Last Updated : 08 Mar, 2019 11:08 AM

 

Published : 08 Mar 2019 11:08 AM
Last Updated : 08 Mar 2019 11:08 AM

ஹாலிவுட் ஜன்னல்: ‘பிக்’ பாதிப்பில் ‘லிட்டில்’

அலுவலகத்தில் அனைவரிடமும் கறாராக இருக்கும் பெண் தொழிலதிபர், ஒரு நாள் தூங்கி எழும்போது தனது 13 வயது தோற்றத்துக்கு மாறிப்போகிறார். அதையொட்டி உள்ளும் வெளியுமாக அவர் சந்திக்கும் சங்கடங்களையும் பழைய தோற்றத்துக்குத் திரும்புவதற்கான அவரது தடுமாற்றங்களையும் காமெடி கலந்து சொல்கிறது ‘லிட்டில்’ திரைப்படம்.

31 வருடங்களுக்கு முன்னர் டாம் ஹாங்ஸ் நடிப்பில் ‘பிக்’(BIG) என்ற திரைப்படம் வெளியானது. 13 வயதுச் சிறுவன் ஒருவன் ஒற்றை இரவில் 30 வயது இளைஞனாக உருமாறும் இந்த நகைச்சுவைத் திரைப்படம், டாம் ஹாங்ஸின் ஹாலிவுட் வெற்றிக் கணக்கைத் தொடங்கி வைத்தது. ‘பிளாக்கிஷ்’ என்ற அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடரில் நடித்த மர்சய் மார்டின் என்ற 10 வயதுச் சிறுமி இந்த ‘பிக்’ திரைப்படத்தின் தீவிர ரசிகை. தொடரின் தயாரிப்பாளரான கென்யா பேரிஸிடன் ‘பிக்’ குறித்து அவர் அவ்வப்போது ஆர்வமாக விவாதிப்பாராம்.

இதன் விளைவாக 4 ஆண்டுகள் கழித்து ‘பிக்’ பாணியிலான ‘லிட்டில்’ திரைப்படத்தை பேரிஸ் தயாரிக்க முடிவெடுத்தபோது அதில் 14 வயது மார்டின் மையக் கதாபாத்திரமாக இணைந்தார். கூடவே மார்டினின் சுட்டித்தனம் அவருக்குப் படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் பொறுப்பையும் சேர்க்க, ஹாலிவுட் வரலாற்றில் மிகவும் இளவயதில் அப்பணியில் சாதித்த பெருமையும் மார்டினுக்குச் சேர்ந்துள்ளது.

‘லிட்டில்’ படத்தில் பணியாட்களுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கும் பெண் தொழிலதிபர், திடீரெனத் தனது 13 வயது தோற்றத்துக்கு மாறி விடுகிறார். அந்தத் தோற்ற மாற்றம் அவரது வாழ்க்கையையும் அடியோடு திருப்பிப் போடுகிறது. அலுவலகத்தில் எவரும் மதிக்காததுடன், பள்ளிக்குச் செல்லவும் நிர்பந்திக்கப்படுகிறார். இவற்றுக்கு மத்தியில் தனது தனி உதவியாளரான பெண்ணின் உதவியுடன் பழைய தோற்றத்துக்குத் திரும்ப பிரயத்தனம் கொள்கிறார்.

நகைச்சுவைக்கு வாய்ப்புள்ள திரைக்கதையில் அதைச் செம்மையாகப் பரிசோதித்துள்ளார்கள். பெண் தொழிலதிபராக ரெஜினா ஹெல்லும் அவரது 13 வயதுப் பாத்திரத்தில் மர்சய் மார்டினும் நடித்துள்ளனர். இசா ரே, ஜஸ்டின் ஹார்ட்லி உள்ளிட்டோர் உடன் நடிக்க, டினா கார்டன் இயக்கியுள்ள ‘லிட்டில்’ திரைப்படம் ஏப்ரல் 12 அன்று திரைக்கு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x