உலகுக்கே தோழன் லட்சுமணன் | இராம கதாம்ருதம் 57

உலகுக்கே தோழன் லட்சுமணன் | இராம கதாம்ருதம் 57
Updated on: 
3 min read

இராமாயண காவியத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்தன்மை கொண்டதாக விளங்குகிறது. இராமனை நிழல் போல் தொடரும் லட்சுமணன், உலகுக்கே தோழனாக போற்றப்படுகிறான். அதிவீரசூரனாக விளங்கும் இவன் இராவண வதத்திலும் முக்கிய பங்காற்றுகிறான்.

திரிசஷ்டி சாலக புருஷ சரித்ரம் என்பது 12-ஆம் நூற்றாண்டில் வடமொழியில், ஸ்வேதாம்பர சமண ஞானியான ஹேமசந்திரரால் இயற்றப்பெற்ற காப்பியம். மானுடச் சமுதாயத்துக்கு வழிகாட்டுவதற்காகவும், அறத்தை நிலைநிறுத்துவதற்காகவும், காலச் சக்கரத்தில் அவ்வப்போது அவதரிக்கும் மகான்களே சாலக புருஷர்கள் ஆவர்.

அறுபத்துமூன்று (திரிசஷ்டி) சாலக புருஷர்கள் என்னும் கணக்கில் 24 தீர்த்தங்கரர்கள் (ஆன்மிக ஆசார்யர்கள் – ரிஷபநாதர் முதல் மஹாவீரர் வரை), 12 சக்கரவர்த்திகள் (உலகையாண்ட பேரரசர்கள் – பரதன், சகரன் போன்றோர்), 9 பலபத்திரர்கள் (சாத்விகமான வீரர்கள் – (இ)ராமன், பலராமன் போன்றோர்), 9 நாராயணர்கள் (எதிர்மறையாளர்களை அழிக்கும் வீரர்கள் – லட்சுமணன், கிருஷ்ணன் போன்றோர்), 9 பிரதிநாராயணர்கள் (எதிர்மறையாளர்கள் – (இ)ராவணன், ஜராசந்தன் போன்றோர்) ஆகியோர் அடங்குவர்.

இராவணன், இராமன், லட்சுமணன் ஆகிய மூவருமே அறுபத்துமூன்று சாலகர்களில் அடக்கம் என்பதால், (இ)ராம கதையின் முழுமையும் இக்காப்பியத்தில் உண்டு. ஆங்காங்கே காணப்படும் மாற்றங்கள் சுவாரசியமானவை.

ரிஷபநாதரின் காலத்திலிருந்தே, இக் ஷ்வாகு குலத்தவர் அயோத்தியை ஆண்டனர். இந்த வழியில், அனரண்யன் என்னும் அரசன், தன்னுடைய இளைய மகன் தசரதனுக்குப் பட்டம் கட்டிவிட்டு, மூத்த மகனான அனந்தரதனோடு தவசி ஆகிவிட்டான். மிகச் சிறந்த அரசனாகத் திகழ்ந்த தசரதன், சுகோசலன் என்னும் மன்னனின் மகள் அபராஜிதையையும் சுபந்துதிலகன் என்னும் மன்னனின் மகள் சுமித்திரையையும், மற்றொரு நாட்டு இளவரசி சுபிரபையையும் மணந்தான். இதே காலகட்டத்தில், தசகந்தர ராவணன் இலங்கையை ஆண்டுகொண்டிருந்தான். மிதிலையை வாசவகேதுவின் மகன் ஜனகன் ஆண்டான்.

இலங்கையில் ஒருநாள் தன்னுடைய அமைச்சர்களோடும் ஆலோசகர்களோடும் உரையாடிக் கொண்டிருந்த தசகந்தரன் (பத்துக் கழுத்தன்), தனக்கு எப்போது மரணம் என்று வினவ, ‘தசரதனின் மகனால், ஜனகனின் மகள் பொருட்டு, உனக்கு மரணம்’ என்று ஜோதிடர் ஒருவர் கூறிவிட்டார்.

Loading content, please wait...

X