Published : 12 Sep 2014 01:23 PM
Last Updated : 12 Sep 2014 01:23 PM

சர்வதேச சினிமா: டேஞ்சரஸ் மெத்தட் - மனமென்னும் இருட்டை நோக்கி

மன நோய் என்பது ஒருவருக்குக் கடவுளால் வழங்கப்பட்ட சாபம் என்றும் கருதப்பட்ட காலம் இருந்தது. மனநோயாளிகள் குற்றவாளிகளாகத் தனிக்கொட்டடிகளில் அடைக்கப்பட்டுப் புறக்கணிக்கப்பட்ட காலத்தில் உடலுக்கு வரும் நோயைப் போலவே மனநோயையும் குணப்படுத்த முடியும் என நிரூபித்தவர் உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்ட். உளப் பகுப்பாய்வை சிகிச்சை முறையாக மாற்றியவர் அவர். சிக்மண்ட் பிராய்டுக்கும், அவருக்கு மாணவராக இருந்து பிராய்டின் உளப்பகுப்பாய்வுக் கருத்துகளில் பின்னர் மாறுபட்டுப் புதிய திசைகளை நோக்கிப் பயணித்த சி.ஜி. யுங்குக்கும் உள்ள உறவுதான் இப்படத்தின் கதை.

இயக்குநர் டேவிட் க்ரோனென்பெர்க் உளவியல் திரில்லர் படங்களை எடுப்பதில் ஏற்கனவே தன்னை நிரூபித்தவர்.உளவியல் மருத்துவர்களான சிக்மண்ட் பிராய்டுக்கும் கார்ல் யுங்குக்கும் இடையிலான நட்பின் வழியாக உளப்பகுப்பாய்வு முறை அறிமுகமான காலகட்டத்தையும் கண்முன் நிறுத்துகிறார் க்ரோனென்பெர்க்.

திரைக்கதை ஆதாரம்

இப்படத்தின் திரைக்கதையாசிரியரான ஹாம்ப்டன், அமெரிக்க உள சிகிச்சையாளரான ஜான் கெர்ரின் நூலான எ மோஸ்ட் டேஞ்சரஸ் என்ற நூலிலிருந்தும், ஜான் கெர் என்பவர் எழுதி ‘தி டாக்கிங் க்யூர்’ என்ற நாடகத்திலிருந்தும் தனது திரைக்கதையை எழுதியுள்ளார்.

வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ரஷ்ய யூத யுவதியான சபீனா, மனநோயின் தீவிரமான தாக்குதலில், கிட்டத்தட்ட கைதி போல குதிரை வண்டியில் சிகிச்சைக்காகக் கொண்டுவரப்படும் காட்சியுடன் படம் தொடங்குகிறது. காலம் 1904. அந்த மருத்துவமனையில் பணக்காரப் பெண் எம்மாவுடன் திருமணமாகிச் சில மாதங்களேயான 29 வயது மருத்துவர் யுங் சபீனாவை நோயாளியாகச் சந்திக்கிறார். ‘டாக்கிங் க்யூர்’ முறையில் நோயாளியுடன் உரையாடத் தொடங்கித் தனது சிகிச்சையைத் தொடங்குகிறார். தொடர்ந்த உரையாடலில் சபீனா ஸ்பில்ரினின் புத்திசாலித்தனத்தால் ஈர்க்கப்படுகிறார். சபீனாவுக்கு மருத்துவப் படிப்பிலும் உளவியல் துறையிலும் மிகுந்த ஆர்வம் இருப்பதை அறிந்துகொள்கிறார் யுங். மருத்துவப் படிப்பில் சேரும் சபீனா, ஒருகட்டத்தில் யுங்கின் உதவியாளராக மாறி, யுங்கின் மனத்தடைகளையும் குற்றவுணர்வுகளையும் உடைத்து நொறுக்கும் காதலியாகவும் மாறுகிறாள்.

பிராய்டின் மூலம் இன்னொரு நோயாளியாக யுங்குக்கு அறிமுகமாகும் க்ராஸூம் மகத்தான கதாபாத்திரம்தான்.

அவன் நோயாளி மட்டும் அல்ல. உளவியல் மருத்துவனும் கூட. ஆனால் ‘கவுரவமான’ பின்னணியைச் சேர்ந்த நடுத்தர வர்க்கக் கட்டுப்பெட்டித்தனங்கள் கொண்ட பிராய்டுக்கும், யுங்குக்கும் எதிர்மறையானவன். மிகவும் சுதந்திரமானவன். அவன் மனச்சிதைவு நோயால் அவதிப்படுபவனாக இருக்கிறான். மனத்தில் எழும் எந்த உணர்வையும் சமூக நாகரிகத்தின் பேரால் மனிதர்கள் அடக்கிவைப்பதுதான் மனநோய்களுக்கான அடிப்படை பிரச்சினை என்று அவன் யுங்கிடம் விவாதிக்கிறான். ஒருவகையில் திருமணமான யுங்கின், ஏகபத்தினி விரதத்தை முறித்து சபீனாவை நோக்கி அவரை நகர்த்துவது க்ராஸ்தான்.

முரண்பாடுகள்

யுங்குக்கும், சபீனாவுக்குமான உடல் உறவின் வாயிலாகவே சபீனாவின் மனநோய் மற்றும் குற்றவுணர்வின் காரணங்கள் யுங்குக்குத் தெரியத் தொடங்குகின்றன. ஒருகட்டத்தில் யுங்கின் திருமண உறவை முறிக்கும் அளவுக்கு அது அபாயகரமானதாகிறது.

சபீனா உளவியல் மருத்துவராகத் தனது ஆய்வை எழுதத் தொடங்குகிறாள். ஆசிரிய-மாணவ உறவாகத் தொடங்கிய பிராய்ட் மற்றும் யுங்கின் கருத்து வேறுபாடுகளுக்கு இடையிலும் இரண்டு பேரின் இணக்கம் அவசியம் தேவை என்பதை சபீனா நினைவூட்டியபடி இருக்கிறாள். புதிதான மாற்றம் இந்த உலகில் நிகழ்வதற்கு, ஆக்கசக்திக்கு இணையாக மனித மனத்தில் தொழிற்படும் எதிர்மறை, அழிவு உணர்வுகளும் அவசியம் என்ற கோணத்தில் தனது ஆய்வுப் புத்தகத்தை எழுதுகிறாள்.

ஒரு கட்டத்தில் பிராய்டுக்கும், யுங்குக்குமான முரண்பாடுகள் தீவிரமடைகின்றன. அடக்கப்பட்ட பாலியல் உணர்வையே அனைத்து வகையான மனப்பிரச்சினைகளுக்கும் அடிப்படையாகப் பார்க்கும் பிராய்டின் கருத்துகளின் மீது தனது விமர்சனத்தை வைக்கிறார். தனி மனித உளவியல் பிரச்சினை என்பதைத் தாண்டி கலாசார நினைவுகளும் ஆழ்மனப் படிமங்களாக மனதில் தாக்கம் செலுத்துகின்றன என்று விவாதிக்கத் தொடங்குகிறார். ஒரு மனிதனின் மனதைக் கூட்டு நனவிலியும் இயக்குவதாகக் கூறினார். மதத்துக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவுகள், அவன் உணரும் அற்புதங்கள் அனைத்தையும் மூடநம்பிக்கைகள் என்று ஒதுக்கிவிட முடியாது என்றும் ஆழ்மனதின் சக்தியால் புற நிகழ்வுகளைக் கட்டுப்படுத்த முடியும் என்று சிக்மண்ட் பிராய்டிடம் விவாதிக்கிறார். தனது வாழ்க்கையின் அந்திமத்தில் இருக்கும் பிராய்ட் தான் உருவாக்கிய உளவியல் கோட்பாடுகள் தன் முன்னாலேயே தன் மாணவனால் தகர்க்கப்படுவதைத் தாங்க முடியாமல் நிலைகுலைகிறார்.

சுதந்திர உணர்வைப் போதிக்கும் ஓட்டோ கிராஸ் கொகெய்னைப் புகைத்து சுய அழிவின் வழியாகப் பல உளவியல் ரகசியங்களை அறிய முனைந்து கடைசியில் 1920-ல் இறக்கிறான்.

புத்திக்கூர்மையும், உள்ளுணர்வும் சேர்ந்த கலவையான சபீனா, ரஷ்யா திரும்பி நாடறிந்த உளவியல் நிபுணராக மாறி, யூத வதைமுகாமில் சிறைப்பட்டு இறக்கிறாள்.

பிராய்டிடமிருந்து பிரிந்த யுங் மனரீதியான பல்வேறு தொந்தரவுகளுக்கும் நரம்புக் கோளாறுகளுக்கும் ஆளாகிப் பின்னர் அமைதியான முறையில் உலகப் புகழ்பெற்ற உளவியல் அறிஞராக மரணத்தைத் தழுவுகிறார்.

20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வியன்னா நகரம் இருந்த தோற்றத்தையும் கட்டிடங்களையும் அருமையாக இயக்குநர் இப்படத்தில் கொண்டுவந்திருக்கிறார். யுங்கின் மனைவி பரிசளித்த புதிய படகில் சூரிச் ஏரியில் பயணித்தபடியே நடக்கும் யுங்குக்கும் சப்ரினாவுக்குமான உரையாடலும் கவித்துமான காட்சிகளால் நிறைந்தது.

சிக்மண்ட் பிராய்டாக நடித்த விக்கோ மார்டன்சன், கார்ல் யுங்காக நடித்திருக்கும் மைக்கேல் பாஸ்பெண்டர், சப்ரீனாவாக நடித்திருக்கும் கெய்ரா நிட்லீ எல்லாரும் ஏற்ற கதாபாத்திரத்துக்கு அருமையாக நியாயம் செய்திருப்பவர்கள். மனவாதை உள்ளுக்குள் குதறுவதை, அதன் தாங்க முடியாத அவஸ்தையை கெய்ரா நீட்லியைப் போல யாரும் வெளிப்படுத்தியிருக்க முடியுமா என்பது ஆச்சரியமாக உள்ளது.

20-ம் நூற்றாண்டு மருத்துவம், அறிவியல், கலை, இலக்கியம், தத்துவத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இரண்டு அறிஞர்களின் வாழ்க்கையை, அவர்களுக்கு இடையில் நடக்கும் மோதல்களை ஒரு சுவாரசியமான திரைப்படமாக எடுக்க முடியுமா? இதற்கான பதில் தான் ‘தி டேஞ்சரஸ் மெத்தட்’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x