

சொல் வன்மையால் ஒருவரை வெல்லவும் முடியும், கொல்லவும் முடியும். எனவே நாவடக்கம் மிகவும் தேவை. அதனால்தான் வள்ளுவர் ‘யாகாவாராயினும் நா காக்க’ என்றார். அதே தலைப்பில் அரவான் புகழ் ஆதி, காத்திருந்து நடித்திருக்கும் படம் வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது.
ஒரு சூழலில் பேசப்படும் தவறான பேச்சு எவ்வளவுதூரம் கொடிய விளைவுகளுக்கு இட்டுச் செல்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதை என்கிறார் இயக்குநர் சத்திய பிரபாஸ். கதையை இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்கள் என்றால் “கல்லூரியில் கடைசி ஆண்டில் படிக்கும் நான்கு இளைஞர்கள் டிசம்பர் 31-ல் புத்தாண்டு கொண்டாடத் தொடங்குகிறார்கள். அப்போது அவர்கள் பேசும் பேச்சு அவர்களைப் படுத்தும்பாடுதான் கதைப்போக்கு” என்கிறார்.
இதில் ஆதி ஆக்ஷன் நாயகன், அவருடைய தந்தை படத்தின் தயாரிப்பாளர். ஆதியின் அண்ணன்தான் இந்த சத்திய பிரபாஸ். இவர், அமெரிக்காவில் திரைப்படக் கல்வி முடித்தவராம். ஆதியின் அப்பாவான ரவிராஜா பினி செட்டி, தெலுங்கில் சுமார் அறுபது படங்களை இயக்கியிருப்பவர். திரைக்கதையில் வில்லங்கத்துக்கு விதை போடும் ஆதியின் நண்பர்களாக கார்த்திக், ஷ்யாம், சித்தார்த் என மூன்று புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். நாயகியாக நிக்கி கல்ரானி தமிழில் அறிமுகமாகிறார். இவர் இதற்கு முன் மலையாளத்தில் பல வெற்றிப் படங்களில் நடித்திருப்பவர். விஜயுடன் ‘ஷாஜகான்’ படத்தின் அவருக்கு ஜோடியாக நடித்த நாயகி ரிச்சா பலோட் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இதில் முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருக்கிறாராம். இவர்களோடு இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தியும் நடித்திருக்கிறார். மிதுன் நடிக்கும் முதல் நேரடித் தமிழ்ப்படம் இதுதானாம். சென்னை, கோவா, ஹைதராபாத், பாண்டிச்சேரி பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார்கள்.
அண்ணன் இயக்கத்தில் நடித்த அனுபவம் பற்றி ஆதியிடம் கேட்டபோது “இது எனக்கு ஆறாவது படம். நான் படங்களைத் தேர்ந்தெடுத்தே நடிப்பவன். இது வழக்கமான ஹீரோ ஹீரோயின், வில்லன் ஃபார்முலா கதையல்ல. கண்முன் காண்கிற யதார்த்த மனிதர்களின் கதை. மிகைப்படுத்தலோ போலியான பாசாங்கோ இருக்காது. தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல இயக்குநர் கிடைக்கப்போகிறார்” என்கிறார். அப்படியா என்று இயக்குநரின் பக்கம் திரும்பினால் “ இது ஒரு த்ரில்லர் படம் என்றாலும் ரொமாண்டிக் காமெடி, லவ், ஃப்ரண்ட்ஷிப் எல்லாமே இருக்கும். படத்தைப் பற்றி நானே பெரிதாகப் பேசக் கூடாது. ஆனால் படம் பார்த்தவர்கள் இதைப் பத்தோடு பதினொன்றாக நிச்சயமாக ஒதுக்கிவிட முடியாத படமாக இருக்கும்” என்று நெஞ்சை நிமிர்த்திப் பேசுகிறார்.