

‘தேன்’ என்று சொன்னாலே குமரி மாவட்டத்தின் மார்த்தாண்டம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது. இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளில் வாழும் ஆரோக்கிய விரும்பிகளாலும் ‘மார்த்தாண்டம் தேன்’ தனித்துவமாகப் போற்றப்படுகிறது.
இந்தப் புகழுக்குக் பின்னால் பல முன்னோடி விவசாயிகளின் அயராத உழைப்பு ஒளிந்திருக்கிறது. மார்த்தாண்டம் தேனின் வரலாறு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், 1883இல் திருச்சியில் பாதிரியார் நியூட்டன் என்பவரால் தேனீ வளர்ப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. தேன் உற்பத்திக்கு மிகவும் ஏற்ற இடமாக கன்னியாகுமரி மாவட்டத்தின் மார்த்தாண்டம் பகுதி தேர்வானது.
நீண்ட முயற்சிக்குப் பிறகு, 1919இல் ஒய்.எம்.சி.ஏ (YMCA) வாயிலாக மார்த்தாண்டத்தில் தேன் உற்பத்தி முறைப்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மார்த்தாண்டம், குலசேகரம், அருமனை, பேச்சிப்பாறை, திற்பரப்பு மற்றும் மலைக் கிராமங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தேன் உற்பத்தியில் ஈடுபடத் தொடங்கினர்.
81 வயதிலும் தளராத உழைப்பு
மார்த்தாண்டம் தேனின் உற்பத்தியைப் பெருக்கி, பல்லாயிரக்கணக்கானோருக்குப் பயிற்சி அளித்த முன்னோடி விவசாயிகளில் முக்கியமானவர் குலசேகரம் அருகே உள்ள கொட்டூரைச் சேர்ந்த பி.ஹென்றி (81). தமிழ்நாடு தேனீ வளர்ப்போர் விவசாயிகள் சங்கங்களின் கவுரவத் தலைவரான இவர், தனது 20 வயதிலேயே இத்தொழிலில் கால்பதித்தார்.