Last Updated : 01 Feb, 2019 09:43 AM

 

Published : 01 Feb 2019 09:43 AM
Last Updated : 01 Feb 2019 09:43 AM

திரைக்கு வெளியே: எல்லைகளை உடைக்கும் பாகிஸ்தான் தொடர்கள்

இந்தியாவில் பல்வேறு மொழிகளில் எடுக்கப்படும் சின்னதிரைத் தொடர்கள் இன்னமும் குடும்ப உறவுகள், அதிலும் குறிப்பாக மாமியார்-மருமகள் பிரச்சினையைப் பின்னணியாக வைத்துதான் எடுக்கப்பட்டுவருகின்றன. ஆனால், நமது பக்கத்து நாடும் பண்பாட்டுரீதியாகச் சகோதர நாடுமான பாகிஸ்தானில் தற்காலத்தில் எடுக்கப்படும் சின்னதிரைத் தொடர்கள் பலவிதங்களில் மேம்பட்டவையாக இருக்கின்றன. கடந்த பத்து ஆண்டுகளில் பாகிஸ்தானில் சின்னதிரைத் தொடர் தயாரிப்பு அடைந்திருக்கும் வளர்ச்சி அபாரமானது.

அபார வளர்ச்சி

பாகிஸ்தானில் தனியார் தொலைக்காட்சி சேனல்கள் 2000-ம் ஆண்டில்தான் அறிமுகமாயின. அதற்குமுன், தேசிய சேனலான ‘பிடிவி -நெட்வர்க்’கின் (PTV Network) சேனல்கள் மட்டுமே ஒளிப்பரப் பாகிவந்தன. எண்பதுகளிலும் தொண்ணூறு களிலும் ‘பிடிவி’யில் வெளியான தொடர்களுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது.

அப்போது வெளியான ‘வாரிஸ்’ (1980) ‘அன்கஹி’ (1982), ‘தூப் கினாரே’ (1987), ‘தன்ஹாயீயான்’ (1986), ‘ஐனக் வாலா ஜின்’ (1993), ‘ஆல்பா பிராவோ சார்லி’ (1998) போன்ற உருது மொழித் தொடர்கள் வீடியோ கேஸட்கள் மூலம் எல்லைகளைக் கடந்து இந்திய மக்களாலும் வெகுவாக ரசிக்கப்பட்டன. தனியார் தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்புக்கு அனுமதியளிக்கப் பட்டுப் பத்தாண்டுகள் கழித்து, பாகிஸ்தான் தொடர்கள் சர்வதேச அளவில் கவனம்பெறத் தொடங்கின.

வரவேற்ற இந்திய ரசிகர்கள்

2014-ம் ஆண்டு, ‘ஜீ பொழுதுபோக்கு நிறுவனங்கள்’ (ZEEL) சார்பில், ‘ஸிந்தகி’ என்ற தொலைக்காட்சி சேனலைத் தொடங்கி பாகிஸ்தான் தொடர்களை இந்தியச் சின்னதிரை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. பாகிஸ்தான் மட்டுமல்லாமல் துருக்கி, பிரேசில், தென் கொரியா, உக்ரைன் போன்ற நாடுகளின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இந்த சேனலில் ஒளிபரப்பப்பட்டன.

2014-ம் ஆண்டிலிருந்து 2016-ம் ஆண்டு வரை, இந்த சேனலில் ஒளிபரப்பான பிரபல பாகிஸ்தான் தொடர்களுக்கு இந்திய ரசிகர்கள் பெரும் வரவேற்பை வழங்கினார்கள். ஆனால், 2016 கஷ்மீரின் உரிப் பகுதியில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் பாகிஸ்தான் தொடர்களை ஒளிபரப்புவதை ‘ஸிந்தகி’ சேனல் நிறுத்திக்கொண்டது. தற்போது, ‘ஸிந்தகி’ சேனல் தொலைக்காட்சி சேனலாக இல்லாமல் டிஜிட்டல் சேனலாக ‘ஜீ5’ (ZEE5) செயலியில் இயங்கிவருகிறது.

திரைக்கதைகளாகும் இலக்கியங்கள்

பாகிஸ்தான் சின்னதிரைத் தொடர்களுக்கு இந்தியச் சின்னதிரை ரசிகர்கள் வழங்கிய வரவேற்புக்கு முக்கியக் காரணமாக அவற்றின் திரைக்கதைகளைச் சொல்லலாம். அந்நாட்டு மக்களின் கலாச்சாரத்தையும் வாழ்க்கையையும் யதார்த்தம் வழுவாமல் திரைக் கதையாக்குவது பாகிஸ்தான் தொடர்களின் சிறப்பம்சம். உருது மொழி இலக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும்வகையில், புகழ்பெற்ற உருது நாவல்களை நாடகமாக்குகிறது பாகிஸ்தான் சின்னதிரை.

நாவல்களின் இலக்கியத் தரம் சற்றும் குறையாமல் அவை தொடர்களாக எடுக்கப்படுகின்றன. ஆரம்பத்திலிருந்து இறுதிவரை, தெளிவான உள்ளடக்கத்துடன் எந்தவொரு பிறழ்ச்சியும் இல்லாமல் இந்தத் தொடர்களின் திரைக்கதைகள் பயணம் செய்கின்றன.

இந்தியத் சின்னதிரைத் தொடர்கள் எத்தனை ஆண்டுகளுக்குத் தொடரும், அதற்குள் எத்தனை கதாபாத்திரங்களுக்கு நடிகர்கள் மாற்றப்படுவார்கள் என்பதெல்லாம் தயாரிப்பாளருக்கும் தெரியாது; பார்வையாளருக்கும் தெரியாது.

ஆனால், பாகிஸ்தான் நாடகத் தொடர்கள் குறைந்தபட்சம் பதினேழு, அதிகபட்சம் முப்பது எபிஸோட்கள் என்று மூன்றிலிருந்து ஆறு மாதங்களுக்குள் நிறைவடைந்து விடுகின்றன. அத்துடன், இந்தத் தொடர்களின் ‘டைட்டில் டிராக்’ பாடல்களின் வரிகளும் இசையும் இந்தியத் தொடர்களைவிடப் பன்மடங்கு ரசனையுடன் அமைந்திருக்கின்றன.

ஆணுக்கும் அழுகை வரும்

சமூகப் பிரச்சினைகளை எந்தவிதத் தயக்கமுமில்லாமல் பேசுகின்றன பாகிஸ்தான் தொடர்கள். பெண்கள் முன்னேற்றமடையாமல் சமூகம் முன்னேற்றமடைய முடியாது என்பதை மையப்பொருளாக வைத்து பெரும்பாலான தொடர்கள் எடுக்கப்படுகின்றன. பெண்களுக்கு உரிய மரியாதையையும் சம வாய்ப்புகளையும் குடும்பமும் சமூகமும் வழங்க வேண்டும் என்பதை இந்தத் தொடர்கள் அழுத்தமாகப் பதிவுசெய்கின்றன. சமகால ஆண்-பெண் உறவைக் கையாள்வதிலும் இந்தத் தொடர்கள் அடுத்த கட்டத்துக்குச் சென்றிருக்கின்றன.

பரஸ்பர அன்பும் மரியாதையும் புரிதலும் இல்லாமல் ஓர் உறவு சமூகத்துக்காக மட்டும் நீடிப்பதில் எந்த அர்த்தமுமில்லை என்பதை இந்தத் தொடர்கள் அழகாகப் பதிவுசெய்கின்றன. இந்தியத் தொடர்களைப் போன்று திருமண பந்தத்தை வலிந்து கொண்டாடும் போக்கு அந்தத் தொடர்களில் இல்லை. பெரும்பாலான, இந்தியத் தொடர்களில் ஆண் கதாபாத்திரங்கள் எவ்வளவு பெரிய வாழ்க்கைப் பிரச்சினை வந்தாலும் அழ மாட்டா. அழுகை ‘ஆண்மைக்கு’ இழுக்கு என்ற ஆணாதிக்கக் கருத்தாக்கத்தின் பிரதிபலிப்பு இது.

ஆனால், ஆண்களைப் பற்றிய இந்தப் பொதுவான பிம்பத்தை பாகிஸ்தான் தொடர்கள் உடைக்கின்றன. இந்தத் தொடர்களில் ஆண்களும் மன வலி ஏற்படும்போது அழுகிறார்கள்.

மதம் சார்ந்த எந்தக் கருத்தும் இந்தத் தொடர்களில் இடம்பெறுவதில்லை. இன்னும் சொல்லப்போனால், மதத்தின்பேரால் சமூகத்தில் நடக்கும் அநீதிகளை இந்தத் தொடர்கள் துணிச்சலுடன் விமர்சனம் செய்கின்றன. ஆனால், இந்தியத் சின்னதிரைத் தொடர்களோ இதற்கு முற்றிலும் நேரெதிராக ஒவ்வொரு மதப்பண்டிகையையும் விழாவையும் திரைக்கதையில் திணித்து, பல எபிஸோட்கள் எடுத்து ஒளிபரப்பிப் பார்வையாளரின் மூளையைத் துருப்பிடிக்கச் செய்கின்றன.

நடிக்கத் தெரிந்த நடிகர்கள்

பாகிஸ்தான் தொடர்களில் நடிக்கும் நடிகர்கள் செம்மையான நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள். எவ்வளவு சவாலான கதாபாத்திரங்களையும் அவர்கள் நேர்த்தியுடன் திரைக்குக் கொண்டுவருகிறார்கள். செயற்கைத் தனமும் மிகைநடிப்பும் இல்லாமல் பலவிதமான மானுட உணர்வுகளை இயல்பாகப் பார்வையாளர்களிடம் கடத்துகிறார்கள்.

அத்துடன், கதாநாயகர்கள், கதாநாயகிகளின் கதாபாத்திரங்களுக்கு இணையான தாக்கத்தைத் துணை நடிகர்களின் கதாபாத்திரங்களும் ஏற்படுத்து கின்றன. அதனால், பாகிஸ்தான் தொடர்களில் திறமையற்ற நடிகர்களைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

உருது மொழியோ இந்தி மொழியோ தெரிந்தவர்கள் பாகிஸ்தான் தொடர்களைக் கண்டு ரசிக்கலாம். யூடியூப், டெய்லி மோஷன் போன்ற இணையதளங்களில் இவற்றில் சில தொடர்கள் முழுமையாகக் காணக்கிடைக்கின்றன.

சில சூப்பர் ஹிட் பாகிஸ்தான் தொடர்கள்

thasthanjpg 

‘தாஸ்தான்’ (கதை) – 2010

உருது எழுத்தாளர் ரஸியா பட் எழுதிய ‘பானோ’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. இந்திய-பாகிஸ்தான் பிரிவினையால் பிரிய நேரிடும் இரண்டு காதலர்களின் துயரைத் துல்லியமாக இந்தத் தொடர் பதிவுசெய்திருந்தது. பாகிஸ்தானின் முன்னணி நடிகர்களான ஃபவாத் கான், சனோம் பலோச், சபா கமர், அஹ்ஸான் கான் ஆகியோர் இந்தத் தொடரில் நடித்திருந்தனர்.

humsafarjpg100 

‘ஹம்சஃபர்’ (வாழ்க்கைத் துணை) – 2011

மாறுபட்ட வர்க்கப் பின்னணியைக் கொண்ட இரண்டு பேர் வாழ்க்கையில் இணையும்போது எதிர்கொள்ளும் சவால்கள், வலிகள், துரோகங்கள் ஆகியவற்றை இந்தத் தொடர் பதிவுசெய்திருந்தது. எழுத்தாளர் ஃபர்ஹத் இஸ்தியாக் எழுதிய ‘ஹம்சஃபர்’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தத் தொடர், இதில் நடித்த ஃபவாத் கானுக்கும் மஹிரா கானுக்கும் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.

zindagijpg100 

‘ஸிந்தகி குல்ஸார் ஹை’ (வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்) – 2012

பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தை பாகிஸ்தான் மக்களை உணரச் செய்த தொடர் இது. எழுத்தாளர் உமேரா அஹமது இதே பெயரில் எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. இந்தத் தொடரின் கதாநாயகியான கஷஃப் கதாபாத்திரம் பெண்களுக்கு இன்றளவும் ஊக்கமளிப்பதாக இருக்கிறது. சனம் சயீத், ஃபவாத் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

yakeenjpg100 

‘யகீன் கா சஃபர்’ (நம்பிக்கையான பயணம்) – 2017

பெண்களுக்கு எதிராக நடக்கும் சமூக, குடும்ப வன்முறைகளை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியத்தை உணர்த்திய தொடர். சமூகக் கடமை என்பது அனைவருக்குள்ளும் இருக்க வேண்டும் என்பதை அழுத்தமாக இந்தத் தொடர் பதிவுசெய்திருந்தது. நடிகர்கள் சாஜல் அலி, அஹத் ரஸா மீர், ஹிரா – மானி ஆகியோர் இந்தத் தொடரில் நடித்திருந்தனர்.

sunojpg100 

சுனோ சந்தா (கேள் என், நிலாவே) - 2018

காதல் நகைச்சுவைத் தொடரான இது, சென்ற ஆண்டு ஈகைத் திருநாளில் ஒளிபரப்பாகி சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஃபர்ஹான் சயீத், இக்ரா அஸிஸ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் இந்தத் தொடரில் நடித்திருந்தனர்.

பிற முக்கியமான தொடர்கள்:

‘மேரி ஸாத் ஸரா இ-பெனிஷான்’ – 2009, ‘தாம்’– 2010, ‘துர் –இ-ஷவார்’ – 2012, ‘ஷேஹர்-இ-ஸாத்’ – 2012, ‘பியாரே அஃப்ஸல்’ – 2013, ‘மோஹபத் சுப கா சித்தாரா ஹை’ – 2013, ‘மன் மாயல்’ - 2016

- கட்டுரையாளர் தொடர்புக்கு: gowri.n@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x