Last Updated : 01 Oct, 2017 12:32 PM

 

Published : 01 Oct 2017 12:32 PM
Last Updated : 01 Oct 2017 12:32 PM

இல்லம் சங்கீதம் 3: யாருக்கு மாப்பிள்ளை யாரோ?

உச்சி முகர்ந்து

கன்னம் தடவி

நெற்றியில் முத்தமொன்று

பதிக்கையில்

உன்னில் காண்கிறேன்

தாயின் வாசம்!

- ப்ரியன்

வீடு திரும்பிய வேகத்தில், “மாப்பிள்ளைக்குப் பிடிச்சுப் போச்சாம். சம்மதம்னு தரகர் கிட்ட சொல்லியனுப்பிட்டாங்க” என்றார் அப்பா. அதைச் சொன்ன விதமும், கையிலிருந்த ஸ்வீட் பாக்ஸும் அப்பாவின் ஒப்புதலைப் பறைசாற்றின. உள்ளறைக்கு விரைந்து ஹேமாவிடம் அதை சந்தோஷமாகப் பகிர்ந்துகொண்டதில் அம்மாவின் சம்மதமும் தெரிந்தது. இரவு உணவின்போது ஹேமாவிடம் அப்பா கேட்டார்: “உனக்கு மாப்பிளையைப் பிடிச்சிருக்காம்மா?”.

வரன் தேடும் வைபவம்

வரன் தேடும் வைபவத்தில் இது எத்தனையாவது மாப்பிள்ளை என்று ஹேமா யோசித்தாள். எப்போதோ அந்த எண்ணிக்கை இரட்டை இலக்கமாகியிருந்தது. முதல்முறை மெடிக்கல் ரெப் மாப்பிள்ளை பெண் பார்க்க வந்த நாளன்று ஹேமா மிகவும் ஆர்வத்தோடு இருந்தாள். சுருட்டை முடியும் கம்பளிப்பூச்சி மீசையுமாக காபியை ருசிக்கும் பாவனையில் ஹேமாவைப் பார்வையால் விழுங்கியவனை அவளும் ரசித்தாள். ஆனால், மாதத்தில் பாதி நாட்கள் ஊர் சுற்றும் மாப்பிள்ளையின் உத்தியோக இயல்பை அறிந்ததும் ஹேமாவின் அப்பா அந்த வரனை நிராகரித்தார். ஹேமாவுக்குள் வட்டமடித்த உணர்வுகள் சட்டென வடிந்தன. இந்த வயதில் ஹார்மோன்களின் இயல்பு இப்படித்தான் என்று பள்ளிப் பாடத்தில் சந்தேகம் நிவர்த்திக்கும் சாக்கில் சொல்லி வளர்த்த அப்பாவின் அதே அக்கறையை அவள் ஏற்றுக்கொண்டாள்.

அதன் பின்னர் வந்த வரன்களை முதிர்ச்சியாக எதிர்கொள்வது ஹேமாவுக்குப் பழக்கமானது. ஏதோ சில காரணங்களால் வரனை நிராகரிக்கும் அப்பாவின் முடிவை அவள் புன்னகையுடன் ஏற்றாள். கோயில் வளாகத்தில் வைத்து அறிமுகமான அந்த ஆசிரியர் வரனையும் முதல் பார்வையில் ஹேமாவுக்கு பிடித்திருந்தது. ஆனால், “வருமானம் போதாது. அதனால வெயிட்டிங் லிஸ்ட்ல வெச்சுடலாம்” என்ற அப்பாவின் முடிவை அவள் புன்னகையுடன் ஏற்றாள். அவனே ஒரு மதிய உணவு இடைவேளையில் ஹேமாவின் அலுவலகம் தேடி வந்து, “எனக்கு உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு. என்னோட நிறம் தவிர்த்து உங்க வீட்டார் தயங்குவதில் அர்த்தமில்லைன்னும் நினைக்கிறேன்..” என்று கண்கள் பார்த்துப் பேசினான். அதை அப்படியே மாலை அப்பாவிடம் சொன்னதும், “அட ஆமாம்மா, அந்தப் பையன் கறுப்புன்னாலும் என்னை மாதிரியே களையாவும் ஆரோக்கியமாவும் இருக்கான்ல..” என்று சிரித்தவாறே பேச்சை மாற்றினார். பிற்பாடு பல வரன்களைப் பரிசீலித்துக் கடைசியாக இப்போது இறுதி முடிவுக்கு வந்திருக்கிறார் ஹேமாவின் அப்பா. எந்த வகையிலும் குறையே சொல்ல முடியாத மாப்பிள்ளை வீடு இந்த முறை தகைந்திருப்பதாகவும், விட்டால் எவரேனும் கொத்திக்கொண்டு போவார்கள் என்றும் அவளது வீடு விசனப்பட்டது.

விசித்திர கணிப்பும் முன்முடிவும்

“உனக்கு மாப்பிளையை பிடிச்சிருக்காம்மா?” என்று அப்பா இரண்டாவது முறையாக கேட்டதும், அவர் எதிர்பாராத விதமாக “இல்லைப்பா..” என்றாள் ஹேமா. வீடே கொண்டாடித் தீர்த்த அந்த வரனை தனிப்பட்ட வகையில் அவளால் குறை காண முடியவில்லை. அதே சமயம் வாழ்க்கை முழுவதும் தனது கரம் பற்றிப் பயணிக்கும் இல்லறத் துணையாக அவனை ஏனோ ஏற்க முடியவில்லை. ஹேமாவின் இயல்பும், அவள் மனதில் பொதிந்திருந்த விசித்திர கணிப்புகளும், அவற்றின் அடிப்படையிலான முன்முடிவுகளும் அனைவரும் சிலாகித்த அந்த வரனை அவள் நிராகரிக்கக் காரணமாயின. அது மட்டுமல்ல, அனைத்து வரன்களையும் ஒப்பிட்டுப் பரிசீலிக்கும் அளவுகோலாக அந்த ஆசிரியர் வரனையே தான் அதுவரை பாவித்திருந்ததையும், அவனையே தனக்குப் பிடித்திருப்பதையும் ஹேமா அதற்குப் பின்னரே உணர்ந்தாள்.

துரத்தும் கேள்வி

பெற்றோர் சம்மதத்துடன் அந்த ஆசிரியரை ஒரு பொன்னாளில் ஹேமா கரம் பிடித்தாள். தன் முடிவுக்கு முதல்முறையாக எதிர் நின்று சாதித்துக்கொண்ட மகளின் மன விசித்திரம் அவளுடைய அப்பாவுக்கு இன்னமும் புரியவில்லை. அதன் பின்னர் அப்பா மகளுக்கு இடையே இன்றுவரை அடிக்கடி விவாதப் பொருளாகும் ஒரு சுவாரசிய கேள்வி இதுதான்: “வாழ்க்கைத் துணையைத் தீர்மானிப்பதில் மனித மனம் தனது ஆழமான முன்முடிவுகளுடன் எப்படி கணிக்கிறது?”.

இல்லறத் துணையைத் தேர்வு செய்வதில் நூலிழையில் ஜெயித்தவர்களையும், வாய்ப்பைப் பறிகொடுத்தவர்களையும் இந்தக் கேள்வியே மிச்ச வாழ்க்கை நெடுக துரத்திக் கொண்டிருக்கிறது.

வேதியியல் விந்தை

“மனித மனம் விசித்திரமானது. அதிலும் மரபின் அடிப்படையிலோ பிறப்பு மற்றும் வளர்ப்பு சார்ந்த சூழலின் அடிப்படையிலோ மனதின் ஆழத்தில் தங்கும் பதிவுகளும் பின்னாளில் அவ்வப்போது வெளிப்பட்டு ஒருவரது வாழ்க்கையின் முக்கியக் கட்டங்களில் முன்முடிவுகளாக வினையாற்றுவதும் உண்டு” என்கிறார் கல்லூரிப் பேராசிரியரும் குடும்ப நல ஆலோசகருமான எஸ். சுமதி.

“மரபின் அடிப்படையிலான பதிவுகள் மனித இனத்தின் ஆதி காலம் தொட்டுத் தொடருபவை. ஒரு ஆண் தனக்கான பெண்ணைப் பார்த்ததும் தனது இனத்தைப் பெருக்குவதற்கு இவளே உகந்தவள் என ஈர்க்கப்படுவதும், அதேபோல ஒரு பெண் தன்னையும் தனது வாரிசுகளையும் இவனே பாதுகாப்பான் என நம்புவதும் இந்த பதிவுகளின் அடிப்படையில் தொடருபவை. இதில் ஃபெரமோன்ஸ் (Pheromones) எனப்படும் வேதிப்பொருளுக்கு முக்கிய இடமுண்டு. விலங்கினங்களில் தம் இணையைத் தேர்ந்தெடுப்பதிலும் தீர்மானிப்பதிலும் ஃபெரமோன்ஸ் முக்கியப் பங்காற்றுகிறது. சமூக விலங்கான மனிதனிடமும் தனக்கான இணையை அடையாளம் காண்பதில் இந்த ஃபெரமோன்ஸ் பங்காற்றுகிறது.

வளர்ப்பும் ஈர்ப்பும்

அடுத்து பிறப்பு, சிறுவயது வளர்ப்பு சார்ந்த பதிவுகளும் பின்னாளில் தனக்கான வாழ்க்கைத் துணை தேடலில் வினையாற்றலாம். தனது தாயின் ஆதூரத்தைப் பிற பெண்ணிடம் காணும் ஆண்களும், தந்தையின் பாசத் தொனியை புதிய ஆணிடம் அடையாளம் காணும் பெண்களும் இந்த ரகத்தில் சேர்வார்கள். (மேலே சொல்லப்பட்ட ஹேமாவின் மணவாழ்க்கைத் தேடலைப் பொறுத்தவரை, அவளுடைய பாசத்துக்குரிய தந்தையைப் பிரதிபலித்ததே அந்த ஆசிரியர் வரனை அவள் தீர்மானிக்க உந்தியிருக்கலாம்) இன்னும் சிலர் சிறு வயதில் தனக்குப் பிடித்த டீச்சர்களின் தோற்றம் அல்லது அணுகுமுறையை எதிர்பாலினத்தவரிடம் காணும்போது தன்னை அறியாது ஈர்க்கப்படுவார்கள். இதுவே சிறுவயது ‘பப்பி லவ்’, ‘க்ரஷ்’ இனக்கவர்ச்சி ஆகியவற்றுக்கும் பொருந்தும்.

எதிர்மறை ஈர்ப்புகள்

இவையெல்லாம் பிறப்பு, வளர்ப்பின் அடிப்படையிலான நேர்மறை பதிவுகள். இதுவே எதிர்மறையாகவும் போகக்கூடும். குடிகாரத் தந்தையின் மகளாக வளரும் பெண் குடிகார மணமகனை நிராகரிப்பதுபோல, பழகிய சூழலின் ஈர்ப்பால் அவரை விரும்பவும் செய்யலாம். முரட்டு சுபாவம் கொண்டவர்களைச் சில பெண்கள் நேசிப்பதில் இந்த மாதிரியான உள்ளார்ந்த விசித்திரப் பதிவுகளுக்கு முக்கிய இடமுண்டு. ஒரு காலத்தில் மனதின் பதிவுகளாக சேருபவை நனவிலி நிலையில் எந்த மாதிரியாகவும் உருமாறி பிற்காலத்தில் முன்முடிவுகளை உருவாக்குவதே இவற்றுக்குக் காரணம்.

01CHLRD_S.SUMATHI சுமதி

இல்லறத்திலிருந்து தொடங்குவோம்

துணைத் தேடலில் உணர்வுபூர்வமாக ஆரோக்கியமாக உள்ளவர்கள், அதே போன்ற பக்குவமடைந்தவர்களை ஈர்ப்பார்கள். இவர்களின் இல்லற வாழ்க்கை மிகவும் முதிர்ச்சியாகவும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவும் அமையும். உணர்வுபூர்வமான ஆரோக்கிய வளர்ப்பு ஒருவருக்கு சிறப்பான துணையைத் தேடித்தரும். ஆனால், இவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. உணர்வுபூர்வமான தேவைகள் நிவர்த்தி செய்யப்படாததே இன்றைய மனித இனம் எதிர்கொள்ளும் மாபெரும் அச்சுறுத்தல் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. உணர்வுபூர்வமான ஆரோக்கியத்தில் முழுமை அடைவதன் மூலம் இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள முடியும். அவற்றை இல்லறத்தில் இருந்தே தொடங்க வேண்டும்” என்கிறார் சுமதி.

(மெல்லிசை ஒலிக்கும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x