

பெரிய புராணம் அருளிய தெய்வச் சேக்கிழார் பெருமான் அவதரித்த புனித பூமியாக காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் தலம் போற்றப்படுகிறது. இங்கு முருகப் பெருமான் மலையில் கோயில் கொண்டிருக்க, மலை அருகில் பிரிந்து செல்லும் திருநீர்மலை சாலையில் கல்யாண வரம் அருளும் காத்யாயணி அம்மன் கோயில் அமைந்துள்ளது.
சந்திரகாந்தக் கல்லால் அமைந்த சக்திவாய்ந்த இந்த தேவியின் கருவறையில் ஒரு மரப்பெட்டியில் மகாமேருவுடன் 27 நட்சத்திரங்களுக்கான கல்யாண யோக குருபலம் காட்டும் சுவடிகள் உள்ளன.
பல ஆண்டுகள் திறக்கப்படாமல் இருந்த இந்தப் பெட்டியை, பராபவ ஆண்டு சித்திரை மாதம் முதல் அம்மனுக்கு உகந்த நாட்களில் (செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, பௌர்ணமி) பூஜை நடைபெறும் நேரங்களில் மட்டுமே திறந்து, பக்தர்களை தரிசனம் செய்ய வைக்கின்றனர்.
கல்யாண யோக குருபல சுவடிகள் வைக்கப்பட்டுள்ள கருவறையைச் சுற்றி, அஷ்டலட்சுமி தேவியர் காவல் காத்து நிற்பதாக ஐதீகம். பூஜை நேரம் தவிர, அருகில் காத்யாயணி உற்சவர் சந்நிதி கருவறைக்குள் சுவடிகளை வைப்பதால் இந்த சாஸ்திர விதிமுறை பின்பற்றப்படுகிறது.
களத்திர தோஷம், தார தோஷம், சர்ப்ப தோஷம், பித்ரு தோஷங்களால் ஏற்படும் திருமணத் தடை நீங்க, தம்பதி ஒற்றுமை சிறக்க, குழந்தை வரம் கிடைக்க இங்கு, ‘காமேஸ்வரி அக்னி வேள்வி’ உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் மாலை 6 மணிக்கு புத்திர பாக்கியம் அருளும் ‘பாலகாத்யாயணி யக்ஞம்’ நடத்தப்பட்டு இலவசமாக மூலிகை மருந்து பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.
ஒரே நேர்க்கோட்டில் காணப்படும் திருவேற்காடு கருமாரி அம்மன், மாங்காடு காமாட்சி அம்மன், குன்றத்தூர் காத்யாயணி அம்மன் ஆகியோரை ஒரே நாளில் தரிசித்து, தீபம் ஏற்றி வணங்கும் ‘முச்சக்தி வேட்டல்’ எனும் சக்தி தரிசனத்தை பலர் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. திருச்சுற்றில் அருள்பாலிக்கும் தோரணப் பிள்ளையாரை வணங்கினால் கடன்கள் தீரும் என்பது ஐதீகம்.
- கே.குமாரசிவாச்சாரியார்