Published : 09 May 2019 07:17 PM
Last Updated : 09 May 2019 07:17 PM

திரைவிழா முத்துகள்: ‘ஹியூமன் ஸ்பேஸ் டைம் அண்ட் ஹியூமன்’ (தென் கொரியா)- மூழ்கும் கப்பல்.. மூச்சுத்திணறும் மனிதம்

மூழ்கக்கூடிய ஒரு கப்பல், ஏற்கெனவே அந்தக் கப்பலில் பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு அரசியல்வாதியின் தலைமையின்கீழ் சென்றால் என்ன ஆகும் என்ற ஒற்றைவரியை அடிப்படையாகக் கொண்டது கிம் கி டுக் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘ஹியூமன் ஸ்பேஸ் டைம் அண்ட் ஹியூமன்’ படம்.

மூழ்கக்கூடிய கப்பல் என்பதற்குப் பதிலாக, கற்பனை உலகில் காற்றில் மிதக்கும் ஒரு கப்பலின் கதையாக, மனித வாழ்வின் அர்த்தமும் தேடலும் நசுக்கப்பட்டு செயற்கை நெருக்கடிகள், திணிக்கப்படும் பெரும்சிக்கல்கள் குறித்து இந்தப் படம் சற்றே கச்சாத்தன்மையுடன் பேச முயன்றுள்ளது.

தென்கொரிய இயக்குநர்களில் உலக அளவிலும் குறிப்பாகத் தமிழக அளவிலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களைத் தருபவர் கிம் கி டுக். 2017 சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் கிம் கி டுக்கின் ‘தி நெட்’ (வலை) என்ற திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. வடகொரியா-தென்கொரியா அரசுகளிடையிலான மோதலை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்த படம் அது.

குலைக்கப்பட்ட சமன்பாடுகள்

‘ஹியுமன் ஸ்பேஸ் டைம் அண்ட் ஹியுமன்’ படம் கிம் கி டுக்கின் மற்ற படங்களிலிருந்து முற்றிலும் இருண்மையான வேறொரு தளத்துக்கு அழைத்துச் செல்கிறது. பரவலான வரவேற்பைப் பெறாத ஒரு படம் இது. அதற்குக் காரணம், பார்வையாளரிடம் அந்தப் படம் ஏற்படுத்தும் கடுமையான அதிர்ச்சி.

பிற்போக்குத் தனங்களும், பண்பாட்டு முகமூடிகளும் நிறைந்த நமது சமூகத்துக்கு உலகத் திரைப்படங்களில் பலவும் அதிர்ச்சி தரக்கூடியவைதான். உயிர் வாழ்தல்,
வாழ்க்கை குறித்த பெரும் கேள்விகளை எழுப்புவதுடன் சற்றே தத்துவக் கேள்விகளை நோக்கி நகர்கிறது இந்தப் படம்.

ஆனாலும், அதிர்ச்சி தரக்கூடியதாக இருப்பதற்குக் காரணம் கடுமையான வன்முறை, அதிகாரம், வெறுப்பு பரவும் காட்சிகளாக இந்த படம் இருப்பதுதான் பிரச்சினை.

உயிர் வாழ்தலுக்கு இடையில் மனிதக் கூட்டம் ஆடிப் பார்க்கும் பல்வேறு விளை யாட்டுகளை இந்தப் படம் கடுமையாகக் கேள்விக்கு உள்ளாக்குகிறது.

எழுப்பப்படும் கேள்விகள் முக்கியமானவை. ஆனால், கேள்வி எழுப்பப்படும் விதம் அதிர்ச்சியளிக்க வேண்டும் என்ற திட்டமிட்ட நோக்குடன், கலைச் சமன்பாடுகளைக் குலைத்துப்போடும் வேலையையும் செய்துள்ளது.

கப்பலில் கடவுள்

கதை உருவகமானது. இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்டுக் கைவிடப்பட்ட ஒரு பழைய கப்பல், பயணிகள் கப்பலாகத் தன் பயணத்தைத் தொடங்குகிறது. அந்தக் கப்பலில் தென்கொரியாவின் முக்கிய அரசியல்வாதியும் அவருடைய மகனும் சொகுசு வசதிகளுடன் பயணிக்கிறார்கள்.

அதே கப்பலில் புதிதாகத் திருமணம் ஆன தம்பதி, இளைஞர் கூட்டம், தாதா கும்பல், சூதாடிகள், பாலியல் தொழிலாளிகள் என பல்வேறு தரப்பினர் உல்லாசப் பயணம் செல்கிறார்கள்.

பாலியல் பலாத்காரங்கள், வன்முறை, அதிகார துஷ்பிரயோகம் போன்ற அனைத்தும் படத்தின் முதல் பாதியில் மிக மோசமாகவே அரங்கேறுகின்றன.

இத்தனைக்கும் நடுவில் யாரிடமும் பேசாமல் சம்பந்தமற்ற வேலைகளை மர்மமான முறையில் செய்துகொண்டிருக்கிறார் ஒரு முதியவர்.

தன்னைச் சுற்றி நடைபெறும் எதனாலும் அசைக்கப்படாதவராக அவர் இருக்கிறார். ஒரு கட்டத்தில் அந்தக் கப்பலில் சிலர் அவரைக் கடவுள் என்று கருதுகிறார்கள்.

நான்தான் தலைவன்

முதல் பாதியில் கடலில் சென்றுகொண்டிருக்கும் கப்பல் இரண்டாவது பாதியில் சடாரென்று கற்பனை வெளியில் வானத்தில் பறந்துகொண்டிருக்கிறது. அதுவரை பலாத்காரம், வன்முறை என்று மட்டும் இருந்த ஒடுக்குமுறைகள் முழு வன்முறை-அதிகார வடிவெடுக்கின்றன.

உணவுக்கும் தண்ணீருக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்படுகிறது. உயிர் வாழ்வதற்காக மனிதனை மனிதன் அடிக்க ஆரம்பிக்கும் நிலை உடனே தோன்றிவிடுகிறது.

இந்த இடத்தில்தான் நமது இன்றைய வாழ்க்கையை உருவகமாகப் பொருத்தியிருக்கிறார் கிம் கி டுக். முதல் பகுதியில் அரசியல்வாதியை கப்பல் கேப்டனும், தாதா கும்பல் தலைவனும் ஆராதிக்கிறார்கள்.

தன்னை முன்வைத்து நடைபெறும் அனைத்து அதிகார துஷ்பிரயோகங்களையும் ஒரு புன்சிரிப்புடனும், தன்னை பாதிக்காதவரை அதெல்லாம் பிரச்சினையே இல்லை, எல்லாம் நடக்கட்டும் என்றும் சொல்றார் அரசியல்வாதி.

 இரண்டாவது பாதியில் கப்பலுக்கு நான்தான் இனி தலைவன், நான் வைப்பதே சட்டம், நான் சொல்வதை தாதா கும்பல் தலைவன் நடைமுறைப்படுத்துவான் என்று எல்லாவற்றையும் தன் கையில் எடுத்துக்கொள்கிறார்.

நாம் யார்?

நம்முடைய அரசியல்வாதிகளுக்கும் இந்தப் படத்தின் அரசியல்வாதிக்கும் எந்த வேறுபாட்டையும் உணர முடியவில்லை. கப்பலில் பலாத்காரம், வன்முறை, ஒடுக்குமுறைகளை அரசியல்வாதி வளர்த்துவிடுகிறார். அதன் பயணிகளைப் போலவே நாமும் எல்லாவற்றையும் பேசாமல் கடந்துவிடுகிறோம்.

ஒரு கட்டத்தில் ஆபத்தில் உள்ள கப்பலையோ நாட்டையோ தங்களைவிட்டால் வேறு யாராலும் சிறப்பாகக் காப்பாற்றிவிட முடியாது என்று அரசியல்வாதிகள் சவால் விடுக்கிறார்கள்.

ஆனால், அவர்களுடைய எத்தனிப்பு எதுவுமே மக்களைக் காப்பாற்றுவதற்கல்ல. என்ன செய்தாவது தங்களை மட்டும் காப்பாற்றிக்கொள்வதுதான்.

படத்தில் அரசியல்வாதியின் மகனாக வரும் கதாபாத்திரம் மனிதத்தன்மை கொண்டதாகத் தொடக்கத்தில் இருக்கிறது. ஆனால், அந்த மகன் தன் மனிதத்தன்மையை உறுதியாக வெளிப்படுத்துவதே இல்லை.

நல்லது, கெட்டது இரண்டையும் பார்த்துவிட்டு மௌனமாகவே கடந்து செல்கிறான். நம் நாட்டு நடுத்தர வர்க்கத்தினர் போலவே சிற்சில இடங்களில் மிகக் குறைந்த அளவு எதிர்ப்பை பதிவுசெய்வதோடு சரி.

தவறுகளை, குற்றங்களைத் தடுக்கவோ கிள்ளி எறியவோ தன்னாலான முயற்சிகளில் அவன் இறங்குவதே இல்லை. ஒரு கட்டத்தில் தான் உயிர்வாழ்வதற்காக எந்த எல்லைக்குச் செல்லவும் விழைகிறான்.

ஒன்று அந்த அரசியல்வாதியைப் போல இருக்க நாம் முனைகிறோம் அல்லது அவருடைய மகனைப் போலத்தான் மாறிவிடுகிறோம் என்கிறார் கிம் கி டுக்.

தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x