

கேள்வி: வாகன சோதனையின் போது காவல் துறை அதிகாரிகள் பொது மக்களை எவ்வாறு நடத்த வேண்டும் மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்யவோ அல்லது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவோ அவர்களுக்கு உள்ள அதிகார வரம்பு என்ன?
பதில்: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21-ன் படி, ஒவ்வொரு குடிமகனுக்கும் உயிர் மற்றும் தனிநபர் சுதந்திரம் பாதுகாக்கப்படும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. எனவே, வாகன சோதனையின் போது காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களை மரியாதையுடனும் சட்டப்படியும் நடத்த வேண்டிய கடமை கொண்டுள்ளனர். தேவையற்ற மிரட்டல், அவமதிப்பு, தாக்குதல், அச்சுறுத்தல் மற்றும் காரணமின்றி வாகனங்களை நிறுத்துதல் போன்ற செயல்கள் சட்டவிரோதமானவை ஆகும்.
மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் பிரிவு 207-ன் படி, உரிய பதிவுச் சான்றிதழ் இல்லாமல் இயக்குதல், பர்மிட் இல்லாத வணிக வாகனங்களை இயக்குதல், தகுதிச் சான்றிதழ் எனப்படும் ஃபிட்னஸ் சர்டிபிகேட் இன்றி இயக்குதல், சட்டவிரோதப் பயன்பாடு மற்றும் ஆபத்தான முறையில் வாகனங்களை இயக்குதல் போன்ற குறிப்பிட்ட சூழல்களில் மட்டுமே வாகனத்தைப் பறிமுதல் செய்ய போலீசாருக்கு அதிகாரம் உண்டு.
தெலங்கானா மாநில அரசுக்கு எதிரான ஒரு வழக்கில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்ய முடியாது என்றும், அவ்வாகனத்தை எடுத்துச் செல்ல உறவினருக்கோ அல்லது நண்பருக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
அதேபோல், ஒரு காவல் துறை அதிகாரி நேரடியாக ஒருவரின் ஓட்டுநர் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய முடியாது. அவர்களுக்கு தற்காலிகமாக உரிமத்தைப் பறிமுதல் செய்ய அல்லது உரிய அதிகாரிக்கு பரிந்துரைக்க மட்டுமே அதிகாரம் உள்ளது.
மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் பிரிவு 19-ன் படி, ஓட்டுநர் உரிமத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யவோ, தகுதி நீக்கம் செய்யவோ அல்லது முழுமையாக ரத்து செய்யவோ உரிமம் வழங்கும் அதிகாரி அல்லது வட்டார போக்குவரத்து அலுவலருக்கு மட்டுமே சட்டப்பூர்வமான அதிகாரம் உள்ளது.
கேள்வி: ஒருவர் வாங்கிய வங்கித் கடனுக்கு 'ஜாமீன் கையெழுத்து' போடுபவருக்கு இருக்கும் சட்டப்பூர்வ பொறுப்புகள் என்ன மற்றும் கடன் வாங்கியவர் கட்டாவிட்டால் ஜாமீன் கொடுத்தவரின் சொத்து பறிமுதல் செய்யப்படுமா?
பதில்: ஒருவர் வாங்கிய வங்கிக் கடனுக்கு ஜாமீன் கையெழுத்து போடும்போது, முதன்மைக் கடன்தாரர் கடனைச் செலுத்தத் தவறினால் ஜாமீன்தாரரே அதற்கு முழுச் சட்டப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872-ன் பிரிவு 128-ன் படி, பிணையாளியின் அல்லது ஜாமீன்தாரரின் பொறுப்பானது முதன்மைக் கடனாளியின் பொறுப்பிற்கு முற்றிலும் இணையானது மற்றும் சமமானது ஆகும்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தொடர்பான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, வங்கி முதலில் கடன் வாங்கியவர் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; நேரடியாக ஜாமீன் கொடுத்தவர் மீதே முழு நடவடிக்கையையும் தொடங்கலாம். எனவே, கடன் வாங்கியவர் தவறும் பட்சத்தில் வங்கி நேரடியாக ஜாமீன்தாரருக்கு நோட்டீஸ் அனுப்பவும், சொத்து மீட்பு மற்றும் ஏல நடவடிக்கைகளை அவர் மீது எடுக்கவும் சட்டத்தில் இடமுண்டு.
அதே நேரத்தில், இந்திய ஒப்பந்தச் சட்டத்தின் பிரிவு 140 மற்றும் 145-ன் படி, ஜாமீன்தாரர் வங்கியிடம் கடனைச் செலுத்தி முடித்த பிறகு, அந்த முழுத் தொகையையும் அசல் கடன்தாரரிடமிருந்து சட்டப்பூர்வமாக வசூலித்துக் கொள்ளும் உரிமை அவருக்கு வழங்கப்படுகிறது.
இருப்பினும், கடன் வாங்கியவர் கடனைத் திருப்பிக் கட்டாத பட்சத்தில், வங்கிகள் 2002-ஆம் ஆண்டின் சர்ஃபேசி சட்டத்தின் கீழ் அடமானமாக வைக்கப்பட்ட சொத்துக்களைக் கைப்பற்றவும், பறிமுதல் செய்து ஏலத்தில் விற்கவும் அதிகாரம் பெற்றுள்ளன. இந்த விதியானது ஜாமீன்தாரர் கடனுக்காகப் பிணையாக வழங்கிய சொத்துக்களுக்கும் முழுமையாகப் பொருந்தும் என்பதால், ஜாமீன் கொடுத்தவரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
- கே.எம்.டி.முகிலன், அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றம்; தொடர்புக்கு: kmdmuhilan@gmail.com