Last Updated : 01 Aug, 2014 12:00 AM

 

Published : 01 Aug 2014 12:00 AM
Last Updated : 01 Aug 2014 12:00 AM

பாலிவுட்டைக் கலக்கும் ஊட்டி பெண்

இயக்குநர் அனுராக் காஷ்யபின் ‘தேவ் டி’ படத்தில் அறிமுகமாகித் தற்போது நட்சத்திர அந்தஸ்தை அடைந்திருக்கும் நடிகை கல்கி கேக்லானின் பின்னணி மிகவும் சுவாரசியமானது. அவரது தந்தை ஜோயல் கேக்லான் பிரான்சிலிருந்து 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்தவர்.

பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் கல்கியின் அம்மா பிரான்காயிஸ் ஆர்மண்டியைச் சந்தித்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஊட்டிக்கு அருகில் உள்ள கல்லட்டியில் கல்கி கேக்லான் பிறந்தார். கல்கியின் தந்தை இலகுரக கிளைடர்களை வடிவமைத்து ஊட்டியில் விற்பனை செய்துவந்தார். கல்கியின் தாத்தா மவுரீஸ் கேக்லான், பிரான்சில் உள்ள ஈஃபில் கோபுரத்தை வடிவமைத்த பொறியாளர்களில் ஒருவர்.

கல்கி, ஊட்டியில் உள்ள ஹெப்ரான் பள்ளியில் படித்தவர். அதற்குப் பின்னர் லண்டன் உள்ள பல்கலைக்கழகத்தில் நாடகத்தைப் பாடமாகக் கற்றார். அங்கேயே தங்கி தியேட்டர் ஆஃப் ரிலேட்டிவிட்டி என்னும் நாடகக் குழுவில் சேர்ந்து புகழ்பெற்ற நாடகங்களில் நடித்தார்.

2009-ல் தேவ் டி படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் கல்கி. பள்ளியிலேயே சக மாணவனுடன் நெருக்கமாக இருக்கும்போது எடுக்கப்பட்ட எம்எம்எஸ்ஸால் பாதிக்கப்பட்டு, பிறகு பெற்றோரால் நிராகரிக்கப்பட்டு மும்மைக்கு வரும் இளம்பெண் லெனியாக நடித்தார் கல்கி.

அப்படத்தில் பகுதிநேரப் பாலியல் தொழிலாளியாக இருண்ட உலகின் கதாபாத்திரத்தை அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார். தேவ் டி படப்பிடிப்பின் போதுதான் அனுராக் காஷ்யபுடன் நட்பு ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

அதற்குப் பிறகு ‘சைத்தான்’, ‘தட் கேர்ள் இன் யெல்லோ பூட்ஸ்’ போன்ற படங்களில் சீரியசான, எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடித்தார். ‘தட் கேர்ள் இன் யெல்லோ பூட்ஸ்’ படத்துக்கு இயக்குநர் அனுராக்குடன் சேர்ந்து கதையும் எழுதினார்.

அற்புதமான திறமைகள் இருந்தும் பாலிவுட்டின் வர்த்தக சினிமா அவரை சீரியசான நடிகையாகவே அதுவரை கருதியது. அனுராக் காஷ்யபுடன் சேர்ந்தே தன்னையும் அடையாளம் கண்டு பாலிவுட் விலக்கி வைத்தது என்று சமீபத்திய நேர்காணலில் நினைவுகூர்ந்துள்ளார் கல்கி.

‘ஜிந்தகி நா மிலேகி டோபாரா’, ‘ஏஹ் ஜவானி ஹை தீவானி’ ஆகிய படங்கள் மூலம் பாலிவுட்டின் வணிக சினிமாக்காரர்களின் கவனம் கல்கியை நோக்கித் திரும்பியது. சிறுபிள்ளைத்தனமான, ஜாலியான கதாபாத்திரத்திலும் தன்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபித்துவிட்டார் கல்கி.

இப்போது கல்கியின் கையில் அடுத்தடுத்துப் படங்கள். இருந்தாலும் தொடர்ந்து நவீன நாடகங்களிலும் ஈடுபாட்டுடன் நடித்துவருகிறார். தற்போது அதுல் குமாரின் ஆங்கில நாடகமான ட்ரிவியல் டிசாஸ்டரில் ஐந்து பாத்திரங்களில் நடிக்கத் தயாராகிவருகிறார். இயக்குநர் அனுராக் காஷ்யபுடனான விவாகரத்துக்குப் பிறகும் அவருடன் தொடர்ந்து ஆரோக்கியமான நட்பு நிலவுவதாகக் கூறுகிறார்.

தற்போது ‘ஹேப்பி எண்டிங்ஸ்’, ‘மார்க்கரிட்டா வி எ ஸ்ட்ரா’, ‘ஜியா அவுர் ஜியா’ என மூன்று படங்களில் நடித்துவருகிறார். இதுபோக ஒரு குறும்படத்திலும் மார்க்கரிடா படத்தில் மூளை இசிவு நோயால் பாதிக்கப்பட்ட டீன் ஏஜ் பெண்ணாகவும் நடித்துள்ளார்.

சக்கர நாற்காலியிலேயே வாழ்க்கையைக் கழிக்க வேண்டிய பெண்ணின் கதாபாத்திரம் அது. அந்தப் பெண் தனது பாலியல் தேவைகளை எப்படிப் பூர்த்தி செய்துகொள்கிறார் என்பதுதான் கதை. எல்லா மனிதர்களையும் போலஅவர்களது அடிப்படை உணர்ச்சிகளையும் பேசும் கதை இது என்கிறார் கல்கி.

ஜியா அவுர் ஜியாவோ இதற்கு நேர்மாறான பாலிவுட் பொழுதுபோக்குப் படம். டான்சும் கூத்துமான படம் இது. இரண்டு தோழிகள் சேர்ந்து அட்டகாசம் செய்யும் படம். பாலிவுட்டில் இரண்டு நண்பர்கள் சேர்ந்து செய்யும் குறும்புகளை மையமாக வைத்துப் பல படங்கள் வந்ததுண்டு.

கல்கி பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும், அவரது வெள்ளை நிறம் இன்னும் பெரும் தடையாகவே உள்ளது. ஆரம்பத்தில் அவர் நடித்த படங்களில் வெள்ளைக்காரக் கதாபாத்திரங்களிலேயே நடிக்கவும் செய்தார்.

ஆனால் மெதுவாக அந்த அடையாளத்தையும் மாற்றிவருகிறார். மார்க்கரிட்டா படத்தில் பஞ்சாபி பெண் கதாபாத்திரத்தில் வருகிறார். ஆனாலும் அவரால் ஒருபோதும் தென்னிந்திய, தமிழகத்துக் கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் நடிக்கவே முடியாது என்ற கவலை இருக்கிறது. ஆனாலும் ஊட்டியில் பிறந்ததால் கல்கி தமிழ்ப் பெண்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x