Last Updated : 20 Apr, 2018 10:19 AM

 

Published : 20 Apr 2018 10:19 AM
Last Updated : 20 Apr 2018 10:19 AM

ஏப்ரல் 20: கே.சுப்ரமணியம் பிறந்தநாள்: திரையரங்கில் தடியடி!

வி

டுதலைப் போராட்டம், காந்தியக் கொள்கைகள் இரண்டையும் ஆதரித்துத் தொடக்கம்முதலே துணிந்து படமெடுத்தவர் வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டு சினிமா இயக்கவந்த கிருஷ்ணசாமி சுப்ரமணியம். அவரது ‘பாலயோகி’ படம் சாதிக் கொடுமையைக் கடுமையாகச் சாடியது. இதனால் தனது சொந்த சாதியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டார்.

அவரது ‘தியாகபூமி’ விடுதலை இயக்கத்திலும் சமூக சீர்திருத்தத்திலும் இணைய மக்களை அழைத்தது. இந்தப் படத்தின் தொடக்கக் காட்சியில் ஊருக்குள் வெள்ளம் புகுந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகள் நீரில் மூழ்கிவிடும். வீடற்ற அவர்களுக்குக் கோயிலுக்குள் அடைக்கலம் கொடுப்பார் பூசாரி சாம்பு. அவர் காட்டிய மனிதாபி மானத்துக்காக அவர் சாதி விலக்கம் செய்யப்படுவார். படத்தின் பின்பாதியில் அந்தப் பூசாரியின் மகளான சாவித்திரி, அடக்கி, ஒடுக்கும் தன் கணவனுக்கு எதிராகச் சுதந்திரக் குரல் எழுப்புவாள். கல்கி எழுதி ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து பிரபலமான இந்தக் கதையைப் படமாக்கிய சுப்ரமணியத்தின் இந்தப் படத்தை எஸ்.எஸ்.வாசன் வாங்கி விநியோகித்தார்.

சென்னையில் கெயிட்டி திரையரங்கில் படம் வெளியாக இருந்த நிலையில் பிரிட்டிஷ் அரசு படத்துக்குத் தடை விதித்தது. இதை அறிந்துகொண்ட கே.சுப்ரமணியம் வாசனிடம் கேட்டுக்கொள்ள அவர் ‘காட்சிகள் இலவசம்’ என்று அறிவித்தார். மக்கள் குவிந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் போலீஸார் தடியடி நடத்தி ரசிகர்களைத் துரத்தினர். ஆனால், அடிக்கு அஞ்சாமல் திரையரங்கை நிறைத்தனர். கல்கி எழுதி, டி.கே. பட்டம்மாள் பாடிய ‘தேச சேவைசெய்ய வாரீர்’ என்ற பாடல் இடம்பெற்ற இப்படம் மக்களிடம் பெரும் தாக்கத்தை உருவாக்கியது. கே.சுப்ரமணியம் ‘தேசாபிமான இயக்குநர்’ ஆனார். பின்னாளில் பி.பி.சி.வானொலி அவரைப் பேட்டி கண்டபோது கெயிட்டி திரையரங்கத் தடியடி நிகழ்வை நினைவுகூர்ந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x