Last Updated : 24 Nov, 2017 10:20 AM

Published : 24 Nov 2017 10:20 AM
Last Updated : 24 Nov 2017 10:20 AM

தரணி ஆளும் கணினி இசை 10: நவீனத்துக்கு ஈடுகொடுக்கும் நாகரா!

கதாபாத்திரம் சந்திக்கும் சூழ்நிலை, அதனால் அது எதிர்கொள்ளும் மனநிலை ஆகிய இரண்டு காரணங்கள் ஏற்படுத்தும் தாக்கம், ஒரு பாடலுக்கான மெட்டைக் கற்பனை செய்யத் தூண்டுகிறது. மெட்டு எனும்போது அதன் வடிவம்தான் கதாபாத்திரத்தின் மவுனக் குரல். அந்த மவுனக் குரலைப் பார்வையாளர்களுக்கு, சக கதாபாத்திரத்துக்கு வெளிப்படையாக உணர்த்த வரிகள் தேவை.

பாடலுக்கு வடிவமும் வரிகளும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அந்த இரண்டு அம்சங்களையும் சிதைக்காமல் வெளிப்படுத்தும் பாடகரின் குரல். திறமையான பாடகராக இருந்தாலும் பாடலின் முழுமையான வடிவத்தைத் தன் குரல்வழியே நூறு சதவீதம் வெளிப்படுத்த முடியாமல்போவது பாடகரின் குறை என்று கருதத் தேவையில்லை. ஒவ்வொரு பாடகருக்கும் கைவரப்பெற்ற ‘ரேஞ்ச்’தான், அவர்கள் பாட வேண்டிய பாடல்களை அவர்களிடம் கொண்டுவந்து சேர்க்கிறது என்று சொல்வேன்.

ஹரிஹரன் டூ மதுபாலகிருஷ்ணன்

‘ஞானக்கிறுக்கன்’ படத்தில் எனது இசையமைப்பில் யுகபாரதி எழுதிய ‘யாரை நம்பி நான் வந்தது’ என்ற ஹை-பிட்ச் பாடலைப் பாடும்படி எஸ்.பி. பாலசுப்ரமணியத்திடம் கேட்டபோது, ‘சரணத்தில் வரும் ‘ஹை நோட்’களைக் கொஞ்சம் குறைத்தால் பாடுகிறேன் என்றார். அவர் கேட்டபடி குறைத்தபோது மெட்டின் தீவிரம் குறைந்ததைக் கண்ட படத்தின் இயக்குநர் “ எனக்கு இந்தப் பாடலில் மாற்றம் எதுவும் இல்லாமல் அப்படியே வேண்டும்” என்று பிடிவாதம் காட்டினார்.

வேறு வழியில்லாமல் மும்பையிலிருக்கும் பாடகர் ஹரிஹரனுக்கு ட்ராக் பாடலை அனுப்பினேன். ட்யூனை கேட்டவர், எஸ்.பி.பி சொன்ன அதே இடத்தைக் குறிப்பிட்டு “கொஞ்சம் நோட்ஸைக் குறைக்க முடியுமா?” என்று கேட்டதும் ஆடிப்போய்விட்டோம். இயக்குநரின் ஃபீலை அவருக்கும் எடுத்துக்கூறிவிட்டு மும்பையிலிருந்து சென்னை திரும்பியதும் மீண்டும் பாடகர் வேட்டை தொடங்கியது.

அடுத்து பாடகர் மது பாலகிருஷ்ணன். ட்யூனைக் கேட்டவர், “அதுக்கென்ன... பாடிடலாம்” என்று ஸ்டுடியோவுக்கு வந்துவிட்டார். பாடல்பதிவு அருமையாகத் தொடங்கியது. சரியாக அந்த ‘ஹை-பிட்ச் இடம் வந்ததும் இவருக்கும் தொண்டை, சண்டை பண்ண ஆரம்பித்துவிட்டது. திரும்பத் திரும்ப முயன்றும் முடியாத நிலையில், “அந்த இடத்தை மட்டும் விட்டுவிட்டு மற்ற வரிகளை முதலில் பாடி முடித்துவிடுங்கள்” என்றேன். அப்படியே செய்தவர், “ அந்த ஹை நோட்’களை ஊருக்குப்போய்ப் பாடி அனுப்பிவிடுகிறேன் என்று மும்பைக்குக் கிளம்பிப்போனார். அவர் கூறியதைப் போலவே அடுத்த நாள் பாடி அனுப்பிவிட்டார். நானும் இயக்குநரும் மகிழ்ந்தோம்.

அன்றும் இன்றும்

பாடல்களை ஒரே மூச்சில் பாடிய காலம் இன்று இல்லை. கணினி இசைத் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதால் ஸ்ருதிக்கான மென்பொருட்களைப் பயன்படுத்தி அதைச் சரிசெய்வது மட்டுமல்ல, பல்லவி சரணம் எதுவென்றாலும் இரண்டு இரண்டு வரிகளாகப் பாடவைத்து பாடகர்களின் சுமையைக் கூட குறைத்துவிடுகிறோம். ஆனால், எஸ்.பி.பி போன்ற ஜாம்பவான்கள் தொழில்நுட்பத்துக்கே சவால்விடும் திறமைகொண்டவர்கள். எஸ்.பி.பி. பாட வந்தார் என்றால் பல்லவி முழுவதையும் பாடுவார், சரணங்களையும் ஒரே மூச்சில் பாடிவிடுவார்.

நமது ட்யூன் 80 சதவீதம் இருக்கிறது என்றால் அவர் தனது குரல் மற்றும் பாடும் திறமையால் மெட்டை, சிறிதும் கீறிவிடாமல் நகாசுகள் செய்து 100 சதவீதமாக மாற்றிக்கொடுத்துவிடுவார். எஸ்.பி.பியைப் போன்றவர்கள் இன்றைய தலைமுறைப் பாடகர்களில் இல்லையா என நீங்கள் கேட்கலாம். இருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியம்! சமீபத்தில் ஒரு நிமிட நேரம் கொண்ட ஒரு விளம்பர ஜிங்கிள் பாடலைப் பாடும்படி சுர்முகி ராமன் என்னும் பாடகியை அழைத்தேன். இரண்டிரண்டு வரியாக அவர் பாட, பாடல் பதிவில் ‘பன்ச்’ செய்துகொள்ளத் தயாரானபோது அவர் முழுப் பாடலையும் ஒரே ‘பன்ச்’-ல் பாடி அசத்திவிட்டுப்போனார்.

அனலாக் அற்புதம்

எஸ்.பி.பியைப் பற்றிக் குறிப்பிடும்போது இன்னொரு முக்கியமான விஷயத்தைக் கண்டிப்பாகக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அவரைப் பாட அழைத்தால் வரும்போது மறக்காமல் தனது கேசட் ரெக்கார்டர் வாக்மேனை எடுத்துவருவார். பதிவுக்கூடத்தில் ட்யூனை ஒலிக்கச் செய்து அதில் பதிவு செய்துகொள்வார். பின்னர், பாடல் வரிகள் அச்சிடப்பட்ட தாள்களை வாங்கிக்கொண்டு ரெக்கார்டிங் அறைக்குள் சென்று 20 நிமிடம் எடுத்துக்கொண்டபின் “ ரெடி” என்று கூறியபடி பாடத் தயாராகிவிடுவார்.

இன்று என்னதான் நூற்றுக்கணக்கான ஒலித்தடங்களைப் பதிவுசெய்யும் டிஜிட்டல் பதிவுமுறை வந்துவிட்டாலும் ‘மெக்னெடிக் டேப்’பில் பதிவு செய்த அனலாக் ஒலிமுறையில் கேட்டபின் அவர் பாடுவதே அவருக்கு ஏற்புடையதாகவும் பழகிய ஒன்றாகவும் இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். இந்த இடத்தில் கணினி இசை டிஜிட்டல்மயமாகி அதன் வளர்ச்சி பல எல்லைகளைத் தொட்டுச் சென்றுகொண்டிருக்கும்போது, ‘நாகரா’ என்ற அனலாக் அதிசயம் நவீனத்துக்கு ஈடுகொடுத்து இன்றும் தன்னை தக்கவைத்துக்கொண்டிருக்கிறது.

மீண்டு(ம்) வரும் பழமை

அது என்ன நாகரா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. திரையிசையோடு நெருங்கிய தொடர்புகொண்ட ஒரு சாதனம். பாடல் காட்சிகளை இந்த நாகரா இல்லாமல் படமாக்க முடியாது. இந்தக் கருவியை இயக்குபவருக்குப் பெயர் நாகரா கலைஞர். படப்பிடிப்புத் தளத்தில் அவரை “ நாகரா” என்றுதான் அழைப்பார்கள். வயதில் சிறியவர்கள் “ நாகரா அண்ணே..” என்பார்கள். உள்ளூரில் படப்பிடிப்பு என்றால் இசையமைப்பாளரின் ஸ்டுடியோவுக்கு ட் மெக்னெடிக் டேப் ஸ்பூல் பொருத்தப்பட்ட நாகரா கருவியுடன் வந்து, ‘அனலாக்’ அவுட் மூலம், படம்பிடிக்கப்பட இருக்கும் பாடலைப் பதிவு செய்துகொள்வார்.

இப்படிப் பதிவுசெய்துகொள்ளும் பாடலில் துல்லியமான டெம்போவுடன் இருக்கும். இப்படி அனலாக் முறையில் தரமான ஒலித்தரத்தில் பாடலைப் பதிவுசெய்ய நாகராவில் இருக்கும் ‘கிரிஸ்டல்’ என்ற ஹெட் உதவுகிறது. இந்தக் கருவியில் பாடலின் வேகத்தைத் துல்லியமாக நிர்ணயித்துக்கொள்ளும் டைம் கோட் வசதி, ஃபார்வர்டு, ரீவைண்ட் வசதிகள் இருக்கும். அதனால் நடன இயக்குநர் பாடலின் தொடக்க இசை, பல்லவி வரிகள், சரண வரிகள், இடையில் உள்ள இசைக்கோவை ஆகியவற்றைத் தனித்தனியே பிரித்து, அவற்றை நாகரா மூலம் எத்தனை முறை வேண்டுமானாலும் சரியான டெம்போவில் (பாடலின் வேகம்) ஒலிக்கவிட்டு, அதற்கு நட்சத்திரங்களை வாயசைக்கவும் ஆடவும் வைத்துப் படமாக்குகிறார்.

தவறான டெம்போவில் பாடலைப் படமாக்கிவிட்டால் அந்தப் பாடலைப் படத்தில் பயன்படுத்த முடியாது. தற்போது அதிநவீன ‘2.0’ படத்துக்கும் நாகராவின் உதவியுடன்தான் பாடல் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. நாகராவுக்கு மாற்றாக டிஜிட்டலில் நாளை புதிய சாதனங்கள் அறிமுகப்படுத்தப்படலாம். ஆனால், நாகராவின் இடத்தை அது நிரப்ப முடியுமா என்பது சந்தேகம்தான்.

தெனாலியில் தொடங்கிய எம்.பி.3

நாகராவுடன் எனக்கொரு சுவாரசியமான தொடர்பு உண்டு.கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் கமல் ஹாசன், ஜோதிகா நடித்த ‘தெனாலி’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை. அப்போது அவரிடம் நான் பணியாற்றிக்கொண்டிருந்தேன். உரையாடல், பாடல் காட்சிகளைப் படமாக்க ஏற்கெனவே படக்குழு ஆஸ்திரேலியா சென்றுவிட்டது. கடைசி மூன்று நாட்கள் ‘சுவாசமே…சுவாசமே..’ என்ற பாடல் காட்சியைப் படமாக்கிக்கொள்ளலாம் என்றும் இயக்குநர் திட்டமிட்டிருக்கிறார்.

அந்த மூன்று நாட்கள், சென்னையிலிருந்து நாகரா கலைஞர் ஆஸ்திரேலியாவுக்கு வந்து, அங்கிருந்து படப்பிடிப்புத் தளத்துக்கு அவர் வந்துசேர இரண்டு நாட்கள் என மொத்தம் ஐந்து நாட்கள் மட்டும் நாகராவைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று படக்குழு திட்டமிட்டிருந்திருக்கிறது.

ஆனால், உரையாடல் காட்சிகளின் படப்பிடிப்பு திட்டமிட்ட மூன்று நாட்களுக்கு முன்னதாகவே படபடவென்று முடிந்துவிட்டது. அதனால் பாடல் காட்சியைத் திட்டமிட்ட மூன்று நாட்களுக்கு முன்னதாகவே படமாக்க முடிவு செய்து, ‘இங்கே நாகரா கருவி வாடகைக்குக் கிடைக்கிறது பாடலை மின்னஞ்சல் வழியே இங்கே தரவிறக்கிக்கொள்ள வழி இருக்கிறதா என்று கேட்டார்கள். மெயிலில் 25 எம்.பி அளவுக்குமேல் கோப்புகளை அனுப்ப முடியாது.

நான் உடனடியாக ஆஸ்திரேலியாவில் எனக்குத் தெரிந்த சவுண்ட் இன்ஜினீயரை அழைத்தேன். சுவாசமே பாடலை எம்.பி. 3 பார்மேட்டில் மாற்றி, 4 எம்.பி அளவுகொண்ட பைலாகச் சுருக்கி அவருக்கு அனுப்பினேன். அடுத்த நிமிடமே பாடலை அங்கே தரவிறக்கி, அனலாக் அவுட் மூலம் நாகரா கருவியில் பதிவு செய்துகொண்ட படக்குழு நாகரா கலைஞருக்காகக் காத்திருக்காமல் சரியான டெம்போவில் பாடலைப் படமாக்கி முடித்துவிட்டார்கள்.

‘தெனாலி’யில் நான் தொடங்கி வைத்த இந்த யோசனையை, வெளிநாடுகளில் பாடல் படப்பிடிப்பு நடத்தும் சிறு, நடுத்தர பட்ஜெட் படங்களுக்குப் பயன்படுத்துகிறார்கள். தேவையின் அடிப்படையில் பிறந்த இந்த ‘ஐடியா’வுக்கு இன்று தேவை ஏற்பட்டிருப்பதைப் போல் பழைய அனலாக் முறையை இன்றைய டிஜிட்டல் இசைக்கு நடுவே விலை உயர்ந்த ஒரு தயாரிப்பாக விற்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? அதைப் பற்றி அடுத்த வாரம்…

(தொடர்ந்து பகிர்வேன்)
தொடர்புக்கு: tajnoormd@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x