Last Updated : 17 Jan, 2020 10:44 AM

Published : 17 Jan 2020 10:44 AM
Last Updated : 17 Jan 2020 10:44 AM

​​​​​​​பாம்பே வெல்வட் 18: வில்லாதி வில்லன்கள்

பொங்கலுக்கு வெளியான ‘தர்பார்’ திரைப்படம் குறித்த விமர்சனங்களில் பலவும், ரஜினிக்கு நிகராக வில்லன் கதாபாத்திரத்தை வலுவாகக் கட்டமைக்கவில்லை என்கின்றன. கதாநாயகன் பிம்பத்துக்கான கனத்தைத் தீர்மானிப்பதில், வலிமையான வில்லன் எப்போதும் அவசியமாகிறான். அந்த வலுவான வில்லனைக் கண்டடைவதிலும் பாலிவுட் சினிமா பல சுவடுகளைக் கடந்திருக்கிறது.

கடந்த எழுபதாண்டுகளின் பாலிவுட் வில்லன்களை உற்றுக் கவனித்தால், உங்களால் இந்தியாவின் அரசியல் சமூக வரலாற்றை எழுதிவிட முடியும்’ என்பார் பாலிவுட் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர். அந்த அளவுக்குச் சமூகத்தின் அசைவிலிருந்தே பாலிவுட் வில்லன்களையும் அடையாளம் காண வேண்டியதாகிறது.

நிலச்சுவான்தார் வில்லன்கள்

தேச விடுதலைக்குச் சற்று முன்னும் பின்னுமாக வெளியான படங்கள் பலவற்றிலும், நாயகன் கிராமத்து ஏழையாகவும், வில்லன் நிலவுடைமையாளராகவோ கந்துவட்டிக்காரராகவோ இருப்பார். வெற்றித் திரைப்படமான ‘மதர் இந்தியா’வின் வில்லன் ‘கன்னையாலால் சதுர்வேதி’, ஏழ்மையில் உழலும் இல்லத் தரசிகளைக் குழந்தைகளின் வயிற்றுப் பசியைப் பொறியாக்கி வேட்டையாடுவார். திரையரங்குகளில் கொந்தளித்த தாய்மார்கள், திரையை நோக்கி சாபமிடும் வரலாறு இங்கே தொடங்கியது. நிலச்சுவான்தார் வில்லன்களின் வெவ்வேறு சாயல்கள், திலீப் குமாரின் ‘நயா தார்’, ராஜ்கபூரின் ‘ஆவாரா’ மற்றும் ‘420’ படங்களில் வாயிலாக மேலும் பிரபலமாயின.

பிற்பாடு இந்த வில்லன்களே, திலிப்குமாரின் ‘மதுமதி’ (1958), ‘ராம் ஔர் ஷியாம்’ ( 1967) திரைப் படங்களில் கையில் சாட்டை அல்லது வேட்டைத் துப்பாக்கியுடன் வில்லத்தனத்தை விரிவு செய்தார்கள். இரண்டிலும் வில்லனாக தோன்றிய நடிகர் பிரான், மிடுக்கான உடை, மிதப்பான பார்வை என எழுபதுகளின் வில்லத்தனத்துக்கு வித்தியாசம் சேர்த்தார். தொண்ணூறுகளில் இவர் குணச்சித்திரத்துக்குத் தாவினாலும், அமிதாப்புக்கு எதிர் நின்ற வில்லனாகவே இன்றும் நினைவுகூரப்படுகிறார். அமிதாப்புக்கு பிரான் என்றால் ராஜேஷ் கன்னாவுக்கு நடிகர் பிரேம் சோப்ரா அதகளம் செய்திருப்பார்.

கொள்ளைக்கார வில்லன்கள்

சம்பல் பள்ளத்தாக்குச் சம்பவங்களால் பாலிவுட்டில் கொள்ளையர்களை வில்லன் களாக்கும் போக்கு தொடங்கியது 1955-ல். இதே ஆண்டில் பிரபலக் கொள்ளையன் மான் சிங் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டது, கொள்ளையர்களை வினோபா பாவே சரணடைய வைத்தது என அன்றாடச் செய்தி களைக் கொள்ளையர்கள் ஆக்கிர மித்ததை பாலிவுட் கதைகளும் பின்தொடர்ந்தன.

இந்த வகையில் பிரபலக் கொள்ளையர் பாணியிலான சினிமா வில்லன்களும் திரையில் உதித்தார்கள். ‘மேரா கான் மேரா தேஷ்’ (1971) திரைப்படத்தில் வினோத் கன்னாவின் வில்லனாக அறிமுகமானர் அம்ஜத் கான். ‘ஷோலே’ படத்தில் கபார் சிங்காக, ‘முகாதர் கா சிக்கந்தர்’ படத்தில் திலாவர் என்ற வில்லனாக என கொடூர வில்லன் கதாபாத்திரங்களைக் காலம் கடந்தும் வாழச் செய்தார்.

கடத்தல்கார வில்லன்கள்

எழுபதுகளில் கோபக்காரக் கதாநாயகன்களின் சினத்தைச் சீண்டும் வில்லன்கள் பெரும்பாலும் கடத்தல்காரர்களாய் இருந்தார்கள். கையிருப்புத் தங்கத்தைக் கட்டுப்படுத்தும் சட்டம் (1968) தீவிரமானதில் பெரு வர்த்தகர்கள் போர்வையில் கடத்தல்காரர்கள் அட்டூழியம் செய்த காலமது. அமிதாப் பச்சனுக்கு வாழ்வு தந்த ‘ஸாஞ்சீர்’ தொடங்கி சத்ருகன் சின்காவின் முன்னொட்டாக ‘ஷாட் கன்’ சேர்த்த ‘காளிச்சரண்’ (1976) வரை ஏராளமான எழுபதுகளின் வில்லன்கள் கடத்தல்காரர்களாகவே இருந்தார்கள். ஒற்றைக் கரத்தை ‘கத்தி’ கரமாக விசிறியபடி வில்லத்தனம் செய்த அஜித் கான், வசனம் உச்சரிக்கும் விதமே அலாதியாக இருக்கும்.

அவர் காலத்தின் மற்றொரு வில்லனான அண்ணன் மதன் பூரியை அடியொற்றி, திரையுலகில் நுழைந்த தம்பி அம்ரிஷ் பூரி வில்லத்தனத்தில் புதிய சகாப்தம் படைத்தார். தமிழ் உட்பட பெரும்பாலான இந்திய மொழிகளிலும் வில்லத்தனம் செய்த அம்ரிஷ், ஸ்பீல்பெர்க்கின் ‘இண்டியனா ஜோன்ஸ்’ திரைப்படம் மூலம் ஹாலிவுட்டிலும் தடம் பதித்தார். இயக்குநர் சுபாஷ் கைய் திரைப்படங்கள் ஒவ்வொன்றிலும் தனது வில்லத்தனத்தை மெருகேற்றிக் கொண்ட அம்ரிஷ் பூரியே, இன்றைக்கும் இந்தி சினிமாவின் வில்லனாக தென்னிந்திய ரசிகர்களின் நினைவிலாடுகிறார்.

அரசியல் வில்லன்கள்

ஊழல், எதேச்சாதிகாரம் என அரசியல்வாதிகளின் சாயம் வெளுத்தபோது, கொள்ளை, கடத்தல்காரர்களைவிடப் பெரும் வில்லன்களாகக் கபட அரசியலாளர்கள் ஆகிப்போனர்கள். கடத்தல்-கொள்ளையர் மீது அனுதாபம் பிறக்கும் அளவுக்கு அரசியல்வாதிகளின் அக்கிரமங்கள் அதிகரித்தன. அமிதாப் கடத்தல்கார ‘விஜய் வர்மா’வாகத் தோன்றிய ‘தீவார்’ திரைப்படம், வேலைவாய்ப்பின்மை மற்றும் அதிகரிக்கும் நகர்ப்புறக் குடியேற்றத்தின் பாதிப்புகள் எனக் கோபக்கார இளைஞர்களுக்குக் களம் தந்தன.

தீவார்’ வெள்ளி விழா கண்டபோது நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனமானது. நெருக்கடி காலத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட காவல்துறையின் அடக்குமுறை மீதும் பொதுமக்களின் வெறுப்பு வளர்ந்தது. அதன் பின்னரான திரைப்படங்களில் வெள்ளையும் சொள்ளையுமாய் அரசியல்வாதிகளின் அட்டூழியமும், விரைப்பான சீருடை அணிந்த போலீஸ் வில்லன்களுமாய் வலம்வரத் தொடங்கினர்.

மேரே அப்னே’ (1971) திரைப்படத்தில் வேலை கிடைக்காத இளைஞர்களைத் தங்கள் அரசியல் நோக்கங்களுக்காகச் சீரழித்த அரசியல்வாதிகளும், ‘ஆந்தி’ (1975) திரைப்படத்தில் தேர்தலில் ஜெயிப்பதற்காக ஆகக் கொடுமையான அக்கிரமங்களை நடத்தும் அரசியல்வாதிகளும் வில்லன்களாகி ரசிகர்களை மிரட்டினர். இந்த அரசியல்வாதிகளை அமிதாப் போன்ற கோபக்கார இளைஞர்கள் அரசியல் வழியிலோ, ஆயுதம் ஏந்தியோ, முறையே ‘கூலி’ (1983) , ‘இன்குலாப்’ (1984) திரைப்படங்களில் அழித்தொழித்தார்கள்.

பாலிவுட்டின் போக்கை நாடிபிடித்த ராஜேஷ் கன்னாவும் திரையில் அரசியல் அவதாரம் எடுத்தார். தெலுங்கில் தாசரி நாராயணராவ் இயக்கிய ‘எம்.எல்.., ஏடுகொண்டலு’ திரைப்படத்தின் மறு ஆக்கமாய், ‘ஆஜ் கா எம்.எல்.ஏ ராம் அவ்தார்’ திரைப்படம் ராஜேஷ்கன்னாவைச் சரிவிலிருந்து மீட்ட வெற்றிப்படமானது. திரைக்கு அப்பால் ராஜேஷ் கன்னாவுக்கு அரசியல் ஆசை துளிர்க்கவும் காரணமானது.

நிழலுலக வில்லன்கள்

பெருவர்த்தகர்கள்-கடத்தல்காரர்கள்-கொள்ளைக்காரர்கள்-அழுக்கு அரசியல்வாதிகள்-கள்ள போலீசார் என அதுவரையிலான வில்லன்கள் கூட்டணியில், நிழலுலக சாம்ராஜ்ஜியத்தின் அவலங்களைத் தோலுரிக்கும் 90-களின் வில்லன்கள் உருவானார்கள். எண்பதுகளில் மராட்டிய மண்ணுக்கு உணவளித்து வந்த ஜவுளித் தொழிற்சாலைகள் பலவும் நொடித்தபோது சுமார் இரண்டரை லட்சம் தொழிலாளர்கள் வீதிக்கு வந்தனர். இவர்களால் நிழலுலக தாதாக்கள் மத்தியில் மக்களுக்கு விபரீத ஆர்வமும் ஆதரவும் பெருகின. தாவூத் இப்ராஹிம், சோட்டா ராஜன் போன்ற நிஜமான நிழலுலக தாதாக்களின் பாதிப்பு திரையிலும் ஊடுருவியது.

எல்லை தாண்டிய வில்லன்கள்

நிழலுலக தாதாக்கள் கடல் தாண்டிய கடத்தல்களில் தீவிரமாவதற்கு முன்பே அரசியலில் எல்லை தாண்டிய புகார்கள் எழுந்திருந்தன. தன்னைக் குறிவைத்த அதிருப்தி அலைகளின் ஆழத்தில் வெளிநாட்டுக் கரம் இருப்பதாக இந்திரா காந்தி சந்தேகப்பட்டார். உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மத்தியில் இந்த வெளிநாட்டுப் பின்னணி ஊடுருவி இருப்பதாகக் குற்றம்சாட்டவும் செய்தார். அதன் பின்னர் அமெரிக்காவின் சிஐஏ, ரஷ்யாவின் கேஜிபி என ‘பனிப்போர் பெரியண்ணன்’களின் உளவு நிறுவனங்களை மையமாகக் கொண்ட சர்வதேசத் திரைப்படங்களின் பாதிப்பு பாலிவுட் வில்லன்கள் மத்தியிலும் பிரதிபலித்தது. பாகிஸ்தான் உடனான போர்களுக்குப் பின்னர் பாலிவுட் வில்லன் கூடாரத்தில் பாகிஸ்தானே அதிகம் ஆக்கிரமித்தது.

அழகு வில்லிகள்

எழுபதுகளின் சினிமா வில்லன்களை மோசமாகச் சித்தரிக்க மதுவும், பலாத்காரக் காட்சிகளும் திணிக்கப்பட்டன. கூடவே அரைகுறை ஆடைகளுடனான திரையை ஆக்கிரமித்த சிருங்கார நடனமணிகளின் கவர்ச்சி ஆட்டங்களுக்கெனத் தனி ரசிகர்கள் உருவானார்கள். பிந்து, பத்மா கன்னா, அருணா இரானி, ஜெய்ஸ்ரீ என ஏராளமானோர் தங்கள் அழகு மற்றும் நடனத்தால் ரசிகர்களைச் சுண்டியிழுத்தாலும், அவர்களை ஓரங்கட்டி நாற்பதுகளில் தொடங்கி தனி ராஜ்ஜியம் நடத்தினார் ஹெலன் ரிச்சர்ட்சன்.
பிந்து, பத்மா போன்றவர்களின் வில்லனுக்கு உதவும் சில்லறை வில்லத்தனங்களைச் செய்தனர். இவற்றுக்கு அப்பால் பெண்களின் பெரும் வில்லத்தனமாக, வளர்ப்புத் தாய், மாமியார் வேடங்கள் சலனப்படக் காலத்திலிருந்தே வழங்கி வருகின்றன. எண்பதுகளின் இறுதியில் தாராளமயமாக்கலில் குதித்த கதாநாயகிகள், கவர்ச்சித் தாரகைகளின் இருப்பைக் கபளீகரம் செய்தனர்.

எதிர்நாயகன் என்பது வில்லத் தனத்தில் தனி பாணியானது. ஷாருக்கான், சஞ்சய்தத் போன்றோரால் பிரபலமான எதிர்நாயகன் கதாபாத்திரத்துக்கு முன்னோடி, அமிதாப் பச்சனிடமிருந்தே தொடங்கியது. ‘பர்வானா’ (1971) என்ற உளவியல் திரில்லர் திரைப்படத்தில் காதலனே கொலையாளியாகும் எதிர்மறைத் தோற்றத்தில் அமிதாப் நடித்திருந்தார். ஏனோ இந்தப் படம் வித்தியாசமான கதையைவிட அதன் பாடல்களுக்காகவே அப்போது பிரபலமானது.

- எஸ்.எஸ்.லெனின் | தொடர்புக்கு: leninsuman4k@gmail.com


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x