

தன்னுடைய நாட்டுக்கோழி பண்ணையில் ரியால் முகம்மது
உவர்ப்புநீர் நிறைந்த நிலத்தடிச் சூழலையும் கடந்து, ஒருங்கிணைந்த பண்ணை முறையில் ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்துக்கும் மேல் லாபம் ஈட்டி வருகிறார் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் புதுவலசை கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த ரியால் முகம்மது.
துபாயில் இருபது ஆண்டுகள் பணியாற்றிவிட்டுப் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பிய இவர், வெளிநாட்டு வேலைக்குப் பதிலாகத் தனது பூர்வீகத் தென்னந்தோப்புடன் கூடுதலாக நிலம் வாங்கி விவசாயத்தில் முழுமையாகக் களமிறங்கினார்.
வயதான மரங்கள் பட்டுப்போன தனது ஏழு ஏக்கர் நிலத்தில் புதிதாக 560 தென்னங்கன்றுகளை நட்டுப் பராமரித்து வருவதன் மூலம் ஆண்டுக்கு 20 ஆயிரம் தேங்காய்கள் கிடைத்து வருகின்றன, அதன் வழியாக ரூ. 3 லட்சம் வருமானம் ஈட்டுகிறார்.
இது தவிர, இத்தென்னந்தோப்பில் ஐம்பது நாட்டு வெள்ளாடுகளை வளர்த்து, அவற்றின் குட்டிகளை வியாபாரிகளுக்குக் கறிக்காக விற்பனை செய்வதன் வாயிலாக ஆண்டுதோறும் ரூ. 3 லட்சம் லாபம் பெறுகிறார்.