Last Updated : 02 Nov, 2018 11:27 AM

 

Published : 02 Nov 2018 11:27 AM
Last Updated : 02 Nov 2018 11:27 AM

சி(ரி)த்ராலயா 40: அந்நிய மண்ணில் சிவந்த மண்!

திரைப்படம் என்பது திறமைகளின் கூட்டணியால் சிறப்பது. இதை ‘ஊட்டி வரை உறவு’ படத்தின் வெற்றி மீண்டும் நிரூபித்தது. ஸ்ரீதரின் இளமை வழிந்தோடும் இயக்கம், ரசிகர்கள் கொண்டாடிவந்த நட்சத்திரப் பட்டாளம், ஊட்டியின் குளுமை, எல்.விஜயலட்சுமியின் ஆட்டம்,கோபுவின் நகைச்சுவை,எம்.எஸ்.வியின் இனிய பாடல்கள் என்று எல்லா அம்சங்களும் சரியான கலவையில் இருந்ததால் ‘ஊட்டி வரை உறவு’ 100 நாட்களைக் கடந்து ஓடியது.

கொஞ்சம் மூச்சுவிட்டுக்கொள்ளலாம் என்று நினைத்த கோபுவுக்கு, ஸ்ரீதரிடமிருந்து போன். “கோபு... நாளைக்கே பாஸ்போர்ட் விண்ணப்பிக்கணும். உன்னோட போட்டோவோட வந்துடு. நம்ம அடுத்த படத்தை வெளிநாட்டுல படம் பிடிக்கப்போறோம்! கதை ரெடி. ‘சிவந்த மண்’ என்று தலைப்பையும் தேர்வு செய்துவிட்டேன்'' என்றார்.

இதைக்கேட்டு மகிழ்ச்சியடைய வேண்டிய கோபுவுக்கு வயிற்றைக் கலக்கியது. கொல்கத்தா விமானப்பயணம் ஏற்படுத்திய அந்த ஜீவ-மரணப் போராட்டத்தின் நிமிடங்களை அத்தனை சீக்கிரம் மறந்துவிட முடியுமா?

ஸ்டுடியோவுக்குள் வெள்ளம்

‘சிவந்த மண்’ ஒரு சமஸ்தான ராஜாவின் கதை. அவரை ஆட்டிப்படைக்கும் ஒரு சர்வாதிகாரியை எதிர்த்துப்போராடும் இளைஞர் கூட்டம் ஒன்று, அந்த ராஜாவை மீட்பதுதான் கதை. சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக காஞ்சனாவை ஒப்பந்தம் செய்தார், ஸ்ரீதர். சர்வாதிகாரியாக நம்பியார், ஐ.ஜி வேடத்தில் எஸ்.வி.ரங்காராவ் நடித்தார். பாரிஸ், ரோம், ஆல்ப்ஸ் மலை,ஸ்விட்சர்லாந்து, ஸ்பெயின் என்று ஐரோப்பாவின் முக்கிய நகரங்களில் படமாக்கத் தீர்மானித்தார்.

திடீரென்று ஸ்ரீதருக்கு ஒரு எண்ணம். ‘அவ்வளவு தொலைவு சென்று படமெடுக்கப்போகிறோம்; அதை இந்தியிலும் ஒரேநேரத்தில் தயாரித்துவிட்டால் என்ன?’ என்று நினைத்தார். உடனே ஸ்ரீதரும் கோபுவும் மும்பைக்குப் பறந்தனர். ‘சிவந்த மண்’ கதைக்கு 'தர்த்தி' என்று தலைப்பிட்டு, ராஜேந்திரகுமாருக்கும் வஹீதா ரெஹ்மானுக்கும் கதையைக்கூறி கையோடு கால்ஷீட் வாங்கினார்கள். நம்பியார் கதாபாத்திரத்துக்கு இந்தி வில்லன் நடிகர் அஜீத் அமர்த்தப்பட்டார்.இங்கே எம்.எஸ்.வி என்றால் அங்கே சங்கர் - ஜெய்கிஷன் இசையமைத்தனர்.

படப்பிடிப்பு தொடங்கியது. சிவாஜி, காஞ்சனா, சச்சு, நாகேஷ் ஆகியோர் ஆற்றைப் பரிசலில் கடப்பதுபோல ஒரு காட்சியை வாகினி ஸ்டுடியோவில் படமாக்க நினைத்தார் ஸ்ரீதர். முதல்நாள் தமிழ் படத்தின் காட்சியும் அடுத்தநாள் இந்திப் படத்தின் காட்சியையும் எடுப்பது திட்டம். ராஜேந்திரகுமாரும், வஹீதா ரஹ்மானும் சென்னை வந்துவிட்டனர். ஆறு பொங்கி ஓடுவது போன்று காட்சிக்காகப் பெரிய தொட்டி ஒன்றை அமைத்து அதில் தண்ணீர் நிரப்பி, ராட்சச மோட்டார் பம்ப் செட்களை வைத்து பிரம்மாண்ட செட் போட்டிருந்தார்கள்.

விடிந்தால் படப்பிடிப்பு என்கிற நிலையில் திடீரென்று செட்டு உடைந்து, சேமித்து வைத்திருந்த நீர் வெள்ளமாகப் பெருகியோட, படப்பிடிப்பு தளம் முழுவதும் தற்காலிக வெள்ளம் சூழ்ந்து படப்பிடிப்பு ரத்தாகிவிட்டது. மீண்டும் அவசரம் அவசரமாகப் புதிய செட் ஒன்றை அமைத்து, அதில் நீரை நிரப்பி, ஒரு வழியாக அந்தக் காட்சியை எடுத்தார்கள்.

கோட்- சூட் வாங்கிய கோபு

ஆடம்பர செட்கள், ஹெலிகாப்டரில், பறக்கும் பலூனில் சண்டைக் காட்சிகள், ஐரோப்பிய நாடுகளில் படப்பிடிப்பு என்று காட்சிக்குக் காட்சி பிரம்மாண்டம். சித்ராலயா நிறுவனமே படுபிசியாகவும் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடும் ஸ்தலமாகவும் மாறியது. கோபுவுக்கோ சோதனை தொடங்கியது. வேட்டி மட்டுமே அணியும் கோபுவை வலுக்கட்டாயமாக அரை டஜன் கோட் சூட் வாங்கும்படி செய்துவிட்டார் மனைவி கமலா.

புதிய ஷூஸ் வேறு.கோபு அதுவரை செருப்புகளை மட்டுமே அணிந்துவந்தார். குளிர் பிரதேசத்துக்கு ஏற்ற, தடிமனான சாக்ஸ் வாங்காமல், லோக்கல் ஏரியா கடையில் சாதாரண காட்டன் சாக்ஸ் வாங்கிக் கொண்டார் கோபு.

டெல்லியில் இருந்து ஏதென்ஸ் நகர் வழியாக ரோமுக்குப் பயணப்பட்டது படப்பிடிப்பு குழு. தயாரிப்பு நிர்வாகி சித்ரா கிருஷ்ணசாமி. எத்தனை பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் ட்ரில் மாஸ்டர் போல் ஆட்டிவைப்பார். ஏதென்ஸ் நகரில் விமானம் இறங்கியபோது, அடுத்து ரோமுக்குப் புறப்படும் முன் ஏதென்ஸ் நகரைச் சுற்றிப்பார்க்க இடையில் 8 மணி நேரம் அவகாசம் கிடைத்தது. ஒலிம்பிக் விளையாட்டு தொடங்கியதாக நம்பப்படும் ஏதென்ஸில் மூவாயிரம் ஆண்டு பழமைவாய்ந்த கட்டடங்களைப் பார்த்து ரசித்துவிட்டுப் படக்குழுவினர் ரோமுக்குப் புறப்பட்டனர்.

ரோம் நகரில் இறங்கியதும் படக்குழுவைப் பார்த்து “யாரும்...ஆங்கிலத்துல பேசாதீங்க. இங்கே பதில் கிடைக்காது” என்று பயமுறுத்தினார் சித்ரா கிருஷ்ணசாமி. வெளிநாட்டுப் படப்பிடிப்பு என்பதால் துணை இயக்குநர்கள் கிடையாது. கோபுவும், சி.வி.ராஜேந்திரனும் அந்தப் பணிகளையும் செய்ய வேண்டி இருந்தது. பாடல் காட்சியை எடுக்க, பாடலை ஒலிக்கவிடும் நாகரா கருவி அவசியத் தேவை. அதை, கோபு தனது கழுத்தில் மாட்டிக்கொண்டு, சிவாஜி - காஞ்சனாவுக்குச் சமமாக ஸ்டெடி கேமராவின் பின்னால் அங்கேயும் இங்கேயுமாக ஓடிக்கொண்டிருந்தார்.அடுத்து வஹீதாவும் ராஜேந்திரகுமாரும் பாடியாட, அவர்களுடன் ஓடுவார் கோபு.

இப்படி ஓடி ஒரு ராஜா ராணியிடம் பாடல் படமாக்கப்பட்ட அந்த ஒருவாரத்தில் கோபுவின் வயிறு இரண்டு இன்ச் இளைத்து இடுப்பில் பேண்ட் நிற்காமல் அடம்பிடித்தது. நல்ல வேளையாக பெல்ட் எடுத்துச்சென்றதால் இடுப்பு இளைப்புக்கு ஏற்ப அவரே ஓட்டைபோட்டு சமாளித்துக்கொண்டார்.இந்தச் சமாளிப்பு ஒருபுறம் இருக்க, எங்கு சென்றாலும் அசைவ உணவுகளே பிரதானமாக இருந்ததில் சைவப் பிராணியான கோபு திணறிப்போனார்.

அவித்த கீரைகள், யோகர்ட் என்று பல்லைக் கடித்துக்கொண்டு சமாளித்தார். அந்தச் சமயத்தில் கோபுவின் நிலையைக் கவனித்துவிட்ட வஹிதா ரஹ்மான், கஸ்டம்ஸ்காரர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு கொண்டுவந்திருந்த இரண்டு கிலோவுக்கும் அதிகமான ஆவக்காய் ஊறுகாயிலிருந்து ரகசியமாக கோபுவுக்குக் கொடுத்துவந்தார். இந்த ஊறுகாய் விநியோக ரகசியத்தை சிவாஜிமட்டும் மோப்பம் பிடித்துவிட்டார்.

ஊறுகாயில் நீந்திய மீன்

படக்குழுவினர் ஸ்பெயின் நாட்டின் பார்ஸலோனா நகரில் அந்த தேசத்தின் புகழ்பெற்ற கலாச்சார விளையாட்டான காளைக் கொலையை (bull fight) நாயகனும் நாயகியும் பார்ப்பது போன்று படமாக்கி முடித்தனர். படப்பிடிப்பு முடிந்ததும் அந்நகரின் ஆடம்பரமான நட்சத்திர ஹோட்டலில் படக்குழு தங்கியது. அன்று படக்குழுவினர் அந்த ஹோட்டலின் புகழ்பெற்ற டான்ஸ் ஹாலுக்குச் சென்று நடனமாடிவிட்டு, விருந்தில் கலந்துகொண்டனர்.ஒவ்வொரு விருந்து மேஜை மீதும் பத்துப்பேர் சாப்பிடும் அளவுக்கு மீனைச் சமைத்து அழகாக அலங்கரித்து வைத்திருந்தார்கள்.

ஆசையாக அதை முள் கரண்டியில் எடுத்து வாயில் வைத்த சிவாஜிக்கு பகீர். அது உப்பும் உறைப்பும் இல்லாமல் நீராவியில் அவித்த மீன். தனது தம்பியைப் பார்த்து” என்னடா... ஷண்முகம், சமைக்காம அப்படியே வச்சுட்டாங்களா?” கடுப்புடன் கேட்டார் சிவாஜி. பிறகு கோபுவின் பக்கம் திரும்பியவர், ''ஆச்சாரி! உன்னோட ஆவக்காய் ஊறுகாய் கோட்டா வெச்சிருப்பியே. அதை இப்படித் தள்ளு!'' என்று கெஞ்சலாகக் கேட்டார்.

வஹிதா கவனிக்கிறாரா எனப் பார்த்துக்கொண்டு, கோபு டேபிள் அடியில் அதை சிவாஜிக்கு பாஸ் செய்ய, சிவாஜி மட்டுமல்ல, வஹீதா, ராஜேந்திரகுமார் என்று எல்லோரும் ஆவக்காய் ஊறுகாய் தொட்டுக்கொண்டு ஸ்பெயினின் பிரபலமான அந்த நாட்டு மீனைச் சுவைத்தார்கள்.

கோபு சிவாஜியைப் பார்த்து, “அந்நிய மண் வரைக்கும் ஆவக்காய் ஊறுகாய் எடுத்துவாரீயான்னு கிண்டல் பண்ணீங்கள்ல. இப்ப ஸ்பெயின் நாட்டு மீனே அந்த ஆந்திரா ஆவக்காயில நீந்திக்கிட்டுதான் உங்க வயித்துக்குள்ள போகுது!’’ என்றார் கோபு.

(சிரிப்பு தொடரும்)
தொடர்புக்கு: tanthehindu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x