

திருவாரூர் மாவட்டம் வடுவூர் கோதண்டராமர் கோயில் ‘தட்சிண அயோத்தி’ என்றும் இழந்த பதவியைத் தந்தருளும் தலம் என்றும் போற்றப்படுகிறது. இத்தலத்தில் கோதண்ட ராமர், சீதாதேவியுடன் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளியுள்ளது சிறப்பு.
வனவாசத்தின்போது ராமச்சந்திர மூர்த்தி முனிவர்களின் ஆசிரமத்தில் தங்கியிருந்தார். அவரையும் அவரது குண மாண்புகளையும் கண்டு முனிவர்கள் மகிழ்ந்தனர். அவரை உதாரண புருஷராக நினைத்து ஆனந்தம் கொண்டனர். ஆனால் வந்திருப்பது இறைவனின் அவதாரம் என்பதை அவர்கள் உணரவில்லை.
ராமச்சந்திர மூர்த்தியும் அவர்களுக்கு, இறைவனை அடைவதற்கான வழியை சொல்லிக் கொடுத்தார். இப்படியாக உபதேசத்தில் பொழுது போனதே யாருக்கும் தெரியவில்லை. ராமச்சந்திர மூர்த்தி அங்கிருந்து கிளம்பும் சமயத்தில், முனிவர்கள் அவரைத் தங்களுடனேயே இருக்கும்படி கூறினர்.