Last Updated : 20 Feb, 2015 09:30 AM

 

Published : 20 Feb 2015 09:30 AM
Last Updated : 20 Feb 2015 09:30 AM

பட்டிமன்றத் தமிழில் வெளுத்துக் கட்டுவேன்!

கொஞ்சும் தமிழ், கெஞ்சல் பார்வை என்று அசரவைக்கும் அசல் தமிழ்ப் பெண் ஒருவர் வெற்றிக் கதாநாயகி ஆகியிருக்கிறார். அவர் பக்கத்து வீட்டுப் பெண்ணின் சாயலில் வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ். ‘இடம் பொருள் ஏவல்', ‘காக்காமுட்டை', ‘குற்றமும் தண்டனையும்', ‘தீபாவளி துப்பாக்கி' என்று நான்கு படங்களில் பரபரப்பாக இருப்பவரைச் சந்தித்தோம்.

‘இடம் பொருள் ஏவல்' படத்துல என்ன பண்ணியிருக்கீங்க?

பட்டிமன்றப் பேச்சாளர் கலைச்செல்வியாக நடிக்கிறேன். தூய தமிழ்ல, வேகம், தெளிவு, துல்லியம்னு பேசி பட்டிமன்றப் பேச்சாளராவே மாறியிருக்கேன். நல்லா தமிழ் பேசத் தெரியும் என்பதால்தான் இந்தக் கதாபாத்திரம் எனக்குக் கிடைத்தது.

இதற்காக ஏதாவது பயிற்சி எடுத்துக்கிட்டீங்களா?

ஆமாம். தேர்வுக்குப் படிக்கிற மாதிரி தினமும் காலையில எழுந்து சத்தமா பேசிப் பழக ஆரம்பிச்சேன். நான் நல்லா பயிற்சி எடுத்ததால சில டேக்லயே காட்சிகள் ஓ.கே. ஆச்சு. என்னோட அறிமுகக் காட்சியே பட்டிமன்றத்துலதான்.

இரண்டு கதாநாயகிகள் படத்திலேயே தொடர்ந்து நடிப்பது வருத்தம் இல்லையா?

எத்தனை ஹீரோயின்கள் இருந்தாலும் எனக்குப் பிரச்சினை இல்லை. அதுல என் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கா? ரசிகர்கள் எந்த அளவுக்கு அதை ரசிப்பாங்கன்னுதான் பார்ப்பேன். சவாலான கதாபாத்திரம்னா மறுக்காம ஓ.கே சொல்லிடுவேன். அப்படி எனக்குப் பிடிச்ச மாதிரி கிடைச்ச கதாபாத்திரம்தான் கலைச்செல்வி.

ஒவ்வொரு படத்துலயும் வித்தியாசம் காட்டுறீங்க போல?

'பண்ணையாரும் பத்மினியும்' பண்ணும்போது 'காக்கா முட்டை' வாய்ப்பு வந்தது. ‘நல்ல படம். நடிங்க'ன்னு விஜய் சேதுபதி சொன்னார். கதையும் பிடிச்சது. உடனே நடிக்க சம்மதம் சொன்னேன். இந்தக் கதாபாத்திரம் ரொம்ப பெருசா பேசப்படும். நிச்சயம் என் கேரக்டர் உங்களை அதிரவைக்கும். 'காக்கா முட்டை' மணிகண்டனோட அடுத்த படம் 'குற்றமும் தண்டனையும்'. விதார்த் தயாரிச்சு, ஹீரோவா நடிக்கிறார். பாட்டு, சண்டைக் காட்சிகள் இல்லாம வித்தியாசமான படமா இருக்கும். 'தீபாவளி துப்பாக்கி' மா.கா.பா.ஆனந்த் ஹீரோவா நடிக்கிற படம். அவருக்கு ஜோடியா நடிக்கிறேன். காமெடிப் படம்தான். ஆனா, அதுல புத்திசாலிப் பெண்ணாக நடிக்கிறேன். இயற்கை விவசாயம் அவசியம் பற்றிப் பேசும் அற்புதமான கேரக்டர்.

தனுஷ், சிம்பு, ஆர்யா, விஷால்னு நடிக்க ஆசையில்லையா?

நடிக்கணும்னு ஆசைதான். அதற்குள் நல்ல நடிகையா என்னை நான் நிரூபிக்கணும். தனுஷ், விஷாலுடன் நடிக்க ஆசைப்பட்டாலும் வாய்ப்பு அமையணும். அந்த வாய்ப்புக்காக காத்துக்கிட்டு இருக்கேன்.

குடும்பத்துப் பெண், கிளாமர் கேர்ள் இரண்டில் எதுக்கு முதலில் ஓ.கே சொல்வீங்க?

என்னை குடும்பப்பாங்கா பார்த்து பழக்கப்பட்ட ரசிகர்கள் இது நல்லா இருக்குன்னு சொல்றாங்க. நான் கிளாமர் கேரக்டர் பண்ணுவேன். ஆனா, அது அதீதமா மாறிடக் கூடாதுன்னு கவனமா இருக்கேன். சிம்ரன் ஜோதிகா மாதிரி உறுத்தாம இருக்கும் அளவுக்கு கிளாமரா நடிக்கத் தயாரா இருக்கேன்.

தமிழ் சினிமாவில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுறதா நினைக்கிறீங்களா?

ஒரு பாட்டுக்கோ, சின்ன காட்சிக்கோ, கிளாமருக்கோ மட்டும் சில படங்கள்ல ஹீரோயின்களைப் பயன்படுத்துறது வருத்தமாதான் இருக்கு. ஆனா, எனக்கு நடிக்க முக்கியத்துவம் இருக்குற நல்ல படங்கள் கிடைக்கின்றன. அந்த அளவில் நான் அதிர்ஷ்டசாலி.

எந்த மாதிரி கதாபாத்திரங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறீர்கள்?

காமெடி கலந்து நடிக்கணும்னு விரும்புறேன். நல்ல கேரக்டர்னா வில்லியா நடிக்கவும் தயார். நான் டான்ஸர். அப்படி ஒரு கதைக்களத்துல நடிக்க ரொம்ப ஆர்வமா இருக்கேன். பேய்ப் படம்னா ரொம்ப பிடிக்கும். பேய்ப் படத்துல நடிக்கவும் ஆசை இருக்கு.

சினிமாவுக்கு வந்ததற்காக வருத்தப்பட்டதுண்டா?

நல்ல சரியான பாதையில இன்னும் போகலையேன்னு நினைச்ச போது வருத்தப்பட்டிருக்கேன். அப்புறம் படங்கள்ல நடிக்கும்போது அதை மறந்திடுவேன். இது எல்லார் வாழ்க்கையிலும் இயல்பா நடக்கிறதுதான்.

சக நடிகைகளில் உங்களுக்கு யாரைப் பிடிக்கும்?

அஞ்சலி, சமந்தா. நடிப்பு, கிளாமர்னு அஞ்சலி ரெண்டுலயும் ஆச்சரியப்படுத்துறாங்க. சமந்தா நடிப்பு பிடிக்கும்.

உங்களுடன் நடித்த ஹீரோக்கள் பத்தி சொல்லுங்களேன்?

விஜய் சேதுபதி நல்ல நண்பர். ஆலோசனைகள் சொல்வார். தினேஷ் அட்டகத்தியில பார்த்தமாதிரிதான் இப்பவும் பழகுறார். விஷ்ணு எப்பவும் சிரிச்ச முகமா இருப்பார். மா.கா.பா ஆனந்த் செமயா கலாய்ப்பார். ஜாலியா பேசுவார். விதார்த் ரொம்ப மெச்சூரிட்டியா நடந்துக்குவார். எல்லோரும் எனது நலம்விரும்பிகள். ஆனா, இங்கே கொஞ்சம் நல்லா பேசினா கூட ஏதாவது செய்தியைக் கிளப்பிடறாங்க. அதனால கவனமா இருக்கேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x