Last Updated : 14 Aug, 2015 11:09 AM

 

Published : 14 Aug 2015 11:09 AM
Last Updated : 14 Aug 2015 11:09 AM

தமிழ்நாட்டிலும் செல்வந்தன்!

பாகுபலியைத் தொடர்ந்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, தமிழ் வசூல் களத்தை மீண்டும் தீப்பிடிக்க வைத்துள்ளார். சென்னையில் வளர்ந்த பையனான மகேஷ் பாபுவின் புதிய படம் மந்துடு. செல்வந்தன் என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு எதிர்பாராத வசூலைச் செய்துவருவதாக பாக்ஸ் ஆபீஸ் வல்லுநர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.

தெலுங்குப் படங்கள் கொடுக்கும் அந்நியத்தன்மை இல்லாமல் தமிழ் ரசிகர்களையும் கவரும் வண்ணம் ‘செல்வந்தன்’ இருப்பதற்கு ஸ்ருதி ஹாசன், பூர்ணா, சுகன்யா, சித்தாரா என்று நமக்குத் தெரிந்த முகங்களும் முக்கியக் காரணம். தமிழ்ப் படம் போன்ற அனுபவத்தை ஏற்படுத்தும் துல்லியமான மொழிமாற்றம், சென்னையில் எடுக்கப்பட்ட சில காட்சிகள் பிரத்யேகமாக சேர்க்கப்பட்டிருப்பது, மசாலா தன்மை குறைந்த கதை, தேவி ஸ்ரீ பிரசாத்தின் தமிழ்த் தன்மை கொண்ட இசை என எல்லாம் படத்தில் கச்சிதமாய் அமைந்துவிட்டதால்தான் இந்த வரவேற்பு என்கிறார்கள்.

சென்னையில் ரசிகர்கள் விரும்பும் தமிழ் அல்லாத நடிகர்களில் அமீர் கானும், மகேஷ் பாபுவும் இருக்கிறார்கள். சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் மகேஷ் பாபுவின் படங்கள் குடும்பப் பார்வையாளர்களையும் எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழில் பாகுபலி அடைந்திருக்கும் பெரும் வெற்றிக்குப் பிறகு ‘செல்வந்தன்’ திரைப்படத்தின் வசூல் தெலுங்கு மொழிமாற்றுப் படச் சந்தையின் மீது மீண்டும் கவனத்தைக் குவித்துள்ளது. 1970கள் மற்றும் 80களில் தெலுங்கிலிருந்து வெளியாகித் தமிழ் ரசிகர்களையும் ஈர்த்த ஜகன்மோகினி, உதயம், பூ ஒன்று புயலானது, வைஜெயந்தி ஐபிஎஸ், இதுதாண்டா போலீஸ் போன்ற படங்களை மறக்கவே முடியாது.

நடிகர் மகேஷ் பாபுவுக்கும் தமிழ் சினிமாவுக்குமான உறவு புதிதல்ல. இவர் நடித்த ‘ஒக்கடு’ படம்தான் தமிழில் ‘கில்லி’யாக எடுக்கப்பட்டுப் பெரும் வெற்றி பெற்றது. இவர் நடித்த தெலுங்கு போக்கிரிதான், தமிழ் போக்கிரி ஆனது. மகேஷ் பாபு நடிக்கும் படங்களில் தமிழ் ரசிகர்களும் எதிர்பார்க்கும் அம்சங்கள் தொடர்ந்து இருப்பதே செல்வந்தன் வரை வெற்றிகள் தொடர்வதற்கான காரணமாகும்.

விஜய் நடித்த கத்தி படதின் கதையின் சாயல் ‘செல்வந்தன்’ படத்தின் கதையில் இருந்தாலும், கத்தியைவிட விறுவிறுப்பாக இருக்கிறது என்று சொல்கிறாகள் படம் பார்த்த ரசிகர்கள். மகேஷ் பாபுவின் யதார்த்தமான நடிப்பும், கொரடாலா சீனிவாசாவின் விறுவிறுப்பான திரைக்கதையும் ‘செல்வந்தன்’ படத்தின் பலமான அம்சங்கள். சென்னையில் வெளியான நான்கு நாட்களில் எதிர்பாராத வசூலைக் குவித்துள்ளான் செல்வந்தன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x