Last Updated : 18 Sep, 2017 10:57 AM

 

Published : 18 Sep 2017 10:57 AM
Last Updated : 18 Sep 2017 10:57 AM

இல்லம் சங்கீதம் 1: அந்தரங்கம் புனிதமானது!

காதல் என்பது ஒரு சந்திப்பு

காதல் என்பது ஒரு கண்டுகொள்ளல்

காதல் என்பது இறையனுபவம்

காதல் என்பது ஒரு குதூகலம்

காதலுக்குக் காலம் கிடையாது

எந்தச் சொற்களாலும்

உணர்த்திவிட முடியாதது அது

காதல் மட்டுமே காதலை அறியும்

- தேவதேவன்

திருமணமாகி பத்தோ பதினைந்தோ ஆண்டுகள் உருண்டோடிய பிறகும் உங்கள் நேசம் இன்னும் ஈரத்தோடு இருக்கிறதா? நெருக்கடிகளுக்கு இடையே தருகிற அவசர முத்தத்திலும் காதலின் ஜீவன் இன்னும் மிஞ்சிருக்கிறதா? பெற்றோர் நிச்சயித்தோ காதலித்துக் கைத்தலம் பற்றிய திருமணமோ எதுவாக இருந்தாலும் தம்பதியரின் தொடக்க இணக்கம் முதல் நாள் போலவே என்றைக்கும் இருக்குமா? நடைமுறையில் அதற்குச் சாத்தியம் குறைவுதான். ஆனால் குழந்தை, வீடு, வாகனம், செல்வாக்கு என எல்லாவற்றிலும் செழித்துக் கிளைக்கும்போது, அவற்றுக்கு ஆதாரமாக உள்ளிருக்கும் நேச வேரை மட்டும் கருகவிடலாமா?

உயிர்ப்பின் ரகசியம்

இந்த உலகில் ஒருவரை நேசிப்பதும் ஒருவரால் நேசிக்கப்படுவதும்தான் ஆயிரம் அல்லல்களுக்கு மத்தியிலும் ஒருவரை உயிர்ப்புடன் வைத்திருக்கும். கணவன், மனைவிக்கு இடையே பகிரப்படும் அந்த நேசமே இனிமையான இல்லறத்தின் உந்துசக்தி. அவ்வப்போது கண்ணாடியைப் பர்த்து நம் தோற்றத்தைச் சரிசெய்வதில் இருக்கும் முனைப்பு போன்றே, தங்கள் மத்தியிலான நேசம் குறையாமல் இருக்கிறதா என்று பராமரிப்பதும் தம்பதியருக்கு முக்கியம். மணமான புதிதில் இதற்காக மெனக்கெடல் தேவையில்லை. மனித இனம் தப்பிப் பிழைப்பதற்காக இயற்கை வழங்கிய ஆதார ஈர்ப்பில் சிக்கி, ஆரம்ப காலங்கள் எப்படியோ ஓடிவிடும். அதன் பின்னர் நிதர்சன உலகில் கால்கள் பாவியதும் பிரச்சினைகள் ஒவ்வொன்றும் முள்ளாய்க் குத்தும். அப்போது மிச்சமிருக்கும் புரிதலும் காதலுமே இல்லறத் தேரைத் தொய்வின்றி இழுத்துச் செல்ல உதவும்.

ஆதி காலம் தொட்டு தற்போதுவரை அதிகம் சிலாகிக்கப்படுவதும் அதே வேகத்தில் வெறுக்கப்படுவதும் ஒன்றுதான். அது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான தனிப்பட்ட உறவு. கொண்டாடிக் களித்திருக்கும் பொழுதுகளிலும் நாமறியாமலேயே சிலதைப் போட்டு உடைத்திருப்போம். அதைக்கூட அறியாமல் கடந்திருப்போம். ஒரு சொல், சிறு சம்பவம், துளி எதிர்பார்ப்பு, சிறிய மறத்தல் இவை போதும் ஆண்-பெண் இடையிலான உறவு விரிசல்விட.

இல்லறத்தை இனிக்கும் சொர்க்கமாகவோ தகிக்கும் நரகமாகவோ ஆக்கிக்கொள்வது அவரவர் கையிலிருக்கிறது. அதே சிறு சொல், குறும்புப் புன்னகை, பழகிய தொடுகை, ஞாபகக் கிளர்ச்சி, குறுந்தகவல், இதழோர இச் போன்றவற்றில் ஒன்று போதும் விரிசலைச் சரிசெய்ய. புகைச்சல் எதுவானாலும் ஊதித் தள்ளிவிட்டு மீண்டும் இல்லறத் தண்டவாளத்தில் தடம்புரளாது இணைந்துவிடலாம். விவாகரத்து கோரி நீதிமன்றத்தின் நெடிய படிகளில் காத்திருப்போரை விசாரித்தால் சில உண்மைகள் புரியும். புறந்தள்ளக் கூடிய அற்ப காரணத்துக்காகத்தான் பெரும்பாலான தம்பதியரின் முதல் சண்டை முளைத்திருக்கும்.

இல்லறத்தை நல்லறமாக்கும் இனிய பயணத்தில் கணவன், மனைவிக்கு இடையே எழ வாய்ப்புள்ள கசப்புகள் ஏராளம். பரஸ்பரப் பழிப்புகள், பாலியல் ஐயங்கள், இனங்காட்டாத அச்சங்கள், புதுப்புதுப் புதிர்கள், புரட்டுகள் என அவற்றின் நீளம் கொஞ்சம் அதிகம். அவற்றை ஒவ்வொன்றாக ஆய்ந்து, நல்வாழ்க்கைக்கான பாதையில் பயணிப்பதுதான் இந்தத் தொடரின் நோக்கம். இல்லறத்தைப் பாதிக்கும் கலவர நிலவரம் ஒன்றை இந்த வாரம் பார்ப்போம்.

உறவை உடைக்கலாமா?

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தகவல்படி இந்தியப் பெண்களை அச்சுறுத்தும் புகார்களில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது ‘ஆபாசப் பழிவாங்கல்’. நம்பிய துணையுடன் நெருக்கமாக இருந்த வீடியோ அல்லது படங்களின் பதிவை இணையத்திலோ சமூக ஊடகங்களிலோ பகிர்வதன் மூலம் அந்தப் பெண்ணைப் பழிவாங்குவதாகத் திருப்தியடையும் ஆண்களின் பிறழ்வு நடவடிக்கை இப்போது நாட்டில் அதிகரித்திருக்கிறது.

திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டது அல்லது இவரைத்தான் திருமணம் செய்யவிருக்கிறோம் என்ற நம்பிக்கையில் ஒரு பெண், ஆணின் விருப்பத்துக்கு உடன்படுகிறார். ஒரு பெண் தன் நம்பிக்கைக்குரிய ஆணுடன் தனிமையைப் பகிர்ந்துகொள்கிறார். பொங்கிப் பிரவாகிக்கும் இயற்கை விழைவுக்கு இடம்கொடுத்து இருவரும் இணைகிறார்கள். அப்போதைய நெருக்கமான தருணங்களைப் படமாகவோ வீடியோவாகவோ பதிவுசெய்கிறான் அந்த ஆண். உறவு புளித்துப்போன பின்னொரு கறுப்பு தினத்தில் அந்த ஆண் தன் வசமிருக்கும் அந்தரங்கப் பதிவுகளை வலையேற்றவோ மின்னூடகங்களில் சுற்றுக்கு விடவோ செய்கிறான். பெண் மீதான காழ்ப்பில் இந்த ஆபாசப் பழிவாங்கலில் அவன் இறங்கும்போது பாதிக்கப்பட்ட பெண் நிலைகுலைகிறாள். வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அவை பதியப்பட்ட சில மணித்துளிகளில் ஆயிரமாயிரமாய்ப் பகிரப்படுகிறது. ஆபாச வலைத்தளங்களில் அவற்றை நீக்கும் சட்டப்படியான நடவடிக்கைகளில் இறங்குவதற்குள் உலகம் முழுக்க அவை பதிவிறக்கம் செய்யப்படுகின்றன. இந்த நம்பிக்கைத் துரோகத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரைச் சார்ந்த குடும்பத்தினரும் சமூகத்தில் தலைகாட்ட முடியாது தவிப்பார்கள். பாதிக்கப்பட்ட பெண் தூக்கம் தொலைந்து மனநல சிகிச்சை முதல் தற்கொலைவரை அலைக்கழிவார். பாதிப்பிலிருந்து மீண்டு காவல்துறையில் புகார் கொடுப்பவர்கள் சொற்பமே.

உறவில் மரியாதை அவசியம்

இனிமையான இல்லறத்துக்கு அச்சுறுத்தலாக எழும் இந்த ஆவணப் பதிவுகளையும் அதன் தொடர்ச்சியான இழிவுகளையும் தொடக்கத்திலேயே அடையாளம் கண்டு தவிர்ப்பதோடு, அவற்றை எதிர்கொள்வதற்கான வழிகளையும் விளக்குகிறார் வழக்கறிஞரும் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் முன்னாள் உறுப்பினருமான தி.ஜெயந்திராணி.

“மனைவியை மதிக்கும் கணவர் இப்படியான பதிவுகளை எடுக்கத் துணிய மாட்டார். கணவன், மனைவி இருவருக்கும் இடையிலான அந்தரங்கம் மட்டும் புனிதமானதல்ல, அவர்களில் தனிப்பட்ட ஒருவரின் அந்தரங்கமும் புனிதமானதே! மற்றவர் அதை மதித்தே ஆக வேண்டும். அப்படி சக உயிரை மதிக்காத கணவனின் மனவோட்டத்தை மோப்பமிடுவதன் மூலம் மனைவிகள் சுதாரிக்கவும் வழிகள் உண்டு.

தன்னைவிட அழகு, பணி, சமூக செல்வாக்குகளில் மனைவி உயர்ந்தவராக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தாழ்வுமனப்பான்மையில் உழலும் கணவன் உள்ளுக்குள் மனம் பிறழ்ந்திருப்பான். மனைவி என்ற பெண்ணைத் தனக்கான உடைமையாகவும் இன்பம் துய்க்கும் பண்டமாகவும் நினைக்கும் ஆணாதிக்கக் கணவர்களிடம் பெண்களுக்குக் கூடுதல் எச்சரிக்கை வேண்டும். ஆபாச வலைத்தளங்களுக்கு அடிமையானவர்கள், தனது ஆண்மை மீது உள்ளுக்குள் ஐயமுள்ளவர்கள் அவற்றை ஆவணமாக்கி மூன்றாம் நபரிடம் பீற்ற விரும்புவார்கள். கணவனோ மனைவியோ எக்காரணம் கொண்டும் தனக்கு எவ்வளவு நெருங்கியவர்கள் என்றாலும் அந்தரங்கப் பதிவுகளைப் பகிரக் கூடாது. மின்னணுப் பதிவுகள் எப்படி அழித்தாலும் மீட்கும் ஆபத்துள்ளவை. ஆணோ பெண்ணோ தனது இணையை நேசிப்பதன் முதல் படி அவரைச் சக மனிதராய் மதிப்பதும் அவரின் உணர்வுகளை இன்றும் நாளையும் எந்தச் சூழலிலும் சிதைக்காது இருப்பதுதான்” என்கிறார் ஜெயந்திராணி.

சட்டத்துக்குட்பட்ட கணவன், மனைவி உறவிலேயே இதைப் போன்ற சிக்கல்கள் எழும்போது, திருமணத்துக்காகக் காத்திருப்பவர்கள் எவ்வளவு எச்சரிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்?

நிச்சயம் முடிந்து திருமணத்துக்காகக் காத்திருப்போரும் ஆர்வக் கோளாறில் திருமணத்துக்கு முன்பே சேர்ந்து வாழ விருப்பமுள்ளவர்களும் அறிந்துகொள்ள வேண்டியவற்றை அடுத்த வாரம் பார்ப்போம்.

(மெல்லிசை ஒலிக்கும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x