

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீரநாராயண பெருமாள் கோயில் பெருமாளை தரிசிப்பதால் திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களை தரிசித்த பலன் கிடைக்கும். வைணவத்துக்கு மிகப் பெரும் தொண்டாற்றிய ஸ்ரீமத் நாதமுனிகள், அவரது பேரர் யமுனைத் துறைவர் என்று அழைக்கப்பட்ட ஆளவந்தார் அவதரித்த தலம். நாலாயிர திவ்ய பிரபந்தம் கண்டெடுக்கப்பட்ட தலம்.
சிதம்பரனார் என்ற முனிவருக்கு மகளாக திருமகள் மரகதவல்லி என்ற திருநாமத்துடன் வளர்ந்து வந்தாள். மரகதவல்லி திருமண வயதை அடைந்ததும், சிதம்பரனார் முனிவர் அவளுக்கு வரன் தேடத் தொடங்கினார். ஒரு சமயம் சுயம்வரத்துக்கு ஏற்பாடு செய்தார்.
சுயம்வரத்துக்கு பல நாட்டு மன்னர்கள் வந்திருந்தனர். திருமாலும் ஒரு மன்னராக அங்கு சென்றிருந்தார். மரகதவல்லி மன்னராக வந்த திருமாலுக்கு மாலையிட்டாள். மற்ற மன்னர்கள் அனைவரும் இச்செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். திருமால் அனைத்து மன்னர்களையும் வீரத்துடன் எதிர்த்து வெற்றி கண்டார். அதனாலேயே ‘வீர நாராயணர்’ என்று அழைக்கப்பட்டார். மேலும் மன்னனாக வந்ததால் ‘மன்னனார்’ என்றும் போற்றப்பட்டார்.
மறைந்து போன பிரபந்தங்களை இவர் நாதமுனிகளுக்கு காட்டியதால் ‘காட்டும் மன்னனார்’ ஆனார். அதனாலேயே இத்தலம் காட்டுமன்னார்கோவில் ஆனது. இத்தலத்திலேயே நாதமுனிகள், அவரது பேரனார் ஆளவந்தாரும் அவதரித்தனர் என்று கூறப்படுகிறது. இது ‘லட்சுமிநாத சமாரம்பாம்’ என்ற தனியன் ஏற்பட்ட தலம் என்பர்.