

காஞ்சியில் பிறந்தால் முக்தி, காசியில் உயிரிழந்தால் முக்தி, தில்லையில் தரிசித்தால் முக்தி என்றால், அக்னி பிழம்பாக காட்சி தரும் திரு அண்ணாமலையை நினைத்தாலே முக்தி. சித்தர்கள் வணங்கிய புண்ணிய பூமி. உலகமே வழிபடும், திருவண்ணாமலையில் 25 ஏக்கரில் அமைய பெற்றுள்ளது அண்ணாமலையார் கோயில். அக்கோயிலில் மூலவர் மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதி உட்பட பல்வேறு சன்னதிகள் உள்ளன. மூலவர் உள்ளிட்ட தெய்வங்களை வழிபட்டாலும், முழுமையான தரிசனம் நிறைவு பெற, அண்ணாமலையாரின் திருப்பாத தரிசனம் மிகவும் முக்கியமானது என சிவனடியார்கள் கூறுகின்றனர்.
மேலும் அவர்கள் கூறும்போது, “அண்ணாமலையார் கோயிலில் மூலவர் மற்றும் அம்மன் சன்னதியில் பக்தர்கள் வழிபடுகின்றனர். அதே நேரத்தில் முழுமையான தரிசனம் பெற, அண்ணாமலையாரின் திருப்பாதத்தை தரிசனம் செய்வது என்பது சிறப்பானதாகும். கோயிலின் 4-ம் பிரகாரத்தில், மேற்கு திசை கோபுரத்தின் அருகே உள்ளது திருப்பாதம். சித்தர்
களும், அடியார்களும் பாத தரிசனம் வேண்டி கடும் தவம் இருந்ததால், விஸ்வரூப மூர்த்தியாக அண்ணாமலையார் எழுந்தருளிய இடத்தில் திருப்பாதம் அமைந்துள்ளது.
திருப்பாதம் சன்னதியில் தினசரி மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. பாதத்தை சுற்றியுள்ள தூண்களில் விநாயகர், முருகர், கோதண்டராமர் மற்றும் சக்திதேவி ஆகியோரது திரு உருவங்கள் காட்சி தரும். திருப்பாதத்தை தரிசனம் செய்யும்போது, ஒவ்வொருவரது மனதிலும் அமைதி நிலவும். கண்களை மூடிக் கொண்டு சுவாமியை தரிசிக்கும்போது, உள்ளத்தில் இருள் நீங்கி வெளிச்சம் பரவும். மூலவர் உள்ளிட்டவர்களை தரிசனம் செய்த பிறகு, இறைவனின் பொற்பாதத்தை வணங்குவது நிறைவு தரும்.
அண்ணாமலையார் கோயிலில் பொற்பாதம் அமைந்துள்ளது போல், 2,668 அடி உயரம் உள்ள மலை மீதும் இறைவனின் பொற்பாதம் அமைந்துள்ளது. மகா தீபத்தை தரிசிக்க செல்லும்போது, அண்ணா மலையாரின் பொற்பாதத்தையும் பக்தர்கள் வணங்கி வருகின்றனர்” என்றனர்.