Published : 21 Feb 2014 12:00 AM
Last Updated : 21 Feb 2014 12:00 AM

அமையுமா ஆவணக் காப்பகம்?

கேமரா கவிஞர் பாலு மகேந்திராவின் மறைவு திரையுலகைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அதேநேரம் 100 ஆண்டுகளை நிறைவுசெய்துவிட்ட தமிழ்த் திரைக்கு ஒரு ‘திரைப்பட ஆவணக் காப்பகம்’ இல்லையே என்று கடந்த ஐந்து ஆண்டுகளாக உரக்கச் சொல்லிவந்த அந்தப் படைப்பாளியின் கனவுக்கு உயிரூட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்து தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்திய வீடு, சந்தியா ராகம் உள்ளிட்ட பல படங்களின் நெகட்டிவ்கள் அழிந்துபோய்விட்டன. பாலு மகேந்திரா இதை வேதனையோடு சுட்டிக்காட்டியிருந்தார். “70க்குப் பிறகு நான் இயக்கிய படங்களே இனி பிரதியெடுக்க முடியாதபடி அழிந்துபோய்விட்டன என்றால் இவற்றிற்கு முன் வெளிவந்த நமது தமிழ்ப் படங்களின் கதி என்ன?” என்று வேதனையோடு கேட்டிருந்தார். மேலும் திரைப்பட ஆவணக் காப்பகம் எப்படி அமைய வேண்டும் என்பதைப் பற்றியும் விரிவாகக் கூறியிருந்தார்.

ஏன் வேண்டும் ஆவணக் காப்பகம்?

காலம்தோறும் தமிழ்த் திரைப்படங்களைப் பாதுகாத்து வைப்பதன் மூலம் என்ன லாபம்? இந்தக் குப்பைகளைப் பாதுகாத்துவேறு வைக்கவேண்டுமா என்று கேட்பவர்களும் இருக்கவே செய்வார்கள். ஆனால் மொத்தத் திரைப்படங்களும் வரலாற்றின் ஒருபகுதி என்பதை நாம் மறந்துவிடக் கூடாது என்கிறார் தியேட்டர் லேப் நடிப்பு பட்டறையை நடத்தி வரும் ஜெயாராவ். “திரைப்படத்தில் இடம்பெறும் கதை, அதில் நடிக்கும் கலைஞர்களின் நடை உடை, பாவனைகள், பேச்சு மொழி, விதவிதமான கதாபாத்திரங்கள் ஆகியவற்றின் மூலம் ஒரு தலைமுறையின் வாழ்வியலை அறிய முடியும். அது படம்பிடிக்கப்பட்ட பின்புலங்கள் மூலம், அன்று நம் வாழ்விடமும் தெருக்களும் எப்படி இருந்தன என்பதையும், அசையும் அசையா பொருட்கள் எப்படி இருந்தன, நாம் பயன்படுத்தியது என்ன, இன்று நாம் எங்கே நிற்கிறோம் , எதையெல்லாம் பெற்றிருக்கிறோம், எதையெல்லாம் இழந்திருக்கிறோம் என்பனவற்றையெல்லாம் அறிய முடியும். மிக முக்கியமாக ஒரு திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட இசை, நடனம், கவிதை, பாடல், நடிப்பு முறை, அரங்க அமைப்பு மூலம் தமிழ்க் கலைகளின் போக்கின் ஒரு பகுதியையும் நாம் ஆவணமாக எடுத்துக்கொள்ள முடியும்” என்கிறார் அவர். மேலும் உள்ளடக்க ரீதியாகவும் - காட்சிமொழி ரீதியாகவும் எது சரி - எது சரியல்ல என்பதை ஆராய்ந்து படிக்க விரும்பும் திரைப்படக் கல்வி மாணவர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் தலைமுறைகள் தோறும் தலைசிறந்த ஆசானாக இருக்கப்போவது திரைப்பட ஆவணக்காப்பகம்தான் என்கிறார் ஜெயாராவ்.

மூடப்படும் லேபரேட்டரிகள்

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை திரைப்படங்களின் நெகட்டிவ்களைப் பாதுகாத்துவரும் பணியை ஆவணக் காப்பகம் போல சினிமா லேபரேட்டரிகள் செய்துவந்தன. ஆனால் இன்று பிலிம் ரோல் பயன்படுத்துவது குறைந்து, டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்துவிட்டதால், லேப் தொழில் முற்றாக அழிந்துவிட்டது. இதனால் லேப்கள் வரிசையாக மூடப்பட்டுவருகின்றன. “முன்பெல்லாம் ஒரு படத்தின் நெகட்டீவுக்கு ஆயுள் 10 ஆண்டுகள். ஏசி அறையில் வைத்து பாதுகாத்தால் 15 ஆண்டுகள் தாக்குப்பிடிக்கும். அதேநேரம் நெகட்டீவ்களை மூன்று மாதத்துக்கு ஒருமுறை வெளியே எடுத்து ’வைண்டிங்’ ரீவைண்டிங்’ பண்ண வேண்டும். அப்போதுதான் நெகட்டிவ்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும். மேலும் ஒரு படத்தின் பிக்சர் நெகட்டிவ், சவுண்ட் நெகட்டிவ் என்று மொத்தம் 28 ஆயிரம் அடியைப் பாதுகாக்க வேண்டும். இதற்கான இட வசதியும், பிலிமைப் பாதிக்காத தட்பவெட்ப நிலையும் தேவை.

ஆனால் இன்று ஒரு படத்தின் எல்லா விதமான உரிமைகளையும் விற்ற பிறகு தங்கள் படத்தின் நெகட்டிவ்களை அநாதைகள்போல விட்டுவிட்டுப் போய்விடுகிறார்கள் பல தயாரிப்பாளர்கள். அவர்களைக் குறை கூறவும் முடியாது. எந்த வருமானமும் இல்லாமல் நெகட்டிவ்களைக் கையிலிருந்து பணம்போட்டுப் பாதுகாத்துவர வேண்டும் என்றால் அது இயலாது. இன்று நமக்குக் கிடைத்திருக்கும் ஒரே வரம் டிஜிட்டல் தொழில்நுட்பம். அதைப் பயன்படுத்தி ஆண்டுதோறும் வேறொரு ஹார்ட் டிஸ்கில் படத்தின் மாஸ்டர் டிஜிட்டல் பிரதியை மாற்றி ஆவணப்படுத்திவரலாம். இதற்கு ஆகும் செலவு குறைவுதான். ஆனால் தனித்தனியாக இப்படி ஆவணப்படுத்துவதால் ஒருபயனும் இல்லை. எல்லாம் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்கிறார் பிரசாத் குழுமத்தின் வர்த்தகத் தலைவரான கே. ஆர். சுப்ரமணியம்.

வரம் தரும் டிஜிட்டல் நுட்பம்

மத்திய அரசு நடத்தி வரும் திரைப்பட ஆவணக் காப்பகம் மகாராஷ்டிர மாநிலம் பூனாவில் இயங்குகிறது. இங்கே பாதுகாக்கப்படும் தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. வட இந்தியாவைப் பொருத்தவரை இந்திய சினிமா என்றால் இந்தி சினிமா மட்டும்தான் என்ற மனநிலை இருக்கிறது. இதனால்தான் நமக்கென்று தனியாக திரைப்பட ஆவணக் காப்பகம் வேண்டும் என்று பாலுமகேந்திரா வலியுறுத்தி வந்தார்.

“திரைப்பட ஆவணக் காப்பகம் என்று வரும்போது திரைப்படங்களை மட்டும் இதில் பாதுகாத்தால் போதாது, குறும்படங்கள், ஆவணப்படங்கள், அரசின் செய்திப்பிரிவுப் படங்களும் நமது வரலாறுதான். எனவே அரசுதான் இதற்கான இடத்தையும், நிதியையும் தர வேண்டும். அரசு ஆவன செய்தால் நானும் இயக்குநர் ஜனநாதனும் உழைப்பைக் கொட்ட தயாராக இருக்கிறோம். அழியும் நிலையில் இருக்கும் படங்களின் நெகட்டீவ்களை டிஜிட்டல் ரெஸ்டோரெஷன் மூலம் மீட்டு, டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்த போதிய இடம், கட்டிடவசதி, சாதனங்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள், அவர்களுக்கான வெளிநாட்டுப் பயிற்சி என முறையாகத் திட்டமிட்டு உடனே செயல்படுத்தலாம். இதற்காக அரசு எந்த நேரத்தில் அழைத்தாலும் நாங்கள் முன்நிற்கத் தயார்” என்கிறார் பெப்சி சங்கத்தின் தலைவராக இருக்கும் இயக்குநர் அமீர்.

யார் பொறுப்பு?

“திரைப்பட ஆவணக் காப்பகம் அமைக்க அரசின் கையை எதிர்பார்ப்பதை விட , திரைப்பட வர்த்தக சபை இதைக் கையிலெடுத்துச் செயல்படுத்த வேண்டும். இதை அவர்களிடமே பலமுறை வலியுறுத்தியிருக்கிறேன்” என்கிறார் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவரான விக்ரமன். ஆனால் “இது நடக்கிற காரியமல்ல” என்கிறார் அமீர். “அமெரிக்காவின் புகழ்பெற்ற இயக்குநர் மார்ட்டீன் ஸ்கார்சஸி தாமாகவே முன்வந்து அமெரிக்கப் படங்களுக்கான ஆவணக் காப்பகம் ஒன்றை அமைத்திருக்கிறார். ஆனால் அவரைப்போல மில்லியன் டாலர்களில் இங்கே இருக்கும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் வருவாய் ஈட்டும் சூழல் இல்லை. அவரும் அரசு மற்றும் தனியார் உதவிகளையும் பெற்றுக்கொண்டே நடத்துகிறார். இங்கே ஆவணக் காப்பகம் அமைத்துப் பராமரிக்கும் சக்தி கொண்டது அரசு எந்திரம் மட்டுதான்” என்று கூறும் அமீர், “இதுதான் யதார்த்தம். மக்கள் நல அரசை நடத்திவரும் அம்மா அவர்கள், நாளைய தலைமுறையை மனதில் வைத்து தமிழ்த் திரைப்பட ஆவணக் காப்பகம் அமைய ஆவன செய்ய வேண்டும்” என்று வேண்டுகோள் வைக்கிறார்.

கடந்த 40 ஆண்டு காலமாகத் திரைப்படத் துறையிலிருந்து வந்தவர்களின் கைகளில்தான் தமிழக அரசியலும் அரசும் இருக்கின்றன. இருந்தும், தமிழ் சினிமாவுக்குக் காப்பகம் அமைக்க எந்த முதல்வரும் முன்வராத காரணம் மட்டும் திகில் படங்களின் மர்மக் காட்சி போல விளங்கிக்கொள்ள முடியாததாகவே உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x