Published : 27 Nov 2017 08:59 AM
Last Updated : 27 Nov 2017 08:59 AM

திரை விமர்சனம்: இந்திரஜித்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சூரியனில் இருந்து அதிசயக் கல் ஒன்று பூமியில் விழுகிறது. மருத்துவ குணங்கள் நிரம்பிய அந்தக் கல்லை அந்நியப் படையெடுப்புகளில் இருந்து காப்பாற்ற வட இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் பாதுகாத்து வைக்கின்றனர் சித்தர்கள். அந்தக் கல் கிடைத்தால், நாட்டு மக்களை நோயின்றி வாழவைக்க முடியும் என்று தெரிந்துகொள்கிறார் கோவாவில் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் அதிகாரியான பேராசிரியர் மயில்வாகனன் (சச்சின் கேடேகர்). 4 ஆண்டுகளாகப் போராடியும் அந்தக் கல் கிடைக்கவில்லை.

இதையடுத்து, அவர்களுக்கு உதவ வருகிறார் இந்திரஜித் (கவுதம் கார்த்திக்). தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் தற்போதைய அதிகாரியான கபில் ஷர்மாவும் (சுதான்ஷு பாண்டே) அதே கல்லைத் தேடி களமிறங்குகிறார். இந்திரஜித் குழுவினரை தனது அடியாட்களுடன் பின்தொடர்கிறார். அவரால் ஏற்படும் தடைகளையும், மாவோயிஸ்ட்களின் எதிர்ப்பையும் மீறி, அதிசயக் கல்லை இந்திரஜித் கண்டுபிடித்தாரா என்பது மீதிக் கதை.

‘சக்கரக்கட்டி’ படத்தில் இயக்குநராக அறிமுகமான கலாபிரபு, 9 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கியுள்ள அதிரடி, சாகசத் திரைப் படம். பிரபல ஹாலிவுட் சீரீஸ் திரைப்படமான ‘இண்டியானா ஜோன்ஸ்’ பாணியில் ஒரு படம் பண்ண ஆசைப்பட்டிருக்கிறார். கதை சுவாரசியமாகத் தெரிந்தாலும், திரைக்கதையில் சுவாரசியமோ, நம்பகத்தன்மையோ இல்லை. காட்சிகளில் தொடர்ச்சி இல்லாமல் திரைக்கதை பல இடங்களில் தடுமாறுகிறது. மாவோயிஸ்ட்கள் பற்றிய சித்தரிப்பு சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது.

கதாநாயகன் உண்மையான எந்தத் தடைகளையும் எதிர்கொள்ளாமல் வெறுமனே சாகசங்கள் நிகழ்த்திக்கொண்டே போகிறார். யானையில் சவாரி செய்பவராக கதாநாயகியை அறிமுகப்படுத்துவது போல சில விஷயங்கள் மட்டுமே ஈர்க்கின் றன.

சண்டைக் காட்சிகள், நடனத்தில் நாயகன் கவுதம் கார்த்திக் குறை வைக்கவில்லை. ஆனால், நடிப்பில் முன்னேற்றம் இல்லை. படத்தில் அஷ்ரித்தா ஷெட்டி, சோனாரிகா என 2 கதாநாயகிகள் இருந்தும், நடிப்பதற்கு வாய்ப்பு இல்லை. வனப் பகுதியில் இந்திரஜித் குழுவினருக்கு பாதுகாவலராக வரும் எம்.எஸ்.பாஸ்கரின் நகைச்சுவை, சில இடங்களில் சிரிப்பையும், சில இடங்களில் களைப்பையும் ஏற்படுத்துகின்றன.

சச்சின் கேடேகரும், சுதான்ஷு பாண்டேவும் பாத்திரத்தின் தன்மையை உள்வாங்கி நன்றாக நடித்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு பின்னணி பேசியவர்களின் குரல் பொருந்தவில்லை.

படத்தின் முதல்பாதியில் வரும், தேவையற்ற ஹீரோ அறிமுக பாடல், கண்ணியமற்ற காதல் காட்சிகள் முகத்தைச் சுளிக்க வைக்கின்றன. தமிழ் திரைப்பட கதாநாயகர்கள் கதாநாயகிகளிடம் கண்ணியமற்ற வகையில் நடந்துகொண்டு அதை ‘ஹீரோயிஸம்’ என்று இன்னும் எவ்வளவு காலத்துக்கு சொல்லப்போகிறார்கள் என்று தெரியவில்லை.

படத்தின் பெரும் பகுதி அருணாச்சலப் பிரதேசத்தின் காடுகளில் படமாக்கப்பட்டுள்ளன. ஒளிப்பதிவாளர் ராசாமதியின் கேமரா இதை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளது. கார் சேஸிங் காட்சிகளில் வனப்பகுதியின் அடர்த்தியை டாப்ஆங்கிள் ஷாட்கள் மூலம் கண்களுக்கு விருந்தாக்கியுள்ளார். இசையமைப்பாளர் கேபியும் படத்தை ஓரளவு காப்பாற்றியிருக்கிறார். அதிசயக் கல் பற்றி பேராசிரியர் தெரிந்துகொண்ட கதையை கிராஃபிக்ஸ் பயன்படுத்தி சொல்லியிருப்பது சிறப்பு.

கிளைமாக்ஸ் ட்விஸ்ட் நம்பகத்தன்மையுடன் கட்டமைக்கப்படவில்லை. நல்ல கதை இருந்தும் படமாக்குவதில் கோட்டைவிட்டிருக்கிறார் இயக்குநர் கலாபிரபு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x