

மனிதனுக்கு இயற்கை உணவளிக்கிறது. கடவுளுக்கு இயற்கை உணவாகிறது. சொல்லப்போனால் ஈரேழு பதினான்கு உலகங்கள் அடங்கிய பிரபஞ்சமே உணவாகிறது.
ஊழிக்காலத்தில் இந்த உணவை ஒரு கைக்குழந்தை கண்ணனாக வடிவம் எடுத்து, ஆலிலையில் படுத்து உட்கொள்கிறான் பெரிய பெருமாள் என்று வைணவம் கூறுகிறது. ‘சீம்பால் அருந்தும் சிசு’ என இந்த கைக்குழந்தையை வர்ணிக்கிறார் பெரியவாச்சான் பிள்ளை. அவர் மற்றுமொரு சுவையான விளக்கத்தையும் தருகிறார்.
ஒரு கைக்குழந்தை விளையாட்டு போல கண்ணில் தெரிவனற்றையும் கையில் படுவனற்றையும் வாயில் போட்டுக் கொள்ளும். அதேபோல எல்லா உலகங்களையும் உண்டு தனக்குள் ஒடுக்கிக்கொள்ளுதலை ஒரு விளையாட்டு போலச் செய்கிறாராம் திருமால். இதனால் தான் பன்னிரு ஆழ்வார்களுக்கு பின் வந்த கம்பநாட்டாழ்வாரும்,
உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே
என்று புதிதானதொரு கடவுள் வாழ்த்து பாடலைப் பாடுகிறார். ஆல மரத்தின் இலை மிக மிகச் சிறியது. அதே போல அதன் விதையும் மிக மிகச் சிறியது. ஆனால் அந்த விதையிலிருந்து தான் ஆலமரம் ஒரு பெரும் விருட்சமாக முளைத்தெழுகிறது. ஆலிலையைக் காட்டிலும் சிறிய அளவிலான சிசுவாக இருப்பவர் திருமால். ஆனால், அந்தச் சின்னஞ்சிறு திருமாலின் உந்திக்கமலத்திலிருந்து பென்னம் பெரிய பிரபஞ்சமும் கோள்களும் பஞ்ச பூதங்களும் உயிர்களும் உதிக்கின்றன. பிறகொரு நாள் திருமாலிடம் போய் ஒடுங்குகின்றன.
இந்த ஊழி நாராயணனைக் கடல் போல் விரிந்திருக்கும் காவிரிக்கு நடுவே பள்ளிகொண்டுள்ள ஆழி நாராயணனாகக் கற்பனை செய்து கொள்கிறார் திருப்பாணாழ்வார்.
ஆல மாமரத்தின் இலை மேல் ஒரு பாலகனாய்
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்
கோல மாமணியாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோர் எழில்
நீல மேனி ஐயோ நிறைகொண்டது என் நெஞ்சினையே
நீலம் என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் கரிய நிறம் என்ற பொருளில் கையாளப்பட்டது. திருப்பாணாழ்வாரும் அவ்விதமே கையாள்கிறார். அரங்கனின் (கரு) நீலத் திருமேனியும் அதில் அவர் அணிந்திருக்கும் அழகிய மணிகள் பதித்த பதக்கமும் முத்துமாலையும் அவரைக் கொள்ளை கொள்கின்றன. கரிய நிறம் எல்லாவற்றையும் உள்வாங்கும் குணம் கொண்டதல்லவா!!
கரிய பெருமாளின் கொள்ளை அழகு தன்னைக் கொள்ளை கொள்ளும் அழகைப் பாடும்போது ‘ஐயோ நிறைகொண்டது என் நெஞ்சினையே’ என்கிறார் திருப்பாணாழ்வார். இங்கே ஐயோ என்பது அமங்கலச் சொல்லன்று. 'Wow' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான பொருள் கொண்ட ஒரு நல்ல மங்கலத் தமிழ்ச்சொல். வியப்பின் குறியீடு.
இந்தப் பாசுரத்தால் உந்தப்பட்டுதான் கம்பரும் தானெழுதிய கம்பராமாயணக் காப்பியத்தில் ராமனின் அழகைப் பாடும்போது,
வெய்யோன் ஒளி தன் மேனியின்
விரி சோதியின் மறைய,
பொய்யோ எனும் இடையாளொடும்
இளையானொடும் போனான்
‘மையோ, மரகதமோ, மறி
கடலோ, மழைமுகிலோ,
ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர்
அழியா அழகுடையான்
என்று எழுதுகிறார். ஆலிலைக் கண்ணனை அரங்கநாதப் பெருமானாகத் திருப்பாணாழ்வார் கண்டதற்கு ஒரு முக்கிய காரணமும் உண்டு. ஆலிலையில் கண் வளரும் கண்ணனுக்குப் பசியெடுத்தால் அது பிரபஞ்சத்தின் இறுதிக்காலம் என்று பொருள். ஆதிசேஷனில் கண் வளரும் அரங்கனுக்குப் பசியெடுக்கிறது எனில் அது நமது ஆணவத்தின் இறுதிக்காலம் என்று பொருள்.
ஆணவம் என்னும் பொய்யான உலகம் அழியும் போது தான் மெய்யான இன்பம் பிறக்கிறது. அந்த மெய்யான இன்பத்தைத் துய்க்கும் போது தான் திருப்பாணாழ்வாரிடமிருந்து அடுத்தடுத்து பாசுரங்கள் பிறக்கின்றன. அந்த மெய்யான இன்பமும் திருமாலே தான் என்பதை நாம் சொல்லத்தான் வேண்டுமோ!!
| தொடரும் |
முந்தைய அத்தியாயம்: நாம் காணும் கண் நம்மைக் காணுமா? | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 17