

இனம், மொழி, பண்பாடு ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டு, அடித்தட்டு மக்களை அணிதிரட்டி வெற்றிகண்டது, இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சமூக, அரசியல் எழுச்சியாக உருவெடுத்த திராவிட இயக்கம். அந்த இயக்கத்தைப் பெரும் சமூக அசைவியக்கமாக மாற்றிய தளகர்த்தர்களில் பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி ஆகிய மூவரது எழுத்தாளுமைக்கு பெரிய பங்கு இருப்பதை வரலாறு பதிவுசெய்திருக்கிறது.
திராவிட இயக்கம் வேர்பிடித்து, ஆலமரமாகத் தழைத்து, தேர்தல் அரசியலில் வெற்றிகண்டு பலன் கொடுக்கத் தொடங்கியதன் பின்னணியில் திரைப்படத்தை ஒரு கலைஆயுதமாகப் பயன்படுத்திய அண்ணா, கருணாநிதி இருவருக்கும் பெரிய பங்கிருக்கிறது.
கவிஞர் வைரமுத்துவின் வார்த்தைகளில் சொல்வதென்றால்: “கருத்துகளை மக்களிடம் முன்னெடுத்துச் செல்ல, அன்றைக்கு மூன்றே மூன்று ஊடகங்கள் மட்டும் இருந்தன. ஒன்று, மேடை; இன்னொன்று, பத்திரிகை; மூன்றாவது, திரைப்படம். பெரியார் முதலிரண்டு ஊடகங்களை வெற்றிகொண்டார். சினிமா என்கிற மூன்றாம் ஊடகத்தை முற்றிலும் வெறுத்தார்.
பெரியார் வெறுத்த திரையை அண்ணாவும் அவருடைய தம்பி கருணாநிதியும் கவனமாகக் கைப்பற்றினார்கள். அதில் அந்த இருவருக்கும் பொருளும் புகழும் கிடைத்தன. அதைவிட, யாருக்குச் சென்று சேர வேண்டுமோ அந்தக் கடைக்கோடி மக்களுக்கு இயக்கத்தின் நோக்கம் சென்று சேர்ந்தது. ‘நல்லதம்பி’, ‘வேலைக்காரி’, ‘ஓர் இரவு’ போன்ற குறிப்பிடத்தக்கப் படங்களில் மட்டும்தான் அண்ணா தனது பங்களிப்பை ஆற்றினார்.
கருணாநிதியோ தன் அரசியல் வாழ்வின் இணை கோடாகத் திரைக்கலையைக் கைக்கொண்டிருந்தார். அண்ணாவின் கலை எழுத்து ஆழமானது; கலைஞரின் கலை எழுத்தோ அழகும் ஆழமும் இணைந்தது. யாருடைய உரிமை மீட்சிக்காக இயக்கம் தொடங்கப்பட்டதோ, அந்த வெகுமக்களைச் சென்றுசேரவும் தொடங்கப்பட்ட 17 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடிக்கவும் முக்கியக் காரணங்களில் ஒன்றாக இருந்தது திரைப்படம்” எனப் பதிந்திருக்கிறார். வெகு மக்களை மட்டுமல்ல; அக்கூட்டத்தி லிருந்து எழுந்து வந்து, பின்னாளில் இலக்கியம், சினிமா ஆகியவற்றில் சிகரம் தொட்டு நின்றவர்களைக் கலைஞரின் திரை எழுத்துப் பேரளவில் ஆர்கஷித்தது.
ஆளுமைகளின் பார்வையில்.. அவர்களில் கமல்ஹாசனின் நினைவுகூரல் இது: “மூன்றரை வயதுப் பையனாக நான் நடிக்க வந்த காலகட்டத்தில், கலைஞரின் வசனத்தை அழகாகப் பேசிக்காட்டுவதுதான் கோடம்பாக்கத்துக்கான கேட் பாஸ். ‘உனக்கு நீச்சல் தெரியுமா?’ என்று யாராவது கேட்டால், குளத்தில் நீச்சல் அடித்துக் காட்டுவோம் அல்லவா! அதைப் போல், கலைஞரின் வசனங்களை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தொனியில் பேசிக் காட்டித்தான் அந்த வயதில் நான் சினிமாவுக்குள் வந்தேன்”.
கமல்ஹாசன் மதிக்கும் மணி ரத்னம், தமிழ் சினிமாவுக்கு ‘இந்திய சினிமா’ என்கிற அடையாளத்தைப் பெற்றுக்கொடுத்தவர். அவரிடம் கலையுலகக் கருணாநிதி செலுத்திய தாக்கம் எப்படிப்பட்டது?: “எனது இளவயதில் இரண்டு விஷயங்கள் என்னைச் செதுக்கின. ஒன்று, திராவிட இயக்கம், மற்றொன்று, திராவிட சினிமா. பகுத்தறிவு, சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றை எங்களுக்குக் கற்றுத் தந்த இயக்கம் அது.
கடந்த 40 வருடங்களாகத் திரைப்படத் தலைப்பு தொடங்கி, எல்லாவற்றிலும் தமிழைப் பயன்படுத்துகிறேன் என்றால், அதற்குக் காரணம் கருணாநிதிதான்” என்கிறார். வைரமுத்து, கமல்ஹாசன், மணி ரத்னம் ஆகிய மூன்று பெரும் ஆளுமைகள் கொண்டாடும் தமிழர்களின் மற்றொரு கலை அடையாளம் இன்று எண்பதாம் அகவையில் நுழையும் இளையராஜா. அவர், “தானே எழுத்தாகி, தானே சொல்லாகி, தானே பொருளாகி, தானே யாப்புமாகி, தானே அணியுமாகி, கவிதையாய்த் தன்னைத் தானே எழுதிக்கொண்ட அழகான கவிதை கருணாநிதி” என்று மதிப்பிட்டிருக்கிறார்.
பல்கலைக்கழகம்: அது உண்மையும்தான்! 14 வயதில் எழுதத் தொடங்கிய மு.கருணாநிதியிடம் மிகுந்திருந்த மொழிவளம், அவரை இளமையிலேயே படைப்பாளி ஆக்கியது. அண்ணா, இரா.நெடுஞ்செழியன், க.அன்பழகன், கே.ஏ.மதியழகன் உள்ளிட்ட திமுகவின் முன்னணித் தலைவர்களைப் போல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பயின்றவர் அல்ல கருணாநிதி. உயர்நிலைப் பள்ளியைத் தொட்ட அவர், எந்த ஊடகத்துக்கு, எந்த வடிவத்தில், எப்படிப்பட்ட பொருளை, எத்தகைய மொழியில் பேச வேண்டும் என்கிற புரிதலில் ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர் அளவுக்குப் புலமை பெற்றிருந்தார்.
அதனால்தான் அவரால் 30 வயதுக்குள் 36 நாடகங்களை எழுத முடிந்தது. பெரியாரும் அண்ணாவும் நடத்திய பத்திரிகைகளுக்குக் கட்டுரைகளை எழுதிக் குவிக்க முடிந்தது. பகுத்தறிவு, சுயமரியாதை ஆகியவற்றில் மிகுந்த பற்றுகொண்டிருந்த காரணத்தால்தான் அவரால் ‘முரசொலி’ என்கிற ஒரு பத்திரிகையைத் தொடங்கி நடத்த முடிந்தது.
பெரியாரும் அண்ணாவும் ஊட்டிய பகுத்தறிவை மேலும் பலப்படுத்திக் கொண்டபோது, பௌத்தமும் சமணமும் கொண்டிருந்த பன்மைத்துவத்தைப் புரிந்துகொண்ட கருணாநிதி, அவற்றின் காப்பியங்களில் மனதைப் பறிகொடுத்தார். பொதுக்கூட்ட உரைகளிலும் பத்திரிகை எழுத்திலும் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐம்பெரும் காப்பியங்களின் காட்சிச் சூழ்நிலைகளைப் பொருத்திப் பயன்படுத்தினார். அக்காப்பியக் கதைகளின் வடிவமும் வளமையும் தத்துவப் பார்வையும் கலைஞருக்கு நாடக எழுத்து, திரை எழுத்துக்கான அடிப்படைக் கட்டுமானத்தை அணுகுவதற்கு உதவின.
1949இல் திமுக தொடங்கப்பட்டபோது. புகழ்பெற்ற திரைப்படக் கதை, வசனகர்த்தாவாக, அரசியல் கட்டுரையாளராகப் பெயர் பெற்றிருந்தார் கருணாநிதி. பத்திரிகைக்கான எழுத்து, திரையாக்கத்துக்கான எழுத்து ஆகிய இரண்டிலும் அவருடைய அடுக்குமொழி விளையாட்டும் சிலேடைப் பொருளும் இயல்பை மீறிடாத அங்கத நகைச்சுவையும் கூர்மையான ஒற்றை வாக்கியங்களும் திராவிட இயக்கத்தின் கொள்கைப் பிரச்சாரத்துக்கு, அதை முழு வீச்சுடன் முன்னெடுத்த திரைப்படத் துறைக்கு வாகனச் சக்கரங்களாக அமைந்தன.
காலத்தின் தேவையைப் பிரதிபலித்த எழுத்து! - நாடு விடுதலை அடைந்தபோது, திராவிட இயக்கத்தின் தேவை தமிழ்நாட்டில் உணரப்பட்டதைப் போல், புராணங்களின், புனைவுகளின் பெருமையைப் பாடல்கள் வழியே பேசிப் பேசிக் களைத்துப்போயிருந்த தமிழ் சினிமாவுக்குள் சமூக சினிமாவின் தேவையைப் பிரதிபலித்தது கருணாநிதியின் திரை எழுத்து. “பிறக்க ஒரு நாடு, பிழைக்க ஒரு நாடு, தமிழ்நாட்டின் தலையெழுத்துக்கு நான் என்ன விதிவிலக்கா?” என்று ‘பராசக்தி’யில் (1952) சொந்த தேசத்தின் அகதியாக ஒலித்த குணசேகரனின் குரல், கடல் கடந்து பிழைக்கப்போன தமிழர்களின் மனதைப் பிசைந்தது.
நொண்டியடித்துக்கொண்டிருந்த சுதந்திர இந்தியாவின் தொடக்க ஆண்டுகளில் வறுமையிலும் வெறுமையிலும் சிக்கிக் கிடந்த அடித்தட்டு மக்களின் கண்ணீரை, கவலையை, உரிமைக் குரலை, காலத்தின் தேவையாகக் கொட்டித் தீர்த்தது. குணசேகரனின் தங்கை, கல்யாணியின் சீற்றத்தில் தங்களைப் பொருத்திக் கொண்டார்கள் தமிழ்ப் பெண்கள். “குழந்தையைக் கொல்வது குற்றம்... ஆக்கப்பட்டப் பொருட்கள் அனைத்தும் அரசாங்கத்துக்குச் சொந்தம்” என்று குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்பட்ட கல்யாணியைப் பார்த்து நீதிபதி கண்டிக்கிறார்.
அப்போது கல்யாணியாக மாறும் கருணாநிதி, “சொந்தம்..! பட்டினிப் புழுக்களாகத் துடித்தோம்..., நெளிந்தோம்... அப்போதெல்லாம் சொந்தம் பாராட்டி ஆதரிக்கவில்லை அரசாங்கம். அநீதியிடையே வாழ வேண்டாம், இறப்புலகில் இன்பம் காண்போம் என்று சாவதற்குச் சென்றால், சட்டம் என்கிற கையை நீட்டிச் சொந்தம் என்கிற சூழ்ச்சி மொழி பேசுகிறது அரசாங்கம். அதிசயமான அரசாங்கம்; அற்புதமான நீதி” என்று எளியவர்களின் வலியை உணர முயலாத அரசு இயந்திரத்தை அடித்துத் துவைத்திருக்கிறார்.
புராண, சரித்திரக் கதைகளையே இரு பத்தாண்டுகள் பார்த்துப் பழகியிருந்த தலைமுறைக்கு, சரித்திர ஓரங்க நாடகங்களைச் சமூக சினிமாவுக்கான திரைக்கதைக்குள் இடையீடாக நுழைத்து, மொழிப்பற்று, இனப்பற்றை ஊட்டி, கடவுள் மறுப்பை நிறுவிக்காட்டி, டெல்லி சர்வாதிகாரத்தின் முன்னால் மண்டியிடாதே எனச் சுயமரியாதையும் சொல்லிக்கொடுத்தார் கலைஞர். பீம்சிங் இயக்கத்தில், சிவாஜி - பத்மினி நடித்த ‘ராஜா - ராணி’ படத்தில் இடம்பெற்ற ‘சாக்ரட்டீஸ்’ ஓரங்க நாடகம் இதற்கொரு சிறந்த எடுத்துக்காட்டு.
“ஏற்றமிகு ஏதென்ஸ் நகரத்து எழில்மிக்க வாலிபர்களே.. சிந்திக்கக் கற்றுக்கொள்ளுங்கள் என்று உங்களைச் சிரம் தாழ்த்தி அழைக்கிறேன்... அறிவு... அறிவு... அது உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அதைத் தேடிப் பெறுவதற்காக உங்களை அழைக்கிறேன்... நாற்றமெடுத்த சமுதாயத்தில் நறுமணம் கமழ்விக்க இதோ சாக்ரட்டீஸ் அழைக்கிறேன்... ஓடி வாருங்கள்..!” என்று எழுதிய கருணாநிதியின் வசனம், அவர் ஆயிரம் பொதுக்கூட்ட மேடைகளில் பேசி ஏற்படுத்தும் தாக்கத்தை ஒரே ஒரு காட்சியின் வழியாகவே சாத்தியமாக்கியது.
வசனம் மூலம் வகைப்படுத்தலாம்: கருணாநிதி கதை, வசனம் எழுதிய படங்களின் பேசுபொருளைக் கொண்டு எளிதாக வகைப்படுத்திவிடலாம். ‘மந்திரி குமாரி’, ‘பராசக்தி’, ‘மலைக்கள்ளன்’ ஆகிய படங்கள், சனாதனம், அரச சர்வாதிகாரம் ஆகியவற்றை எதிர்த்துப் பேசியவை. ‘புதுமைப் பித்தன்’, ‘குறவஞ்சி’, ‘அரசிளங்குமரி’, ‘வண்டிக்காரன் மகன்’ ஆகியன மக்களுக்கான அரசியலை ஆழமாகப் பேச முயன்ற படங்கள்.
‘மருதநாட்டு இளவரசி’, ‘பணம்’, ‘நாம்’, ‘திரும்பிப் பார்’ ஆகிய படங்கள், சமூக முன்னேற்றம், சமுத்துவம் ஆகியவற்றை முன் வைத்தன. ‘ராஜா ராணி’, ‘மணமகள்’, ‘இருவர் உள்ளம்’, ‘பாசப் பறவைகள்’ ஆகிய படங்களில் பெண்ணுரிமை முதன்மை பெற்றது. இலக்கிய நயத்தை எளியவர்களுக்கும் ஊட்டும்விதமாக கருணாநிதி எழுதிய வசனங்களை ‘அபிமன்யு’, ‘பூம்புகார்’ ஆகிய படங்களில் காணமுடியும்.
கதை, வசனத்துக்கு நட்சத்திர அந்தஸ்து! - கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், தயாரிப்பாளர் எனத் திரையில் பல தளங்களில் மிளிர்ந்த கருணாநிதி, இருபத்து நான்கு வயது இளைஞனாகத் திரைப்படத்துக்கு எழுத வந்தபோது, தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா போன்ற நட்சத்திர நடிகர்கள் உருவாகியிருந்த காலமாகவும் இருந்தது. அவர்களுடைய நட்சத்திர ஈர்ப்புக்கு நடுவே, படத்துக்கு யார் கதை, வசனம் எழுதுகிறார்கள், படத்தில் என்ன கருத்துச் சொல்லப்பட்டிருக்கிறது என்று பார்க்கத் தொடங்கும் ரசனை மாற்றத்தைத் திராவிட இயக்கச் சிந்தனை வளர்ந்து எழுப்பியிருந்தது.
அப்படித்தான், அண்ணாவே பாராட்டிய ‘கண்ணகி’ பட வசன கர்த்தாவான இளங்கோவனுக்குப் பிறகு அண்ணாவும் அவருக்குப் பிறகு கருணாநிதியும் திரைப்பட வசனத்துக்கு நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுக்கொடுத்தார்கள். எனினும் இளங்கோவன், அண்ணாவிடமிருந்து பலபடி மேலெழுந்த கருணாநிதியின் திரை எழுத்து, இலக்கிய நயம் தொட்டுக்கொண்டு எளிய தமிழில் தனித்து நடை பயின்றது. அதில் அனலும் பறந்தது; அழகும் மிளிர்ந்தது; பகுத்தறிவைக் கற்றுக்கொடுத்தது. சுயமரியாதையை முன்னிறுத்தியது.
அரசியல், சமூக, சனாதன விமர்சனம் பெருவெடிப்பாக அதிர்வுகளை உருவாக்கியது. எல்லா வற்றுக்கும் மேலாகத் திராவிட இயக்கத்தின் சித்தாந்த முழக்கமாக உரக்க ஒலித்தது. கலைஞரின் திரை எழுத்து நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற அதேநேரம், சிவாஜி கணேசன் - எம்.ஜி.ஆர். ஆகிய இருவரும் தமிழ் சினிமா வரலாற்றின் அடுத்த கட்ட நட்சத்திரங்களாக உயர்வதற் கான தொடக்க வெற்றிகளைச் சாத்தியமாக்கியது.
இறுதிவரை எழுதிய கருணாநிதி: களப்போராளியாக இருந்த காலத்திலும் சட்டமன்ற உறுப்பின ராகவும் அமைச்சராகவும் அண்ணாவுக்குப் பிறகு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தபோதும் ஆட்சியைப் பலமுறை இழந்தபோதும் கலையுலகத்தையே தான் தலை சாய்ப்பதற்கான தாய்மடியாகப் பயன்படுத்திக்கொண்டார் கருணாநிதி. மறந்தும்கூட எந்தவொரு படத்துக்கும் காதல் களியாட்டமாகவோ, விரசமாகவோ எழுதுவதற்காக அவரின் பேனா தலை சாய்க்கவில்லை.
மாறாக தமிழின், தமிழரின் பெருமையை, பெருமிதங்களை மீட்டெடுக்க அவரது வசனங்கள் முயன்றன. கடவுள் மறுப்பையும் சனாதன எதிர்ப்பையும் அவர் இறுதிவரை உறுதியோடு தனது திரை எழுத்தில் கொண்டுவந்தார். அதேநேரம் கடவுள் ஏற்பாளர்களின் மனதைக் காயப்படுத்திய இளவயது திரைக் கலைஞர், ஐம்பதைக் கடந்தபோது அதைக் கைவிட்டார். நடிகர் ரஜினிகாந்த் சொல்வதைப் போல், “சிலருக்குக் கடவுளைப் பிடிக்காது.
ஆனால், கடவுளுக்கு அவர்களைப் பிடிக்கும். கடவுளுக்கு கலைஞரைப் பிடிக்கும்”. எளியவர்கள் ஏற்றம்பெற திரையில் பேனா பிடித்து எழுதிய கருணாநிதி, அதிகாரம் தன் கைக்கு வந்தபோது அவை அனைத்தையும் திட்டங்களாகவும் சட்டங்களாகவும் கொண்டுவந்தார். இது எல்லா படைப்பாளிகளுக்கும் அமைந்திராத கொடுப்பினை.
- jesudoss.c@hindutamil.co.in
படங்கள் உதவி: ஞானம்