Last Updated : 02 Oct, 2015 11:17 AM

 

Published : 02 Oct 2015 11:17 AM
Last Updated : 02 Oct 2015 11:17 AM

மாற்றுக் களம்: ஒரு இளைஞரின் ‘மறுபக்கம்’

இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட ஆவணப் படங்களை எடுத்திருக்கிறார் ஆர்.பி. அமுதன். எதுவுமே ஏனோதானோ படங்கள் அல்ல. பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை நேரடியாகக் களத்திற்குச் சென்று பதிவுசெய்கிறார். பிரச்சினையின் அனைத்துத் தரப்புக்கும் இடம் தருகிறார். இப்படித் தயாராகும் தனது ஆவணப்படங்களை அவர் தூங்கவிடுவதில்லை. ‘மறுபக்கம்’ திரைப்பட இயக்கத்தின் சார்பில் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கூடும் இடங்களில், கல்லூரிகளில், பள்ளிகளில் எனச் சளைக்காமல் திரையிட்டு, விவாதங்களையும் நடத்தி வருகிறார். இன்று இளைஞர்கள் பலரும் சினிமா, தொலைக்காட்சி ஊடகத்தின் தாக்கத்தில் இருக்கும்போது இவருக்கு மட்டும் எப்படி வந்தது ஆவணப்பட ஆர்வம்? அவர் பேசுவதைக் கேளுங்கள்...

“மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள பழையூர்பட்டிதான் எனது சொந்த ஊர். அப்பா ஒரு கம்யூனிஸ்ட். அவர் வைத்திருந்த புத்தகங்களை நானும் படிப்பேன். பிறகு மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. படித்துக் கொண்டிருக்கும்போது, டெல்லியிலிருந்து ‘சென்டிட்’ என்றொரு குழுவினர் வந்தனர். அவர்கள் ஆவணப்படங்களைத் திரையிட்டுக் காட்டினார்கள். அப்போது நான் ஆனந்த் பட்வர்த்தனின் ‘குட்டி ஜப்பானில் குழந்தைகள்’, ‘இன் த நேம் ஆஃப் காட்’ ஆகிய ஆவணப்படங்களைப் பார்த்தேன். மக்கள் பிரச்சினைகளை இத்தனை துணிவோடு களத்துக்கே சென்று படமாக்க முடியுமா என்று வியந்தேன்.” என்றுகூறும் இவர் பிறகு, அவர்கள் நடத்திய பயிற்சிப் பட்டறையில் 20 வாரங்கள் பங்கேற்றிருக்கிறார். அப்போது உலக அளவிலான பல ஆவணப் படங்களையும் பார்க்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்திருக்கிறது. அதன்பிறகுதான் “ ஆவணப்படம் வெறும் பதிவல்ல அதுவொரு போராட்ட ஆயுதம் என்பதைப் புரிந்துகொண்டேன்.” எனும் அமுதன் பிறகு தன் நண்பர்களோடு இணைந்து மறுபக்கம் திரைப்பட இயக்கத்தைத் தொடங்கியதாகச் சொல்கிறார். பிறகு தனது முதல் ஆவணப்படத்தை எப்போது எடுத்தார்?

“மதுரை மாநகராட்சி உறுப்பினர் லீலாவதியின் படுகொலை என்னை பாதித்தது. அவரது போராட்ட வாழ்க்கையினை 1997-ல் ‘லீலாவதி’எனும் ஆவணப் படமாக எடுத்தேன். 55 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்தை மக்கள் கூடும் இடங்களில் திரையிட்டோம். நம்மாலும் ஆவணப் படம் எடுக்க முடியுமென்கிற நம்பிக்கையை எனக்குத் தந்தது. 1998-ல் ‘தீவிரவாதிகள்’ எனும் ஆவணப் படத்தை எடுத்தேன். கொடைக்கானலுக்கு அருகே குண்டுப்பட்டியில் இலங்கை மலையக மக்கள் வசித்து வந்தார்கள். எந்த அடிப்படை வசதியும் இல்லாத காரணத்தால் தேர்தல் புறக்கணிப்பு செய்தார்கள் அக்கிராமத்து மக்கள். அவர்கள்மீது காவல்துறை நடத்திய வன்முறையை ஆவணப்படுத்தினேன்.” என்று தனது தொடர் முயற்சிகளை விவரித்துச் செல்கிறார்.

தமிழகத்தில் குறும்படங்களுக்குக் கிடைத்திருக்கும் கவனிப்பில் கொஞ்சமே ஆவணப் படத்திற்கு கிடைத்துள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக இருப்பவை ஆவணப் படங்கள் மட்டும்தான். குறும்படங்களைத் திரையிட்டு,பல்வேறு அமைப்புகள் பாராட்டும், பரிசுகளும் வழங்குவதைப் போல ஆவணப் படங்களுக்கும் வழங்கிட வேண்டும். அப்போதுதான் சமூக அக்கறைகொண்ட ஆவணப் படங்கள் நிறைய வெளிவர வாய்ப்பாக அமையும்.” எனும் அமுதனின்

ஏக்கமும் கவலையும் மறுதளிக்க முடியாதவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x