Last Updated : 11 Mar, 2016 11:08 AM

 

Published : 11 Mar 2016 11:08 AM
Last Updated : 11 Mar 2016 11:08 AM

அஞ்சலி: கலாபவன் மணி - "அங்கீகாரம் கிடைக்க மரணம் அவசியம்!"

பணம், செல்வாக்கு இருந்தாலும் இங்கிதமாகப் பழகுபவர்களை டவுன் டு எர்த் பெர்சனாலிட்டி என்பார்கள். அதற்கு ஒரு நல்ல உதாரணம் நடிகர் கலாபவன் மணி. பழசை மறக்காத பக்குவம் அவரிடம் கடைசிவரையில் இருந்தது என்பதற்கு அவர் இறந்ததும் சாலக்குடியில் திரண்ட மக்கள் கூட்டமே சான்று.

கலாபவன் மணி இருநூறு தென்னிந்தியப் படங்களில் நடித்திருக்கிறார். கேரள மாநிலம் தாண்டி, மதுரையில், கலாபவன் மணி ரசிகர்கள் மன்றம் இருக்கிறது. மதுரை, தஞ்சாவூர், திண்டுக்கல் போன்ற நகரங்களிலிருந்து ரசிகர்கள் கலாபவன் மணிக்கு இறுதி மரியாதை செய்வதற்காக சாலக்குடி வந்திருந்தது சாலக்குடி மக்களையும் மலையாளப் பட உலகையும் ஒருசேர நெகிழச் செய்தது.

எடுபிடி வேலையாளாக இருந்த மணி ஆட்டோ டிரைவராகி, மிமிக்கிரி கலைஞனாகி, பின் நடிகர் ஆனவர். கடைசி வரையில் மிமிக்கிரியை மூச்சாக சுவாசித்தவர்.

வறுமை காரணமாக, பதினெட்டு வயதிலும், மணி மிக ஒல்லியாக இருப்பார். மிமிக்கிரி பயிற்சிக்காக மணி, கொச்சியிலுள்ள ‘கலாபவன்’ பயிற்சி நிலையத்துக்கு வந்தார். தேர்வில், மணி ‘அழைப்பு மணி’யின் ஓசையை மிமிக்ரியில் உருவாக்கினார். அதில் ஈர்க்கப்பட்ட கலாபவன் பொறுப்பாளர், மணியை கலாபவனில் சேர்த்துக்கொண்டார்.

அன்று முதல், ‘கலாபவன் மணி’ ஆனார். நடனம், இசை, நாடகம், மிமிக்கிரி, பாட்டு போன்ற கலைகளைச் சொல்லித்தரும் நிறுவனம் கலாபவன். இயக்குநர்கள் சித்திக், ஹனிபா, நடிகர்கள் ஜெயராம், திலீப், பாடகிகள் சுஜாதா, ஜென்சி ஆகியோர் கலாபவனில் பயிற்சிபெற்றோரில் குறிப்பிடத்தக்கவர்கள்.

தொடக்கத்தில் மணிக்குச் சிறு சிறு காமெடி வேடங்கள்தான் கிடைத்தன. 1999-ல் வெளியான ‘16 வயதினிலே’ படத்தின் சாயல் கொண்ட ‘வசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும்’ படம் மணியின் நடிப்பில் புதிய பரிமாணத்தைச் சேர்த்தது. மாநில, தேசிய விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளும் மணியைத் தேடி வந்தன. ஆனால் மணிக்குப் பிடித்த படம் ‘ஆகாசத்திலே பறவகள்’.

கலாபவன் மணி சமையலில் நளன். அஜித் மாதிரி, ஷூட்டிங் சமயத்தில் சமைத்து எல்லாரையும் மகிழ்ச்சிப்படுத்துவார். ஷூட்டிங் நடக்கும்போது, மணி தங்கும் அறையில் அவர் ஓட்டுநரும் உதவியாளரும் பெட்டில் படுத்து உறங்குவார்கள். அவரோ தரையில் பெட்ஷீட் விரித்துக் கிடப்பார். கேட்டால், “இவங்க வீட்டில் இத்தனை வசதி இருக்காது. இங்கேயாவது அனுபவிக்கட்டும்…” என்பார்.

மார்ச் 7 சிவராத்திரி அன்று மணியின் மிமிக்கிரி நிகழ்ச்சி சாலக்குடி அருகே ஒரு கிராமத்தில் ஏற்பாடாகியிருந்தது. வரவேற்பு பேனர்களை மாற்றி, “இனியொரு ஜன்மம் எடுத்து கலாபவன் மணியாகவே திரும்ப வாங்க... நாங்க இல்லாமல் போனாலும் எங்க வாரிசுகளைப் பாட்டால், மிமிக்கிரியால் சந்தோஷப்படுத்துங்க” என்று எழுதி வைத்திருந்தார்கள். இதைவிட நெகிழ்ச்சியான அஞ்சலி இருக்குமா?

அதிகம் பாடல்கள் பாடி நடித்திருக்கும் பெருமையும், ‘த கார்டு’ (The Guard) முழுநீளத் திரைப் படத்தில் ஒற்றைக் கதாபாத்திரமாக நடித்த பெருமையும் மணிக்கு உண்டு. சில தொழில்நுட்பக் காரணங்களால் அது கின்னஸில் இடம்பெறவில்லை.

திக்கித் திக்கிப் பேசி ‘ராட்சஷ ராஜாவு’ படத்தில் வில்லனாக மிரட்ட, ‘ஜெமினி’ படத்தின் வில்லன் ஆனார். அதில் விலங்குகளின் உடல்மொழியில் மிரட்டினார். தொடர்ந்து, வில்லனாகத் தமிழ், மலையாளம், தெலுங்குப் படங்களில் ஒரு சுற்று வந்தார்.

மணியின் ‘உடல் மொழி’ அபாரமானது; அசாதாரணமானது. புருவம், கண், உதடுகள், மூக்கு, கன்னம், கை, கால் எல்லாமே நடிக்கும். கவர்ந்திழுக்கும் குரல் மாடுலேஷன் மணிக்குச் சொந்தம். பேச்சில் சாதுர்யம். டான்ஸிலும் அசத்துவார். நாட்டுப்புறப் பாடல்களை எழுதி, பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்துவதில், மணிக்கு நிகர் மணிதான். “மேடை என்பது எனக்கு ‘ஓணப் பண்டிகை ஸத்யா’ (மதிய விருந்து) மாதிரி. திருப்தி வரும்வரை விட மாட்டேன். ரசிகர்களைத் திருப்திப்படுத்தாமல் மேடையை விட்டு இறங்கவும் மாட்டேன்” என்பார்.

மணி வீட்டிலிருந்தால், கொண்டாட்டம்தான். அதுவும் பழைய நண்பர்கள் வந்துவிட்டால், பொழுதுபோவது தெரியாமல் பேசிக் கொண்டிருப்பார். நண்பர்கள் கிளம்பும்போது, அவர்கள் அன்று வேலை செய்திருந்தால் என்ன சம்பளம் கிடைத்திருக்குமோ அதைவிட இரண்டு மடங்கு கொடுத்து அனுப்புவார்.

ஒருமுறை, முன்பணம் கொடுக்க இயக்குநர் ஒருவர், மணியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அவரிடமிருந்து வாங்கிய முன்பணத்தை அப்படியே அங்கேயிருந்த ஒரு அம்மாவிடமும் இளம்பெண்ணிடமும் எண்ணிக்கூடப் பார்க்காமல் கொடுத்துவிட்டார் மணி. அந்த இளம் பெண்ணின் திருமணத்துக்கான உதவி அது. சாலக்குடியில், தன் தந்தை நினைவாக ஒரு நூலகம் கட்டியுள்ளார் மணி. பள்ளிகளுக்கும், அரசு மருத்துவமனை, காவல் நிலைய பராமரிப்புக்கும் கணிசமான தொகையையும் தந்திருக்கிறார் அவர். சாலக்குடி சாலைகளைச் செப்பனிடவும் விசால மனசு கொண்ட மணி மறக்கவில்லை. சொந்த ஆட்டோ, பைக், கார் ஆகியவற்றுக்கு எண் ‘100’ என்றுதான் வைத்திருந்தார். ஆனால் 45 வயதில் காலமாகிவிட்டார்.

கலாபவன் மணி இறந்ததும் மலையாள முன்னணி நடிகர்கள் பலர், அவரை ‘ஆஹா, ஓஹோ’ என்று பாராட்டி இரங்கல் தெரிவித்திருந்தார்கள். ஆனால். கலாபவன் மணியின் திறமையை அவர் உயிருடன் இருந்தபோது அவர்கள் அங்கீகரிக்கவில்லை என்பது கசப்பான உண்மை. “ஒரு கலைஞனுக்கு அங்கீகாரம் கிடைப்பதற்கு மரணம் அவசியம்... அவன் மரணம் அடைந்த பிறகுதான் அங்கீகாரம் கிடைக்கும்... நான் இறந்த பிறகு, என் எதிரிகள்கூட என்னைப் பாராட்டுவார்கள்” என்று கலாபவன் மணி அடிக்கடி சொல்லி வந்தார். அது பலித்தேவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x