Last Updated : 08 May, 2015 12:13 PM

 

Published : 08 May 2015 12:13 PM
Last Updated : 08 May 2015 12:13 PM

ஹாலிவுட் ஷோ: தீராத திருப்பங்கள்- ஐ வில் சீ யூ இன் மை ட்ரீம்ஸ்

கரோல் ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியை. அவர் புகழ்பெற்ற பாடகியும்கூட. 20 ஆண்டுகளுக்கு முன்பே கணவனை இழந்து, வயது முதிர்ந்து பின்னர் தனது முதுமையைக் கழிக்கும் பயணத் துணையாக ஒரு நாயை வளர்க்கிறார். இது தவிர்த்த அவரது பொழுதுபோக்கு என்று பார்த்தால் அவருடைய மூன்று தோழிகளுடன் சீட்டு விளையாடுவது, மது அருந்துவது, தோட்ட வேலைகளில் நேரத்தைக் கழிப்பது ஆகியவையே.

பெரிய திருப்பங்களற்ற அன்றாட வாழ்வில் எந்த மாறுதலுமற்ற வாழ்க்கையை நிதானமாக ரசித்து வாழ்கிறார் இவர். மெதுவாக நகரும் வாழ்க்கைப் பயணத்தில் திடுக்கிடும் திருப்பமாக அவரது செல்ல நாய் இறந்துவிடுகிறது. அவரை வெறுமை சூழ்கிறது, தனிமையெனும் வெற்றிடத்தில் அகப்பட்டுக்கொள்கிறார்.

அப்போது அவருக்கு அறிமுகமாகிறார் நீச்சல் குளத்தைப் பராமரிக்கும் மனிதர் ஒருவர். அவருடைய நட்பு அவருக்கு ஆசுவாசமளிக்கிறது. அவரை உணவு உண்ண அழைக்கிறார். வாழ்வில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் வசந்தம் வீசுகிறது. இருவருக்குமான அன்னியோன்யமான உறவு வளர்கிறது. தோழிகளுடன் உரையாடல் நிகழ்கிறது. எந்த வயதிலும் புதிய உறவு தொடரும் சாத்தியங்களைக் கொண்டது வாழ்க்கை என்னும் சேதியைத் தாங்கிய இந்தப் பயணமே ஐ வில் சீ யூ இன் மை ட்ரீம்ஸ் என்னும் அமெரிக்கப் படம்.

மே 22 அன்று திரைக்கு வரவிருக்கிறது இப்படம். கரோல் வேடமேற்றிருப்பவர் ப்ளைத் டன்னர் (Blythe Danner). நாடக அனுபவம் கொண்டவர். பெட்ரயல் (Betrayal) என்னும் தொலைக்காட்சித் தொடருக்காக டோனி விருது பெற்றவர். பல தொலைக்காட்சிகளில் நடித்துப் பரவலான அறிமுகம் பெற்ற இவர் மார்லன் ப்ராண்டோவின் தொடக்ககால வெற்றிப்படமான ’த ஸ்ட்ரீட் கார் நேம்டு டிசையர் ’ என்னும் படத்தின் நாயகியாக பெரும் அளவில் ரசிகர்களால் நினைவுகூரப்படுபவர். விதவை வேடத்தில் இவரது நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்திழுக்கக்கூடியது.

வாழ்வின் சுகமான தருணங்களை மனத்தில் அசைபோட விரும்பும் ரசிகர்களை எளிதில் ஈர்த்துவிடும் படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள். அதை உறுதி செய்வதுபோல மதிப்பு மிக்க சர்வதேச திரைவிழாக்களில் ஒன்றான ’சண்டென்ஸில்’ திரையிடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x