Published : 24 Feb 2022 11:21 AM
Last Updated : 24 Feb 2022 11:21 AM

அகத்தைத் தேடி - 80: விடைபெறுகிறேன்!

அகத்தைத்தேடி - நிறைவை நோக்கிய நெடுவழிப் பயணத்தின் எண்பதாவது மைல் கல்லில் நின்றபடி உங்களிடமிருந்து தற்காலிகமாக விடைபெறுகிறேன். பயணம்தான் முடிகிறது. தேடல் தொடர்கிறது!

ஏறத்தாழ ஈராண்டுகள் ஞானாசிரியர்களின் வாழ்க்கை வரலாற்றுச் செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். கடவுள், கடவுள் தன்மை, சமயம், மெய்ஞ்ஞானத் தேடல் குறித்து ஞானிகள், மகான்கள் வாழ்க்கையிலிருந்து ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியை மீள்விசாரணை செய்யும் தொடராக இது அமைந்தது.

சிறு வயதிலிருந்தே புராதனமான கோவில் களையும், சித்தர்களின் அடக்கத்தலங்களையும் ஞானியரின் வாழ்விடங்களையும், பண்டார சந்நியாசி ஓய்வுகொள்ளும் சத்திரங்களையும் நதிக்கரையோர நாடோடிச் சாமியார்களை யும், இஸ்லாமிய ஞானியரின் தர்காக்கள், பள்ளிவாசல்களையும், கிறித்தவ தேவாலயங் களையும் தேடித் திரிந்தவன் நான். அப்போது நான் பெற்றவை வெறும் அனுபவங்கள் மட்டுமல்ல, தரிசனங்கள் என்று சொல்வதே தகும். சத்தியத்தின் தடத்திலே நான் சென்றிருப்பதும் அதுவே என்னுள் தியானம் போன்ற உணர்வினைத் ததும்பச் செய்திருப்பதும் எனக்குப் பிடிபடுவதற்கு எனக்கு ஒரு வாழ்நாளே தேவைப்பட்டது. ஆகவேதான் சித்த புருஷர்கள் பற்றி எழுதுவதற்கு எவ்வித முன்திட்டமிடுதலும் எனக்குத் தேவைப்படவில்லை. ‘எதை நீ தேடு கிறாயோ அது ஏற்கெனவே உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறது’ என்னும் பாரசீகக் கவிஞன் ரூமியின் வாக்கினை ருசுப்படுத்தும் வகையில் அவை தாமாகவே என்னிடம் வந்துசேர்ந்தன.

கட்டுரைகளைவிடக் கட்டுரை எழுத நேர்ந்த சம்பவங்களும், சந்தர்ப்பங்களும் சொல்லப்பட்ட விஷயங்களைத் தாண்டி எனக்குள் மீட்டும் நினைவுகள் அலாதியானவை.

குணங்குடி மஸ்தான் பற்றி எழுதுவதற்கு உடனடியாக ஏதும் வாழ்க்கை வரலாற்றுச் செய்திகள் இல்லாத நிலை பற்றி தஞ்சாவூரில் அத்தர்கடை வைத்திருக்கும் ரஹீம்பாயிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ரஹீம்பாய் ஏதோ யோசித்துவிட்டு, “என்ன சொன்னீர்கள்? குணங்குடி மஸ்தானா? என் தகப்பனார், ‘எனக்குச் சுள்ளி பொறுக்க நேரம் இருக்கிறது; குளிர்காய நேரமில்லை’ என்னும் குணங்குடி மஸ்தானின் வாக்கியத்தை அடிக்கடிச் சொல்லுவார்” என்றார். அவ்வளவுதான், ‘குளிர்காய நேரமில்லை’ என்னும் கட்டுரை பிறந்துவிட்டது.

‘மரணம் என்பது உயிரின் ஆரத்திச் சுடர்’ என்னும் பிரமிளின் வரி, மார்கஸ் அரேலியஸின் மரணம் பற்றிய கருத்துக்களையும், மரணபயம் துரத்திய ரமணரையும் சிந்திக்கவைத்துக் கட்டுரையாக மலர்ந்தது. போதேந்திர சுவாமிகள் பற்றி எழுதக் கொட்டும் மழையில் கோவிந்தபுரம் புறப்பட்டுப் போனேன். களிமண் சாலையில் கால்புதைய நடந்தேன்.

நாய்களை அதிகம் நேசித்த பாடகச்சேரி சுவாமிகள் கட்டிய கோவிலை கிண்டி ரயில் நிலையம் அருகே கண்டுபிடித்தேன். ஒரு கட்டுரை ஆயிற்று. அரிதான மனிதப் பிறவியை மீண்டும் அடைய ஆசைப்பட்ட பக்தரிடம் ‘மனிதனாய்ப் பிறக்க மனிதனாய் இறக்க வேண்டும்’ என்று அறிவுரை கூறிய அவதூதர் வெங்கையா சுவாமிகள் பற்றிய சரித்திரமும் அபூர்வமாக வந்து சேர்ந்தது.

திருவண்ணாமலையில் நாற்பது ஆண்டுகள் ஒரு வீட்டுத் திண்ணையில் வீற்றிருந்து தியானத்தில் மூழ்கிய திண்ணை சுவாமிகளும் என்னை ஆட்கொண்டார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் நான் கண்டு உரையாடிய செங்கல்பட்டு தேமொழியார் சுவாமிகளும் கட்டுரைத் தொடரில் கால்பதித்தார்.

காவ்ய கண்ட கணபதி முனிவரும், அஷ்டாவக்கிரரும் கோவில் திருப்பணிகளில் சாதனை படைத்த கோவிந்த தீட்சிதரும் தொடரில் இடம் பெற்றனர். தக்கலை பீரப்பா, கீழக்கரை ஆசியாம்மா முதலிய சூஃபி ஞானிகளும் மதங்களைக் கடந்து மார்க்க நெறிகளை எடுத்துரைத்தனர்.

‘உள்ளம் உருகுதய்யா’ என்ற புகழ்பெற்ற முருகன் பாடலை எழுதியவர் மரகதவல்லி என்கிற வேதாந்த நாட்டமுடைய பெண்மணி என்பது புதுச் செய்தியாக பகிரப்பட்டது. சைகை மொழியால் தத்துவ விசாரத்தை லாகவமாகப் பேசிய மெஹர்பாபாவின் ‘புழுதியாக இரு; தொலைந்துபோ! என்னும் உபதேசம் கேட்டு உருகியோர் பலர். கடிதங்களால் ரமணசரிதம் படைத்த சூரி நாகம்மா, சர்வோதயத்தை கனவு கண்ட இலங்கை எழுத்தாளர் மு. தளையசிங்கம், ‘காண்டா மிருகமாய் இரு’ என்று உபதேசித்த யாழ்ப்பாணத்துச் சாமிகள் ஆகியோரிடம் எல்லாம் மகான்களை அல்ல, உத்தமமான மனிதர்களை தரிசிக்கும் அம்சங்களை எழுதியிருக்கிறேன்.

ரஷ்ய ஞானி ஜார்ஜ் ஐவனோவிச் குருஜியின் நான்காம் தடம் பற்றிப் படித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் பாராட்டும் வந்து சேர்ந்தது. விடுதலைப்போராட்ட வீரர் வ.உ.சி.யின் ஆன்மிகத் தேடலில் தன்னை மறந்து கண்ணீர்விட்ட வழக்கறிஞர் உண்டு.

கானாடு காத்தானில் பெட்டிக்கடை வைத்திருப்பவரில் இருந்து சென்னையின் மிகப்பெரிய துணிக்கடை தொழில் அதிபர்வரை. சமயப்பிரிவுகள், பாலினம், சாதி என எல்லாப் பிரிவினைகளையும் கடந்து விடுதலைக்கான வழிகளை விசாரிக்கும் சத்சங்கமாக இத்தொடர் அமைந்தது.

இத்தொடர் குறித்து மின்னஞ்சல் வழியும், தொலைபேசி வாயிலாகவும், கடிதம் வாயிலாகவும் எதிர்வினையாற்றிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி. இவர்களில் பெரும்பாலானோர் இளைஞர் களாய் இருப்பதறிந்து ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி உண்டாகிறது. தத்துவ விசாரம் என்பது வயோதிகத்தின் புகலிடம் என்கிற பொதுக்கருத்தினைப் பொய்யாக்கி அகத்தைத் தேடி இளைஞர்களாகிய நாங்களும் புறப்பட்டு விட்டோம் என்று புலப்படுத்தியிருப்பதை இத்தொடரின் வெற்றியாகக் கருதுகிறேன்.

ஆன்மிகத்தைச் சமயம் என்கிற நிறுவனத்திட மிருந்து விடுவிக்க வேண்டிய காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கிறோம். உண்மைக்குத் திரை போடப்பட்டு பூசைகளும், புனஸ்காரங்களும், அநுஷ்டானங்களும், மடைமைகளும் வெற்று நியமங்களும் மனிதர் களுக்குள்ளே செயற்கையான பிரிவினையை உண்டாக்கி உலகம் பிளவுபட்டுக் கிடக்கிறது.

கருத்தியல் விருப்பு வெறுப்புகளாலும், மதமாச்சரியங்களாலும் மனிதர்கள் ஒருவரை ஒருவர் நேசிக்க மறந்து சமூகங்களும் தேசங்களும் தங்களுக்குள் போரிட்டு மடியும் காலம் இது.

இவ்வேளையில்தான் ‘அகத்தைத் தேடி’ தொடரின் தெரிந்தெடுத்த கட்டுரைகளை இந்து தமிழ்த்திசை நூலாக வெளியிட்டிருக்கிறது.

‘கெட்ட போரிடும் உலகத்தை வேருடன் சாய்ப்போம்’ என்று பாரதி போல் முழங்கும் ஆற்றலை நீங்கள் பெற இந்நூல் துணைநிற்கும்.

புலப்படுவதையும், புலப்படாதததையும் புரிந்துகொள்வதற்குரிய தேடலுக்கு இந்தப் புத்தகம் உங்களுக்கு உதவும்.

வாழிய நலம். வணக்கம்.

அன்பன்

தஞ்சாவூர்க்கவிராயர்

தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x