இயக்குநர் சரோவ் ஒரு ‘யுனிவர்சல் ஸ்டோரி’யாக இப்படத்தின் கதையை சூர்யாவிடம் சொல்லியிருக்கிறார். அர்ஜுன் என்கிற ஒரு 10 வயதுச் சிறுவனுக்கும் அவனை வந்தடையும் கண் தெரியாத ‘சிம்பா’ என்கிற ஒரு சைபீரியன் ஹஸ்கி வகை நாய்க்குட்டிக்குமான பல கட்ட அன்பையும் அதற்கு தடையாக வரும் விஷயங்களையும் பேசும் கதை. கதையைக் கேட்டதுமே எனது மகன் சரியான தேர்வாக இருப்பான் என்று கூறி, என்னிடம் கதை சொல்லும்படி இயக்குநரை அனுப்பினார் சூர்யா. கதையைக் கேட்டதும் எனது மகன் அர்னவின் நிஜ கேரக்டர் அப்படியே ஒத்துப்போனதை உணர்ந்தேன். உண்மையிலேயே இது டிஸ்னி படங்களுக்கு இணையான ஒரு குழந்தைகள் திரைப்படமாகவும் குடும்பப் படமாகவும் உருவாகிவிட்டது. நமது கலாச்சாரம் அழுத்தமாகப் பதிவாகியிருந்தாலும் உலகில் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் படம் பார்த்தாலும் ஒன்றிவிடுவார்கள். ஆர்னவ்வும் நாயும் இந்தப் படத்தில் இரண்டு ஹீரோக்கள். வில்லன் ரோல் இன்னும் வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கிறது. படத்தைப் பார்த்துவிட்டு சூர்யா சார், ‘ஆர்னவ்வுக்கு நடிப்புக்கான விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்’ என்றார். இதைவிட வேறு என்ன பாராட்டு வேண்டும். இந்தக் கதை அவனுக்குச் சிறப்பாகப் பொருந்தியதாலும் அவன் மழலை மாறாமல் இருந்ததாலும் ஒப்புக்கொண்டோம். இதன்பிறகு படிப்புக்குத்தான் முதலிடம்.

உங்கள் கதாபாத்திரம் பற்றிக் கூறுங்கள்...

தாத்தா, பேரன், அம்மா ஆகிய மூன்று கதாபாத்திரங்களுக்குத்தான் கதையில் அதிக முக்கியத்துவம் இருந்தது. அர்ஜுன் கேரக்டரின் அப்பா கேரக்டருக்கு சில காட்சிகள்தான் இருந்தன. ஆனால், இயக்குநர், ‘இதில் நீங்கள் உள்ளே வருவதாக இருந்தால் இது இன்னும் பெரிய படமாகிவிடும், உங்கள் கேரக்டரை இன்னும் விரிவாக எழுதியிருக்கிறேன் அதையும் கேளுங்கள்’ என்றார். கேட்டேன். பிடித்துப்போய்விட்டது. அப்பா - மகனுக்கான தருணங்கள் இதில் என்னை வெகுவாகக் கவர்ந்தன. ‘மாபியா: சேப்டர் 1’ படத்துக்குப் பிறகு இந்தக் கேரக்டர் எனக்கு மிகப்பெரிய ‘ரிலீஃப்’ ஆக இருந்தது. அடுத்து எனது நடிப்பில் வரவிருக்கும் படங்கள் ஒவ்வொன்றும் ஒரு ஜானர். ஒவ்வொன்றிலும் வெவ்வேறு கதாபாத்திரங்களில் வருகிறேன். ஆனால். ‘ஓ மை டாக்’ எனது சினிமா பயணத்தில் மறக்க முடியாத படமாக இருக்கப்போவது உறுதி. காரணம் குழந்தைகளோடு நடித்தது வேறொரு உலகத்துக்கு என்னைக் கூட்டிக்கொண்டுபோனது. ரொம்பவே ‘அண்டர்பிளே’ செய்து, அனுபவித்து நடித்திருக்கிறேன். அப்பா, நான், எனது மகன் மூவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அமைந்தது இறைவன் செயல் என்று நினைக்கிறேன். இறைவனுக்கும் சூர்யாவுக்கும் நன்றி. அவர்களுடன் இயக்குநர் சரோவ், ஒளிப்பதிவாளர் கோபிநாத், இணைத் தயாரிப்பாளர்கள் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், எஸ். ஆர். ரமேஷ் பாபு ஆகியோருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து உங்களுடைய படங் களின் வெளியீட்டு வரிசையைச் சொல்லுங்கள். உங்களுடைய மைத்துனர், இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

முதலில் ‘பார்டர்’, அடுத்து ‘யானை’, அதன்பிறகு ‘சினம்’ என்கிற வரிசையில் படங்கள் வெளியாகவிருக்கின்றன. ‘அக்னி சிறகுகள்’ படத்தின் கிராஃபிக்ஸ் வேலை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த வருடம் எனக்குச் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன். ஹரி சார் அளவுக்கு படப்பிடிப்பில் வேகம் காட்ட முடியாது என்று சொல்வார்கள். அதை நேரடியாகப் பார்த்தேன். 24 மணிநேரமும் படப்பிடிப்பு நடத்தினாலும் நானும் ஓயமாட்டேன். அதனால், எனக்கு அவருடைய 'ஒர்க்கிங் ஸ்டைல்’ ரொம்பவே பிடித்துப்போனது. ‘யானை’ படத்தில் தன்னுடைய மேக்கிங் ஸ்டைலை மாற்றி, புதிதாக ஒன்றை முயன்றிருக்கிறார். அது அவருடைய, என்னுடைய ரசிகர்களை 100 சதவீதம் திருப்திப்படுத்தும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in