

புகழ்பெற்ற மேல்மாடக் காட்சி | படங்கள் உதவி: ஞானம் |
ஐம்பதுகளில் ஒரே நேரத்தில் நான்கைந்து படங்களைத் திட்டமிட்டுத் தயாரிப்பதில் புகழ்பெற்று விளங்கியது ஜூபிடர் பிக்சர்ஸ். சூப்பர் ஹிட் இயக்குநர் சுந்தர்ராவ் நட்கர்னி இயக்கத்தில் ‘கிருஷ்ண விஜயம்’ (1950) என்கிற படம் தயாரிப்பில் இருந்தது.
ஜூபிடரின் தொடக்கக் கால வெற்றிகளின் பின்னாலிருந்த கதாசிரியர், இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமி என்கிற அருள் சூசை அந்தோணிசாமியின் இயக்கத்தில் ‘விஜயகுமாரி’ (1950) என்கிற படமும் வளர்ந்துவந்தது.
தலா ரூ.6 லட்சத்தில் பிரம்மாண்டமாகவும் அதிக தந்திரக் காட்சிகள் கொண்டவையாகவும் இரண்டு படங்களும் தயாராகிவரும் செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகிப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கின.
ஆனால், எதிர்பாராத வகையில் இந்த இரண்டு படங்களும் படுதோல்வி அடைந்தன. ஜூபிடரின் கதை முடிந்தது என்று மற்ற பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் நினைத்தன. ஆனால் ‘கிருஷ்ண விஜயம்’, ‘விஜயகுமாரி’ ஆகிய இரண்டு படங்களும் தயாரிப்பில் இருந்த போது, ஜூபிடர் மிகச் சிக்கனமாகத் தயாரித்துவந்த இரண்டு சிறியபடங்கள் அடுத்தடுத்து வெளி யாகி அதிரடியாக வெற்றி பெற்றன.
ஜூபிடர் அதிபர்களான சோமசுந்தரமும் மொய்தீனும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஜூபிடரைத் தாங்கிப்பிடித்த அந்த இரண்டு சிறிய படங்களில் ஒன்று எஸ்.பாலசந்தரின் ‘கைதி’ (1951). மற்றொன்று பின்னாளில் ‘புரட்சி நடிகர்’ என்று எம்.ஜி.ஆர். அழைக்கப்பட அஸ்திவாரம் அமைத்துக் கொடுத்த ‘மர்ம யோகி’ (1951).
மதிக்கப்பட்ட உழைப்பு
‘சதி லீலாவதி’யில் (1936) தொடங்கி, 12 படங்களில் துணை வேடங்களில் நடித்து முடித்திருந்த போதும், அப்போது எம்.ஜி.ராமச்சந்தராக இருந்த எம்.ஜி.ஆரால் தனித்து அடையாளம் பெற முடியவில்லை. அந்தக் குறை யைப் போக்கியது எம்.கே.டி. என்கிற சூப்பர் ஸ்டாரின் வெற்றிப் படமான ‘அசோக்குமார்’ (1941).
அப்படத்தில், மாமன்னர் அசோகரால் தண்டிக்கப்படும் அவருடைய மகன் குணாளனாக நடித்தார் எம்.கே.டி. இச்சை மனங்கொண்ட சிற்றன்னையின் சதியால் குணாளனின் கண்கள் குருடாக்கப்படும் முன்பு, அவ னுக்கு அடைக்கலம் கொடுக்கும் தட்சசீல அதிகாரி மகேந்திர னாக, சிறு கதாபாத்திரத்தில் தோன்றிய எம்.ஜி.ராம்சந்தர் ரசிகர்களின் கவனத்துக்கு உள்ளானார்.
ஆனால், மீண்டும் பல துணைவேடங்களே வந்தன. எம்.ஜி.ராம்சந்தரின் நீண்ட காத்திருப்புக்கு ஜூபிடரே முதல் வெகுமதியை அளித்தது. ஜூபிடர் சோமசுந்தரம் தான் இயக்கிய ‘முருகன்’ (1946) படத்தில் எம்.ஜி.ஆருக்கும் கே.மாலதிக்கும் பரமசிவன் - பார்வதி வேடங்களைக் கொடுத்தார்.
நடனம் தெரியாத நிலையி லும் அப்படத்தில் இடம்பெற்ற சிவ தாண்டவ நடனத்தை இரவு பகலாகப் பயிற்சியெடுத்து அட்ட காசமாக ஆடி, ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றார் எம்.ஜி.ராம்சந்தர்.
சிவபெருமான் வேடப்பொருத்தமும் பேசப்பட்டதால், தங்களின் அடுத்த படமான ‘ராஜகுமாரி’யில் (1947) எம்.ஜி. ராம்சந்தர் - கே.மாலதி இருவரை யும் நாயகன் - நாயகி யாக ஜூபிடர் அதிபர்கள் உயர்த்தினர்.