Last Updated : 24 Sep, 2017 11:49 AM

 

Published : 24 Sep 2017 11:49 AM
Last Updated : 24 Sep 2017 11:49 AM

இல்லம் சங்கீதம் 2: காதல் வரும் காலம்!

அகப்பட்டுக் கொள்ளத்தான் இந்த மீன் அலைகிறது!

தொட மாட்டோம் என்று தூண்டில்கள்

சொல்லிவிட்ட பிறகும்!

-மு.மேத்தா

லகிலேயே மிகவும் மகிழ்ச்சியான பெண்ணாகத் தன்னை உணர்ந்தாள் ஜனனி. காலையில் விழித்தது முதல் இரவுத் துயிலில் ஊடாடும் கனவுகள்வரை கடக்கும் நொடிப்பொழுது ஒவ்வொன்றிலும் இனிமை தோய்ந்திருந்தது. பெரியவர்களின் கல்யாண ஏற்பாட்டில், அவர்களின் ஆசிர்வாதத்தில் கனிந்த காதல் என்பது எத்தனை பேருக்கு வாய்க்கும்?

கல்யாண காதல்

ஆனந்த் உடனான உறவை எந்த வரையறைக்குள் அடக்குவது என்றே ஜனனிக்குத் தெரியவில்லை. காதலனா, கணவனா? இரண்டுமே என்று சொல்லலாமா அல்லது இரண்டுக்கும் இடைப்பட்டவன் என்று சொல்லலாமா? ஆமோதிப்பாய் ஜனனியின் செல்போன் சிணுங்கி மெஸேஜ்களைத் தூவியது. அவள் மனவோட்டத்தை அறிந்ததுபோல “அடியே பாதிப் பொண்டாட்டி..” என்று விளித்து வழக்கம்போல அந்தரங்க மெசேஜ்களை அனுப்ப ஆரம்பித்திருந்தான் ஆனந்த். அவற்றை வாசிக்கத் தொடங்கியதும் ஜனனிக்கு உலகம் மறந்தது. அதன் பின் அவளுக்கு அலுவலகத்தில் வேலை ஓடவில்லை.

ஜனனி கோவையிலும் ஆனந்த் பெங்களூரிலுமாக ஐ.டி. நிறுவனங்களில் கை நிறையச் சம்பாதித்தார்கள். இருவருக்கும் பெற்றோர் நிச்சயித்த திருமணம் முடிவாகியிருந்தது. ஆனந்தின் பதவி உயர்வுக்கான இரண்டு மாத ஆஸ்திரேலியப் பயணம் இடை மறிக்க, அதன் பிறகான முகூர்த்த நாள் தேடலில் திருமண வைபவம் ஆறு மாதங்களுக்குத் தள்ளிப்போனது. இப்படித்தான் கணவன்-மனைவி உறவுக்கு முன்னரே ஆனந்தும் ஜனனியும் திடீர் காதலர்களாக உருவெடுத்தனர்.

வம்பில் முடிந்த வெள்ளோட்டம்

முதல் சந்திப்பில் நல விசாரிப்புகளுக்கு அப்பால் ஆனந்துடன் பேச அவளுக்கு எதுவுமில்லை. இருவருக்கும் இடையேயிருந்த தொலைவைத் தகவல் தொடர்பு சாதனங்கள் நீக்கின. ஆனந்த் பெங்களூருவில் இருந்தபோது பேச்சு, சாட்டிங் என்றிருந்த பரிமாற்றம் அவன் ஆஸ்திரேலியா போனதும் ஸ்கைப்புக்குத் தாவியது. ‘இந்தப் பூனையும் பால் குடிக்கிறதே’ என்று ஜனனியை வீடும் அலுவலகமும் கேலி பேசின. ஜனனி கண்களில் வெட்கம் மின்ன, “எங்க கல்யாண வாழ்க்கைக்கு வெள்ளோட்டம் பார்க்கிறோம்” என்றாள். எவர் கண்பட்டதோ அந்த வெள்ளோட்டத்தின் வழியில் தடைகள் எதிர்பட, திருமண ஏற்பாடு நாள் குறிப்பிடாது தள்ளிப்போனது.

என்ன நடந்தது என்று ஜனனி ஊகிப்பதற்குள் என்னன்னவோ நடந்திருந்தது. ஜனனி-ஆனந்த் இடையிலான உறவுப் பேணலில் எங்கோ கசப்புத் தட்டியிருந்தது. சில தினங்கள் பேசாதிருந்ததும் பல தினங்கள் பரஸ்பரம் குற்றம்சாட்டியதும் நடந்திருந்தன. இருவருக்கும் இடையில் வந்த வேகத்தில் மறைந்திருக்க வாய்ப்புள்ள கசப்புகள், குடும்பத்தாருக்குத் தெரியவந்ததால் ஆழப் பரவின. இருத் தரப்பிலும் ஆளாளுக்கு தோதான குற்றச்சாட்டுகளுடன் பலர் களமிறங்கினர். ஜனனியும் ஆனந்தும் சுதாரிப்பதற்குள் உறவினர் என்ற பெயரில் எவரெவரோ பொறுப்பற்றுப் புகுந்து விளையாடினர்.

இறுதியாகப் பொதுவான பெரியவர்கள் முன்நின்ற பஞ்சாயத்தில் ஒரு வழியாகப் பெயருக்குத் திருமணம் நடந்தது. பேசிப் பேசி, ஆசை ஆசையாய்க் கனவு கண்டிருந்த திருமண விழா இருவருக்கும் ‘மறந்தாக வேண்டிய சம்பவ’மாகத் தேங்கிப் போனது. இன்று இருவரும் ஒரே கூரைக்குள் வசிப்பதன் அடையாளமாகக் குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால் மண வாழ்க்கையில் மலர்ந்து மணம் வீசவேண்டிய இணக்கம் வெளிப்படையாகத் தொலைந்திருக்கிறது. திருமணத்துக்கு முன்னர் கழித்த ஒரு சில தினங்கள் பொன் யுகங்களாய் நினைவுப் பரணில் கண்சிமிட்ட, நடப்பு இல்வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் கழிப்பது நரக வேதனையானது.

அத்துமீறினால் ஆபத்து

ஜனனி- ஆனந்த் இடையே நடந்தது என்ன? அப்போதைய குலாவலின் குதூகலத்தில் எல்லை மீறியது யார்? இருவருக்குமே தத்தம் வீட்டார் மீது கொள்ளைப் பிரியம் உண்டு. புதிதாகத் தங்களுக்குள் நேசத்தை வளர்க்கும் முனைப்பில் இருவருமே பூர்வீக நேசத்தை புண்படுத்தியிருந்தனர். ஆனந்தின் சகோதரி பற்றி ஜனனி வைத்த விமர்சனம், ஜனனியின் தந்தை குறித்து எவரோ சொன்னதாக ஆனந்த் அடித்த கமெண்ட், ‘ஆனந்த்’ என்றதுமே நினைவுக்குவரும் பள்ளித் தோழன் குறித்து ஜனனி பகிர்ந்துகொண்டவை, ஆனந்த் தன் அலுவலகத்தில் பணியாற்றும் வடக்கத்திப் பெண்ணின் அழகை ஜனனியுடன் ஒப்பிட்டு பேசியது... இப்படி ஏதோ ஒன்றில் பிரச்சினை முளைத்திருக்கிறது. பின்னாளில் பேசித் தீர்க்கும் முயற்சியில் இருவரும் இறங்கியபோதும் மற்றுமொரு புதிய சண்டையே வெடித்தது. போதிய முதிர்ச்சியின்றி இந்தத் தகராறுகளை கிளிப்பிள்ளையாய்க் குடும்பத்தாரிடம் தெரிவித்ததில் பிரச்சினை விஸ்வரூபமானது. இந்தத் தெளிவும்கூட திருமணமாகி ஆண்டுகள் கடந்த பிறகுதான் இருவருக்கும் புரிந்தது.

காத்திருப்புக் காலத்தில் கவனம்

“இவர்களைப் போல திருமணத்துக்கான காத்திருப்பு காலத்தை (கோர்ட்ஷிப்) கையாளத் தெரியாமல் இல்லறத்தின் மிச்ச வாழ்க்கையைக் கெடுத்துக்கொள்பவர்கள் அதிகம்” என்கிறார் உளவியல் மருத்துவ நிபுணர் பா.சுஜிதா.

“திருமண ஒப்புதலை உறுதிசெய்த உற்சாகத்தில் பெரியவர்கள் அனுமதியுடன் இளம் ஜோடிகள் பழகுவது இப்போது அதிகரித்துவருகிறது. கணவன், மனைவியாக மாறப் போகிறவர்கள் காத்திருக்கும் நாட்களை தங்களின் பரஸ்பர புரிதலுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். ‘கோர்ட்ஷிப்’ எனப்படும் ‘கல்யாணப் பாதையில் காதலாடும்’ இந்த இடைப்பட்ட காலத்தைக் கடப்பதில் இருவருமே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கண்ணியம் பேணுவோம்

இல்லற வாழ்வின் அச்சாரமாக அமையக்கூடிய சுகமான நினைவுகள் இந்த நாட்களில் கிடைக்கக்கூடும். காதல் மற்றும் கல்யாண உறவுகளுக்கு முன்பாக அப்போது மலரும் கண்ணிய நட்பை இருவரும் மதிக்க வேண்டும். பின்னாளில் கணவன், மனைவி உறவு அலுத்தால்கூட முன்பு பேணிய நட்புணர்வு அஸ்திவாரமாய்க் காத்து, இல்லறத்தை இற்றுப்போகாது இழுத்துப் பிடிக்கும். இந்த ‘கோர்ட்ஷிப்’ பழகுதலில் இன்னொரு பயனும் உண்டு. இருவருக்கும் இடையே சரிசெய்யமுடியாத முரண்பாடுகள் அதிகம் தென்பட்டால் திருமண ஏற்பாட்டை மறுபரிசீலனை செய்யவும் வாய்ப்புண்டு. இதற்காகவே சில பெரியவர்கள் செயற்கையான இடைவெளிக் காலத்தை உருவாக்குவதும் உண்டு.

சங்கடத்தில் தள்ளும் பாசாங்குகள்

காத்திருப்புக் காலத்தில் கசப்புகள் எழுவதற்கு முக்கியக் காரணம், அந்த உறவில் பாசாங்குகளே அதிகம் இடம்பிடித்திருக்கும் என்பதுதான். இருவருமே வலிந்து தங்களது பாசிட்டிவ் பக்கங்களை மட்டுமே காட்டிக்கொள்வார்கள். அவற்றை வைத்து ஒருவரைப் பற்றிய தீர்மானத்துக்கு வரக் கூடாது. இருவருக்கும் இடையில் பலப்பல சங்கதிகளை ‘போட்டு வாங்கும்’ முயற்சிகளும் அந்த காலத்தில் முனைப்பாக நடக்கும். இவை தவிர்த்து எல்லைக்கோடு தாண்டி எழும் பகிர்வோ, பழக்கமோ சங்கடங்களையே உண்டாக்கும். அப்போதைய காதலில் இன்பம் அதிகம் என்று எல்லை கடப்போர் அதிகம். இதனால் திருமணத்துக்குப் பிந்தைய அந்தரங்க உறவு புளித்துப்போகவும்கூடும். பெற்றோரும் சமூகமும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தங்களது நடவடிக்கைகளைச் சுயமாய் கண்காணித்துக்கொண்டாலே இந்த கோர்ட்ஷிப் காலத்தைப் பிரச்சினையின்றி கடந்துவிடலாம்” என்கிறார் சுஜிதா.

சிலர் தங்களையும் அறியாமல் பல்வேறு முன்முடிவுகளுடன் தங்கள் இணையைத் தேர்ந்தெடுப்பது பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

(மெல்லிசை ஒலிக்கும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x