Last Updated : 21 Dec, 2018 10:00 AM

 

Published : 21 Dec 2018 10:00 AM
Last Updated : 21 Dec 2018 10:00 AM

பாலிவுட் 2018: கலைடாஸ்கோப்பின் சித்திரங்கள்!

பாலிவுட் எனக் கொண்டாடப்படும் இந்தித் திரையுலகின் நீள அகலம் இந்திய மாநிலங்களோடு நின்றுவிடுவதல்ல. எல்லை கடந்து பல நாடுகளிலும் பரவிய வீச்சு கொண்டவையாக வெகுஜன மற்றும் ஆஃப் பீட் இந்திப் படங்கள் கோலோச்சுகின்றன. வியாபாரம், திரை ரசனை என்ற இரு தண்டவாளங்களை இணைத்துப் பயணிப்பவை.

சுமார் 200 கோடியில் தயாரிக்கப்பட்டு 500 கோடிக்கும் மேல் வசூல் செய்த சஞ்சய் லீலா பன்சாலியின் ‘பத்மாவத்’,  முதலீடு செய்த பத்துக் கோடியையும் எடுக்க முடியாமல் நல்ல பெயரை மட்டுமே சம்பாதித்துக்கொடுத்த அனுராக் காஷ்யப்பின் ‘முக்காபாஸ்’ ஆகிய இரு படங்களின் ஆட்டத்துடன் 2018-ன் பாலிவுட் கண்விழித்தது.

தமிழகத்தின் அருணாசலம் முருகானந்தத்தின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு பால்கி இயக்கிய ‘பேட்மேன்’, திகில் படமான புரோசித் ராயின் ‘பரி’, சித்தார்த் மல்ஹோத்ராவின்  ‘ஹிட்ச்கி’ ஆகியவை கவனிக்கத்தக்கப் படங்களாக அமைந்தன.

இரண்டாம் காலாண்டில் இர்பான் கானின் ‘ப்ளாக்மெயில்’, இரானிய இயக்குநர் மஜீத் மஜிதியின் சறுக்கலாக அமைந்தது ‘பியான்ட் தி க்ளவுட்ஸ்’. இந்த வீழ்ச்சி வரிசையில் மேக்னா குல்சாரின் பிரமாதமான இயக்கத்தில் வந்த ‘ராஸி’, தேப் மேதேகரின்  ‘பயாஸ்கோப்வாலா’, முக்கியமாகப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறாக வந்த ராஜ்குமார் ஹிரானியின்  ‘சஞ்சய்’ ஆகிய படங்களைக் குறிப்பிடலாம்.

வசூலும் வரவேற்பும்

மூன்றாம் காலாண்டில் வெளிவந்த படங்களில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறமுடியாவிட்டாலும் ஏமாற்றம் இல்லாத வசூல் மற்றும் வரவேற்பைப் பெற்ற படங்கள் இந்த ஆண்டு சற்று அதிகம் எனலாம்.

இந்திய சினிமாவின் கனவு தேவதையாக வாழ்ந்து மறைந்த ஸ்ரீதேவின் மகள் ஜான்வீ கபூரின் அறிமுகப் படமாக ‘தடக்’, வெகு நாட்களுக்குப் பின்னர் நீதிமன்ற வாதங்கள் நிறைந்த அனுபவ் சின்ஹாவின் ‘முல்க்’, மெல்லிய தென்றல் போன்ற மென் நகைச்சுவைப் படமான  ஆகர்ஷ் குரானாவின் ‘கார்வான்’, சத்தமில்லாமல் வெளிவந்து சக்கை போடு போட்ட திகில் படமான  ‘ஸ்திரீ’, உறவுச் சிக்கல்களின் பின்னணியில், அனுராக் காஷயப்பின் மற்றுமொரு படமான ‘மன்மர்ஸியான்’ மற்றும் தேர்ந்த நடிகை, இயக்குநர் நந்திதா தாஸின் இயக்கத்தில் இரண்டாவது படமாக வந்த  ‘மன்ட்டோ’ ஆகிய படங்கள் இந்த சிலிர்ப்புப் பட்டியலில் அடங்கும்.

சில கிரிக்கெட் போட்டிகளில் எதிர்பாராமல் இறுதியில் வந்து பட்டையைக் கிளப்பும் அதிரடி ஆட்டக்காரர்கள் இருப்பார்கள். அப்படி ஆண்டின் இறுதிக் காலாண்டில் வந்து சிக்சர் அடித்த முக்கிய படங்கள் ஸ்ரீராம் ராகவனின் ‘அந்தாதுன்’, அமித் ஷர்மாவின் ‘பதாய் ஹோ’ ஆகிய படங்களைக் கொள்ளலாம்.

இவை தவிர, மிகவும் வித்தியாசமான திரையனுபவம் தந்த ‘தும்பாத்’, இந்தியத் திரையின் மிகப் பெரிய ஆளுமைகளான அமிதாப் பச்சன் - அமீர் கான் இணைந்து நடித்து மிகவும் எதிர்பார்க்கப்பட்டு ஏமாற்றிய ‘தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்’ படம் வந்ததும் இதே வேளையில் தான்.

2018 விடைபெற இன்னும் 10 நாட்கள் இருக்கும் நிலையில் கிறிஸ்மஸ் விடுமுறை மற்றும் புத்தாண்டுக்கான தொடக்க விடுமுறையை ஒட்டி டிசம்பர் 31-ல் வெளியாகும் படங்கள் என ஆனந்த் ராயின் இயக்கத்தில் ஷாருக் கானின் பெரிய பட்ஜெட் தயாரிப்பு மற்றும் நடிப்பில் ‘ஸீரோ’, ரோஹித் ஷெட்டியின் இயக்கத்தில் புது மாப்பிள்ளை ரன்வீர் சிங் நடித்திருக்கும் ‘சிம்பா’ ஆகிய படங்கள் இடம்பிடித்திருக்கின்றன.

இவை இந்திப்பட ரசிகர்களுக்குத் தரப்போவது எதிர்பாராத மகிழ்ச்சியா அல்லது அதிர்ச்சியா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய நிலையில், 2018-ல் திரை ரசிகனுக்கு நிறைவு தந்த சில முக்கிய பாலிவுட் படங்களைப் பற்றி சுருக்கமாகப் பார்க்கலாம்.

முக்காபாஸ் – ஒரு ஜெயிக்காத குத்துச்சண்டை வீரனின் கதையை அதன் சாதிப் பின்புலத்தில் சித்தரித்த படம். அலைபாயும் கதை, அதிகப் பாடல்கள் என அதன் குறைகளையும் மீறி விளையாட்டு, அரசியல் என முக்கிய விஷயங்களைப் பேசிய படம். மேலும், பெரிய பட்ஜெட் படங்களுக்கு மத்தியில் எல்லாத் தடைகளையும் மீறி அனுராக் காஷ்யப்பின் தொடர்ச்சியான, நேர்மையான சினிமா பயணத்துக்காகவே இந்தப் படம்  நினைவில் நிற்கிறது.

பேட்மேன் – அருணாசலம் முருகானந்தத்தின் வாழ்வை வெறுமனே ஓர் ஆவணப்படமாக முடக்கி விடாமல், முழுநீளத் திரைப்படமாக எடுத்து வணிகரீதியிலும் வெற்றிபெற வைத்ததில் பி,சி,ஸ்ரீராம், நமது பட்சிராஜன் அக்ஷய் குமார் இயக்குநர் பால்கி உள்ளடங்கிய குழுவினர் கவனிக்கவைத்தனர். இந்தப் படம் குவைத்திலும் பாகிஸ்தானிலும் தடை செய்யப்பட்டிருந்தது.

ராஸி - பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு முன்னாள் கடற்படை அதிகாரியான ஹரிந்தர் சிக்காவின் ‘காலிங் ஷேமத்’ என்ற நாவலை, அடிப்படையாகக் கொண்டு பவானி ஐயர் மற்றும் கவிஞரும், இயக்குநருமான மேக்னா குல்சார் (எழுத்தாளர் குல்சாரின் மகள்) இயக்கத்தில் ஆலியா பட்டின் துடிப்புமிக்க நடிப்பில் வந்த மறக்க முடியாத படம்.

கார்வான் - ஒரு பிணத்தை காரில் வைத்துக்கொண்டு அலையும் அவல நகைச்சுவை கலந்த பயணக் கதை. இர்பான் கான், முதன்முறை இந்தி சினிமாவில் காலடி வைக்கும் துல்கர் சல்மான் ஆகிய இருவரது சிறந்த நடிப்பிலும் ஓர் எளிமையான ஓவியம் போல மென் உணர்வுகளைப் பார்வையாளர்களுக்குக் கடத்தி நினைவில் நின்றது.

ஸ்திரீ – இந்த ஆண்டில் முதல் ஸ்லீப்பர் ஹிட்டாக இந்தப் படத்தைச் சொல்லலாம். அமர் கவுசிக்கின் இயக்கத்தில் ராஜ்குமார் ராவ், ஸ்ரத்தா கபூர் நடிப்பில் இளைஞர்களை மயக்கிக் கொல்லும் ஒரு சாதாரண மோகினிப் பேய்க் கதை.

மன்ட்டோ - இந்தியாவில் வாழும் முஸ்லிம் சகோதரர்களை பாகிஸ்தானுக்கே போகச் சொல்வதைப் பற்றி இந்த வருடத்தில் மூன்று படங்கள் வந்தன – ‘கேதார்நாத்’, ‘முல்க்’ மற்றும் மன்ட்டோ. ஒரு எழுத்தாளரின் வாழ்வையும் அவரின் சிறுகதைகளையும் மிக அழகாக இணைத்துப் பின்னிய நந்திதா தாஸின் தேர்ந்த இயக்கத்தில் நவாசுத்தீன் சித்திக் மன்ட்டோவாக வாழ்ந்த, தவறவிடக் கூடாத திரைப்படம் இது.

பதாய் ஹோ – ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் நடுத்தர வயதைத் தாண்டிய தாய் கருவுறுவதை அவர்களின் ஒட்டுதலில்லாத குடும்பத்தினர் எதிர்கொள்ளும்  படம் இது. நீனா குப்தா, கஜராஜ் ராவ் போன்ற மிகச் சிறந்த நடிகர்களின் பங்களிப்பு, நகைச்சுவை, கண்ணீர் சிந்த வைக்கும் சில தருணங்களைக் கொண்ட அமித் ஷர்மாவின் இயக்கத்தில் வந்த தரமான படம்.

அந்தாதுன் – இந்த வருடத்தின் மிகச் சிறந்த படமென இதைத் தாராளமாகச் கொள்ளலாம். ஒரு சஸ்பென்ஸ் - க்ரைம் த்ரில்லரில் பார்வையாளர்கள் இவ்வளவு ஒன்றிப் போய் ரசித்ததை வேறு இந்திப் படங்களில் இந்த ஆண்டு காண முடியவில்லை. கடைசி வரையில் ஊகிக்கவே முடியாமல் ஒரு கலைடாஸ்கோப்பின் சித்திரங்கள் போல மாறிக்கொண்டேயிருக்கும் கதையின் போக்கும் ஸ்ரீராம் ராகவனின் மிகச் சிறந்த இயக்கமும் இந்தப் படத்தை முதல் முக்கியத் திரைப்படமாக மாற்றிக்காட்டின.

தொடர்புக்கு: tottokv@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x