

ஆதிசேஷனின் அம்சமாக அவனியில் அவதரித்து ஆன்மிகம், தத்துவம், சமயம், சமூகம், பண்பாடு என அனைத்து தளங்களிலும் புதுமையையும் புரட்சியையும் நிகழ்த்திய மகாஞானி ராமானுஜர்.
ராமானுஜரைப் போற்றி திருவரங்கத்தமுதனார் எழுதிய ராமானுஜர் நூற்றந்தாதி என்னும் படைப்பும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் அடக்கம். இந்தப் பாசுரத் திரட்டில் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை 108.
பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறன் அடிபணிந்து உய்ந்தவன் பல்கலையோர்
தாம் மன்ன வந்த இராமனுசன் சரணார விந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே! சொல்லுவோம் அவன் நாமங்களே
‘ஏ நெஞ்சே! நீ கடைத்தேற வேண்டுமானால் தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் உறையும் மார்பினை உடைய திருமாலைப் புகழ்ந்து இனிய தமிழ்ப் பாசுரங்களைப் பாடிய நம்மாழ்வாரின் திருவடி பணிந்து உய்ந்தவரும் பல்துறை விற்பன்னர்கள் பலர் நிலைத்த புகழ் பெற்றமைக்குக் காரணமாக இருந்தவருமான ராமானுஜரின் பாதகமலங்களைப் பணிந்து வணங்கி அவர் தம் திருநாமங்களைச் சொல்வாயாக’ என அந்தாதியைத் தொடங்குகிறார் திருவரங்கத்தமுதனார்.
இந்தப் பாடலில் பொருட்சிறப்பு ததும்பி நிற்பதைப் போல அருட்சிறப்பும் ததும்பி நிற்பதை வைணவ அறிஞர்கள் விதந்து போற்றியுள்ளனர்.
திருமகள் என்னும் பெண்ணமுது, திருமால் என்னும் ஆராவமுது, நம்மாழ்வார் எழுதிய திருவாய்மொழி என்னும் பாவமுது, நம்மாழ்வார் என்னும் பேரமுது, நம்மாழ்வாரை வணங்கிய ராமானுஜர் என்னும் ஆரமுது என இந்தப் பாடலில் ஐந்து அமுதங்கள் உள்ளதால் இந்தப் பாசுரத்தை பஞ்சாம்ருத பாசுரம் என அவர்கள் கொண்டாடியுள்ளனர்.
நம்மாழ்வாரை நம்பி ராமானுஜர் உய்வும் உயர்வும் பெற்றதைப் போல, ராமானுஜரை நம்பியும் கூரத்தாழ்வான், முதலியாண்டான், எம்பார் உள்ளிட்ட அவரது சீடர்கள் வாழ்வில் பெரும்புகழ் பெற்றனர். 'பல்கலையோர் தாம் மன்ன வந்த ராமானுசன்' என்னும் வரி இதனை உணர்த்துகிறது. இதிலே 'பல்கலையோர்' என்பது வித்துவான்கள் என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையான அழகான தமிழ்ச் சொல்.
ராமானுஜருக்கு இளையாழ்வான், பூதபுரீசர், உடையவர், யதிராஜன், இலட்சமண நம்பி, எம்பெருமானார், திருப்பாவை ஜீயர், சடகோபன் பொன்னடி உள்ளிட்ட ஏராளமான பெயர்கள் உண்டு. பாடலின் இறுதியில் 'பாடுவோம் அவன் நாமங்களே' என்று திருவரங்கத்தமுதனார் பன்மையில் எழுதியதற்குக் காரணம் அதுவே.
முந்தைய அத்தியாயம் > நம்பிக்கை இல்லாவிட்டாலும் கைவிடாத நாராயணன் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 37