

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் 2007 (Maintenance and Welfare of Parents and Senior Citizens Act, 2007) என்பது வெறும் காகிதத்திலிருக்கும் சட்டம் மட்டுமல்ல; கைவிடப்பட்ட பல முதியவர்களின் வாழ்வில் ஒளியேற்ற உதவும் ஒரு மிகச் சிறந்த ஆயுதம் எனலாம்.
இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி துயரங்களிலிருந்து மீண்ட முதியவர் ஒருவரின் கதை இது. கடும் உழைப்பாளியான சிவசாமிக்கு 72 வயது. அவரது ஒரே மகன் ரமேஷ். பெரும் விவசாயியான சிவசாமி, வாழ்நாள் முழுவதும் தனது நிலத்தில் கடுமையாக உழைத்து, பெரும் சொத்து சேர்த்து வைத்திருந்தார்.
தன்னுடைய மகனை நன்றாகப் படிக்க வைத்த அவர், ஒரு நல்ல நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துவிட்டு, திருமணமும் செய்து வைத்தார். மகன் மற்றும் மருமகளின் அன்பை எதிர்பார்த்து, தனது பெயரில் இருந்த வீடு, நிலம், சேமிப்புப் பணம் என அனைத்தையும் மகனின் பெயருக்கு எழுதி வைத்தார் சிவசாமி.
ஆனால், சொத்து கைக்கு வந்த சில மாதங்களிலேயே ரமேஷின் போக்கில் மாற் றம் தெரிந்தது. சிவசாமிக்கு உரிய நேரத்தில் உணவு வழங்கப்படவில்லை, மருந்துவாங்கப் பணம் தர மறுக்கப்பட்டது. ஒருகட்டத்தில், "வீடு என் பெயரில் இருக்கிறது, நீங்கள் முதியோர் இல்லத்திற்குச் செல்லுங் கள்" என்று கூறி சிவசாமியை வீட்டை விட்டு வெளியேற்றினான் ரமேஷ்.