

இராமானுச நூற்றந்தாதியின் முதற்பாடலில் இராமானுஜரின் திருநாமங்களைச் செபித்து உய்வு பெறலாம் என்று எல்லோரையும் அழைத்த திருவரங்கத்தமுதனார், அந்த நாமங்களால் என்னென்ன பலன் கிட்டும் என்பதை இரண்டாவது பாடலில் சொல்கிறார்
கள்ளார் பொழில் தென்னரங்கன் கமலப் பதங்கள் நெஞ்சிற்
கொள்ளா மனிசரை நீங்கிக் குறையல் பிரான் அடிக்கீழ்
விள்ளாத அன்பன் இராமானுசன் மிக்க சீலமல்லால்
உள்ளாது என்னெஞ்சு ஒன்றறியேன் எனக்குற்ற பேரியல்வே
இறையருள் பெற்ற இராமானுஜரின் நாமத்தை ஓய்வின்றி ஓத ஓத இதயம் மெல்ல மெல்ல ஒருமுகப்படுகிறது. அந்த ஒருமுகப்படலின் உச்சத்தில் உடலும் உயிரும் இறைமை நிலையமாக உருப்பெறுகின்றன. அப்போது ஆங்கே இறைவன் எழுந்தருளி நம்மை திவ்விய தேசம் ஆக்குகிறான்.
அவன் சந்நிதியில் எந்தத் தீய எண்ணங்களுக்கும் இடமில்லை. சொல்லப்போனால் அவனன்றி வேறு எந்த எண்ணங்களுக்கும் இடமில்லை. 'தென்னரங்கன் கமலப் பதங்கள் நெஞ்சிற் கொள்ளா மனிசரை நீங்கி' என்னும் வரியின் தாத்பரியம் இதுவே. இராமானுஜரின் நாமத்தை உச்சரித்ததால் ஏற்பட்ட முதற்பலன் இது என்பது திருவரங்கத்தமுதனாரின் வாக்குமூலம்.
நம்மாழ்வாரைப் போலவே திருமங்கையாழ்வாரையும் தன் சிந்தையில் நிரப்பியிருந்த இராமானுஜரின் பெருங்குணத்தைத் தவிர வேறெதையும் என் நெஞ்சம் நினைக்காது என்பது திருவரங்கத்தமுதனார் சொல்லும் இரண்டாவது பலன். திருக்குறையலூர் என்பது திருமங்கையாழ்வாரின் அவதாரத்தலம். குறையல் பிரான் என்னும் வார்த்தை அதையே குறிக்கிறது.
ஸ்ரீரங்கம் கோவிலில் விமானம், மண்டபம், திருத்தளிகை, திருமதில், கோபுரம் ஆகியவற்றை அமைத்துக் கொடுத்தவர் திருமங்கையாழ்வார். ஸ்ரீரங்கத்தில் பகல்பத்து, இராப்பத்து உற்சவம் ஆகியவற்றை ஏற்படுத்தியவரும் அவரே. பிரான் என்றால் பேருதவி புரிந்தவர் என்று பொருள். இதனால்தான் குறையல் 'பிரான்' என்ற சொல்லை திருவரங்கத்தமுதனார் தெரிவு செய்கிறார்.
பின்னாளில் இராமானுஜர் கூட திருமங்கையாழ்வாரின் அடியொற்றி இந்த உற்சவங்களை விரிவாக்கம் செய்தார். திருவரங்கத்தில் கோவிலைச் சுற்றி நிறைய சோலைகளை அமைத்த பெருமை கூட இராமானுஜரை சாரும். 'கள்ளார் பொழில் தென்னரங்கன்' என்பதை அந்தக் கோணத்திலும் சிந்திக்கலாம்.
பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை ஆகியவை பெருமாளின் ஐந்து நிலைகள். இதில் அர்ச்சை என்பது பெருமாளின் பல்வேறு சிற்ப வடிவங்களை வழிபாடு செய்வது. இதில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்த திருமங்கையாழ்வார் பத்ரிநாத் தொடங்கி திருக்குறுங்குடி வரை நாடு முழுதும் இருந்த 86 திவ்யதேசங்களுக்குச் சென்று வழிபட்டார்.
அதேபோல திருமலை, திருவரங்கம், திருமாலிருஞ்சோலை, திருநாராயணபுரம் போன்ற பல திவ்ய தேசங்களுக்குச் சென்று சிலை வழிபாடு நடத்திய பெருமைக்குரியவர் இராமானுஜர். மிகப்பெரும் ஞானக்கடலாய் இருந்தாலும் கொஞ்சமும் கெளரவம் பார்க்காமல் சிறிதும் சோர்ந்து போகாமல் பற்பல திருத்தலங்களுக்குச் சென்று நேரடியாகப் பணிவிடை செய்வதன் முக்கியத்துவத்தை உணர்த்தியவரும் அவரே. அவரின் இந்த எளிவந்த தன்மை திருவரங்கத்தமுதனாரை வியக்க வைக்கிறது.
அனைத்தையும் தாண்டி ஆன்மிக உலகின் அசைக்க முடியாத பேருண்மை ஒன்றை இந்தப் பாசுரம் நிரூபணம் செய்கிறது.
குருவை விட குருவின் நாமத்துக்கே சக்தி அதிகம் என்பதே அது.
முந்தைய அத்தியாயம் > ராமானுஜ நூற்றந்தாதி என்னும் அற்புதம் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 38