Published : 25 Sep 2017 11:27 AM
Last Updated : 25 Sep 2017 11:27 AM

வங்கி வேலையிலும் உத்தரவாதமில்லை!

மு

ன்பெல்லாம் வேலை இழப்பு என்பது முக்கிய செய்தியாக இருந்த சூழலில் தற்போது பத்தோடு பதினொன்றாக வேலை இழப்பு செய்திகள் மாறும் அளவுக்கு வேலை இழப்புகள் அதிகரித்து வருகின்றன. நிறுவனம் நஷ்டத்தை சந்திக்கும் போதும், இழுத்து மூடப்படும் போதும் மட்டுமே முன்பு வேலை இழப்புகள் ஏற்பட்டன. ஆனால் தற்போது நிறுவனத்தை சிறப்பான நிலையில் தக்கவைத்துகொள்ள, டிஜிட்டல்மயம் உள்ளிட்ட பல காரணங்களுக்காக வேலை இழப்புகள் நடக்கின்றன.

இந்தியாவின் முக்கியமான தனியார் வங்கிகளில் ஒன்றான ஹெச்டிஎப்சி தொடர்ந்து பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து வருகிறது. கடந்த மார்ச் காலாண்டில் மட்டும் இந்த வங்கி 6,096 நபர்களை பணியில் இருந்து நீக்கி இருக்கிறது. வங்கி டிஜிட்டல் மயமாகி வருவதால் இந்த நடவடிக்கை என வங்கியின் துணை நிர்வாக இயக்குநர் அப்போது தெரிவித்திருந்தார். மனிதர்களின் துணையில்லாமல் தனிநபர் கடன் வழங்க முடியும். இதுபோல பணம் டெபாசிட் செய்தல் உள்ளிட்ட பல சேவைகளை வழங்க முடிவதால் மனிதர்களுக்கான தேவை குறைவு என்று கூறினார். இத்தனைக்கும், இந்த காலாண்டில் வங்கி கிளைகளின் எண்ணிக்கையும் உயர்ந்திருக்கிறது. முந்தைய டிசம்பர் காலாண்டிலும் 4,581 நபர்களை இந்த வங்கி நீக்கியது. வரும் காலாண்டுகளிலும் இதுபோன்ற நடவடிக்கை இருக்கும் என அப்போது கூறினார்.

ஹெச்டிஎப்சி வங்கியை தொடர்ந்து யெஸ் வங்கியும் 2500-க்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்கி இருக்கிறது. இந்த வங்கியின் ஒட்டு மொத்த பணியாளர்களின் எண்ணிக்கையில் இது 10 சதவீதமாகும். தவிர பணியாளர்களின் செயல்பாடுகள் மீது வழக்கமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என வங்கி விளக்கம் அளித்து இருக்கிறது.

முதலிடத்தில் இருக்கும் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ இந்த ஆண்டு அதிகளவில் பணியாளர்களை எடுக்கப்போவதில்லை என்றும், நடப்பு நிதி ஆண்டு இறுதியில் உயரதிகாரிகள் சிலரை பணிக்கு எடுக்கவும் திட்டமிட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது. முன்பெல்லாம் வங்கியில் சேர்ந்துவிட்டால் நிலை யான நிம்மதியான வாழ்க்கை வாழலாம் என்னும் தோற்றம் இருந்தது. ஆனால் இப்போது வரும் செய்திகள் இனி வங்கி வேலையும் உத்தரவாதமில்லை என்பதை உணர்த்துகிறது.

வாடிக்கையாளர்களின் பொது வான சந்தேகங்களை விளக்குவதற்கு வங்கிகள் ரோபோக்களை பயன்படுத்த தொடங்கி இருக்கின்றன. சிட்டி யூனியன் வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி ஆகியவை ரோபோக்களை பயன்படுத்த தொடங்கி இருக்கிறது. வருங்காலத்தில் ரீடெய்ல் பேங்கிங் பிரிவை கூட இவை கையாளும் வாய்ப்புகள் இருப்பதாகவே கணிக்கப்படுகின்றன.

தவிர பொதுத்துறை வங்கிகளை இணைப்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. வங்கிகள் இணையும் பட்சத்தில் வேலை இழப்புகளும் தவிர்க்க முடியாததாகி விடும். செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோக்கள் காரணமாக அடுத்த ஐந்தாண்டுகளில் 30 % வங்கி பணி கள் கேள்விக்குறியாகும் என சிட்டி வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி விக்ரம் பண்டிட் தெரிவித்திருக்கிறார். வங்கித்துறையில் குறைந்த திறன் கொண்ட அல்லது புதிய திறனை வளர்த்துக்கொள்ளாத பணியாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறிதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x