

ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் சீனிவாசகன்
விருதுநகர் மாவட்டத்தில் முதன்முறையாக ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளித்து புதிய சாதனை படைத்து வருகிறார் குமாரலிங்கபுரத்தைச் சேர்ந்த சீனிவாசகன் (33) என்ற இளைஞர்.
வேளாண் புரட்சிக்குப் பிறகு நவீன தொழில்நுட்பங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், நவீன விவசாயத்தில் ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எந்த வகைப் பயிராக இருந்தாலும் ஒரு ஏக்கருக்குப் பூச்சி மருந்து தெளிக்க வெறும் 3 நிமிடங்கள் மட்டுமே போதுமானது என்கிறார் சீனிவாசகன். தற்போது விவசாயப் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாலும், நேரத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் ஆட்களை வைத்து மருந்து தெளிப்பதற்குப் பதிலாக, ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த விருதுநகர் மாவட்டத்தில் நல்ல வரவேற்பு இருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.
வழக்கமான முறையில் ஆள் வைத்து பூச்சி மருந்தைத் தண்ணீரில் குறிப்பிட்ட சதவீதத்தில் கலந்து தெளிக்கும் முறையைக் காட்டிலும், ட்ரோன் மூலம் தெளிக்கும்போது பூச்சி மருந்தின் அளவும் தண்ணீர் பயன்பாடும் கணிசமாகக் குறைகிறது.