மரண வாக்குமூலமா? வாக்குமூலத்துக்கு மரணமா?

மரண வாக்குமூலமா? வாக்குமூலத்துக்கு மரணமா?
Updated on
3 min read

சங்கமித்ரா.... இவள், பகல் முழுவதும் பல வீடுகளில் பாத்திரம் தேய்த்து, கை ரேகைகள் அழியும் அளவுக்கு உழைப்பவள். உடம்பு "போதும், ஓய்வெடு" என்று கெஞ்சினாலும், வீட்டில் பசியோடு காத்திருக்கும் இரண்டு பிஞ்சு முகங்களை நினைக்கும்போது, சோர்வு பறந்தோடி விடும். இரவும்அவளுக்கு ஓய்வு தருவதில்லை. குடித்துவிட்டு நிதானம் தவறி வரும் கணவன் தரும் கொடுமைகள் சொல்லி மாளாது.

"ஆறு முதல் பதினான்கு வயது வரை இலவசக் கல்வி" என்று சட்டம் சொன்னாலும், எதார்த்தத்தில் அவ்வாறு இல்லை. தனது குழந்தைகளின் பள்ளிக் கட்டணம் கட்ட முடியாமல் திணறும் எத்தனையோ தாய்களில் சங்க மித்ராவும் ஒருத்தி. அன்று வேலை செய்யும் இடங்களில் எல்லாம் அட்வான்ஸ் கேட்டுப் பார்த்தாள். ஏமாற்றமே மிஞ்சியது.

வெறுங்கையோடு வீடு திரும்பியவளிடம், குடித்துவிட்டு வந்த கணவன் கேட்ட கேள்வி அவளைச் சுக்குநூறாக உடைத்தது. “பகல் பூரா ஊரெல்லாம் திரிஞ்சுட்டுதானே வந்த; ஒருத்தன் கூடவா காசு தரல?” வார்த்தைகள் நெருப்பைவிடக் கொடியவை.

அவளிடம் இருந்த மானம், மரியாதை, உழைப்பு அத்தனையும் அந்தக்குடிகாரனின் ஒற்றைக் கேள்வியில் எரிந்து சாம்பலானது. விரக்தியின் உச்சாணிக் கொம்பிற்குச் செல்ல, திண்ணையில் மோட்டாருக்கு ஊற்ற வைத்திருந்த பெட்ரோலை எடுத்துத் தன் மீது ஊற்றிக்கொண்டாள். தீக்கனல் அவளைத் தின்றது. ஆனால், போதையின் உச்சத்தில் இருந்த கணவனுக்கு மனைவியின் மரண ஓலம் கேட்கவில்லை.

மருத்துவமனையில் நடந்ததோ அதைவிட கொடுமை. சங்கமித்ரா மரணப்படுக்கையில் கிடக்க, நீதிபதி வாக்குமூலம் வாங்க வருகிறார். அங்கிருந்த துப்புரவு பணியாளர் ஒருவர், "மாஜிஸ்திரேட் ஐயா வர்றாரு... புருஷன், மாமனார் எல்லாம் வெளிய போங்க" என்று விரட்டினார்.

ஆனால் அதை யாரும் கேட்டுக் கொள்ளவில்லை. சட்டத்தின் கண்களில் ‘மரண வாக்குமூலம்’ என்பது மிகவும் புனிதமானது. ‘இறக்கும் தருவாயில் இருக்கும் ஒரு நபர் பொய் சொல்ல மாட்டார்’ என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் இந்திய சாட்சிய சட்டம் இயங்குகிறது.

ஆனால், எதார்த்தம் என்ன? பல நேரங்களில், உடல் எரிந்து சாகும் பெண்ணை விட, அவள் சொல்லத் துடிக்கும் உண்மைகளே முதலில் எரித்துச் சாம்பலாக்கப்படுகின்றன. ஒரு தற்கொலைக்குள், அந்தப் பெண்ணின் உயிர் மட்டுமல்ல; நீதியும், உண்மையும், அந்தச் சமூகத்தின் மனசாட்சியும் சேர்த்தே கொல்லப்படுகின்றன.

மிரட்டலுக்கான கால அவகாசம்

ஒரு பெண் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கும், நீதிபதி வந்து வாக்குமூலம் வாங்குவதற்கும் இடைப்பட்ட அந்த நேரம்தான் முக்கியமானது; ஆனால் மிகவும் ஆபத்தான நேரம். அந்தச் சமயத்தில்தான் உண்மைகள் திரிக்கப் படுகின்றன. சங்கமித்ராவின் விஷயத்திலும் அதுவே நடந்தது.

அவள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அந்தத் தருணத்தில், அவளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய கணவனும், அவளது காதுகளில் விஷத்தைக் கொட்டுகிறான். "உண்மையைச் சொன்னால் நான் ஜெயிலுக்குப் போவேன்; உன் பிள்ளைகள் நடுத்தெருவில் நிற்பார்கள்; எப்படி நடந்ததுன்னு கேட்டா, ஸ்டவ் வெடிச்சிருச்சுன்னு சொல்லு…" என்ற மிரட்டல், மரணவலியை விடக் கொடுமையானது.

ஒரு தாயால் தன் உயிரை விட முடியும்; ஆனால் தன் பிள்ளைகள் அனாதையாவதை தாங்கமுடியாது. அவளது இந்த பலவீனத்தை குற்றவாளிகள்சரியாகப் பயன்படுத்துகிறார்கள். வாக்குமூலம் வாங்கும் முன்பே, அவளை மனரீதியாகக் கொன்று விடு கிறார்கள்.

மருத்துவமனையில் நடக்கும் ஒரு முரண் நகைச்சுவை என்னவென்றால், சட்டம் படித்தவர்களை விட, சாமானியர்களுக்கு இருக்கும் அறம்தான் இங்கு வெளிப்படுகிறது. சங்கமித்ரா மரணப்படுக்கையில் இருக்கும்போது, அங்கிருந்த துப்புரவுப் பணியாளர், "மாஜிஸ்திரேட் ஐயா வர்றாரு... புருஷன், மாமனார் எல்லாம் வெளிய போங்க" என்று விரட்டுகிறார்.

வாக்குமூலம் வாங்கும் இடத்தில் குற்றவாளிகள் இருக்கக்கூடாது என்ற அடிப்படை விதி அந்த அடிப்படைப் பணியாளருக்குத் தெரிகிறது. ஆனால், அங்கே பாதுகாப்புக்கு நின்றிருந்த காவலர்கள்என்ன செய்தார்கள்? வரப்போகும் நீதி பதியை வரவேற்பதில் காட்டிய ஆர்வத்தை, இறக்கும் தருவாயில் இருக்கும் பெண்ணின் பாதுகாப்பில் அவர்கள் காட்டவில்லை.

பாதிக்கப்பட்ட பெண்ணை, அவளைக் கொடுமைப்படுத்தியவர்களிடமிருந்து தனிமைப்படுத்தத் தவறியது காவல்துறையின் முதல் தோல்வி. நீதிபதி வருவதற்குள், கணவன் அவளை மூளைச்சலவை செய்து முடிக்க காவலர்கள் அனுமதித்ததுதான், அந்த வழக்கின் போக்கையே மாற்றியது.

சங்கமித்ரா தான் அனுபவித்த கொடுமைகளை உலகுக்குச் சொல்ல நினைத்தாலும், "உன் பிள்ளை களை அனாதையாக விட்டு விடுவோம் அல்லது கொன்று விடுவோம்” போன்ற மிரட்டல்கள், அவளைப் பேச விடாமல் தடுத்தன. அந்தத் தருணத்தில் அவள் தன்னை ஒரு தாயாகச்சிந்திக்கிறாள்.

தன் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி, "ஸ்டவ் வெடித்து விபத்து ஏற்பட்டது" என்று வாக்குமூலம் கொடுக்கிறாள். `சுயநினைவுடன், யாருடைய வற்புறுத்தலும் இன்றி' வாக்குமூலம் பெறப்பட்டதாக நீதிபதியும், மருத்துவரும் கையெழுத்திட்டனர்.

உண்மையைச் சொல்ல வேண்டிய இடத்தில், ஒரு தாய் தன் பிள்ளைகளுக் காகப் பொய்யைச் சொல்ல நிர்பந்திக்கப்படுவதுதான் இந்த அமைப்பின் மிகப்பெரிய தோல்வி. சங்கமித்ரா இறந்துவிட்டாள். ஆனால் அவள் இறந்தவுடன் வழக்கு முடிந்துவிடுவதில்லை. காவல் துறை சமையலறையை எட்டிப் பார்க்காமலேயே, பழைய ஸ்டவ்வைக் கணக்கு காட்டி வழக்கை 'விபத்து' என்று முடித்து வைக்கிறது. கணவன் விடுதலையாகிறான்.

மரண வாக்குமூலம் சடங்கு அல்ல:

கணவனின் கொடுமையால்தான் அவள் இறந்தாள் என்ற உண்மை மறைக்கப்படுகிறது; குற்றவாளி தண்டிக்கப்படாமல் சமூகத்தில் சுதந்திரமாக உலாவு

கிறான்; நாளை இதே போன்ற கொடுமை இன்னொரு பெண்ணுக்கு நடக்கும்போது, ‘சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியாது’ என்ற தைரியம் குற்றவாளிகளுக்கு வருகிறது.

"ஸ்டவ் வெடிக்கலடா... என் பெத்த வயிறு வெடிச்சிருச்சு!" என்று கதறும் அந்தத் தாயின் குரல், நீதிமன்றக் கோப்புகளில் ஏறாது. ஆனால், அது சமூகத்தின் காதுகளில் ஒலிக்க வேண்டும்.

சங்கமித்ராவின் மகள், "ஸ்டவ் எங்கம்மா வெடிச்சுச்சு?" என்று கேட்கும் கேள்விக்கு, இந்தச் சமூகம் பதில் சொல்லக் கடமைப் பட்டுள்ளது. தாயை இழந்து, உண்மையை அறிய முடியாமல் தவிக்கும் அந்தப் பிஞ்சுக் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.

மரண வாக்குமூலம் என்பது வெறும் சடங்கு அல்ல; அது பாதிக்கப்பட்டவரின் கடைசி குரல். மிரட்டல்களையும், வற்புறுத்தல்களையும் தடுத்தால் ஒழிய, மரண வாக்குமூலங்கள் உண்மையானதாக இருக்காது. இல்லையெனில், ஒவ்வொரு முறையும் ஒரு பெண் தீக்குளிக்கும் போதும், அவளுடன் சேர்ந்து உண்மையும், நீதியும் அதே தீயில் கருகிச் சாம்ப லாகும் என்பதே நிதர்சனம்.

- jusvimala57@gmail.com

மரண வாக்குமூலமா? வாக்குமூலத்துக்கு மரணமா?
முதியவர்களைக் கைவிட்டால் ஜெயிலுதான்…!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in