Last Updated : 25 Jul, 2014 12:52 PM

 

Published : 25 Jul 2014 12:52 PM
Last Updated : 25 Jul 2014 12:52 PM

அலசல்: பவர் ஸ்டாருக்கும் சோலார் ஸ்டாருக்கும் நன்றி!

தமிழகத்தின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற விவாதமும் கணிப்பும் சமீபத்திய சூடான செய்திகளில் ஒன்றாக இருந்தது. அதைத் தொடர்ந்து நிகழ்ந்த சர்ச்சைகளையும் கவனித்திருப்பீர்கள். அதே போல இன்னொரு நடிகர் தன்னுடைய பட்டத்தைத் துறப்பதாக அறிவித்தார். பட்டங்களின் மேல் நம் தலைவர்களுக்கும் நடிகர்களுக்கும் ஏன், மக்களுக்கும்கூட இருக்கும் மோகம் சற்றே ஆச்சரியத்துக்கு உரியதாக இருக்கிறது. நேற்று அறிமுகமான கதாநாயக நடிகரைக்கூடப் பெயர் சொல்லி அழைத்துவிட முடியாது. இருபது வயது மூத்த இயக்குநர்கூட அவரைக் குறைந்தபட்சம் சார் என்றுதான் அழைக்க வேண்டும்.

புரட்சித் தலைவர், மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், அறிஞர், கலைஞர், நாவலர், சூப்பர் ஸ்டார், உலக நாயகன், தல, இளைய, சின்ன, பெரிய நடுத்தரத் தளபதி என்று தொடங்கிக் கவியரசு, கவிப்பேரரசு, வித்தகக் கவி வரை பட்டப் பெயர்களால் ஆனதாக இருக்கிறது தமிழகம். சினிமா உலகத்தைப் பொருத்தவரை இது சற்றே விரிந்து தென்னிந்திய மாநிலங்களில் பரவியிருக்கிறது. இதை ஆரம்பித்து வைத்ததாகவோ அல்லது வளர்த்துவிட்டதாகவோ திராவிட இயக்கங்களைக் குறிப்பிடலாம். இன்றும்கூடத் தமிழக காங்கிரஸ் கட்சியில் இந்தப் போக்கு அதிகம் இல்லை. ஆனால் திராவிடக் கட்சிகளில் இது ஒரு கலாச்சாரமாகவே இருக்கிறது. அது அப்படியே திராவிட நடிகர்கள் மூலமாகச் சினிமா உலகத்தில் அதீதமாகவே பரவி இருக்கிறது.

திராவிட அரசியலின் கொடை

பெயரில் உள்ள சாதி, மத, வட்டார அடையாளங்களை மறைக்கவோ நிஜத்தை விடப் பெரிய பிம்பத்தைக் கட்டமைக்கவோ இதைத் திராவிடக் கட்சிகளின் தலைவர்கள் தொடங்கி இருக்கக்கூடும். இதுவே பின்னர் பட்டப் பெயர் இல்லாத அரசியல் தலைவரோ நடிகரோ இருக்க முடியாது என்ற நிலை வரை வளர்ந்திருக்கிறது. இன்றைய நிலையில் அரசியல் தலைவர்களைப் பட்டம் சொல்லி அழைக்காமல் அவர்கள் பெயரைக் குறிப்பிட்டுவிட்டால் அவர்களின் தொண்டர்கள் பொங்கி எழுந்துவிடுவார்கள். நண்பர் ஒருவர் ஒரு குறிப்பிட்ட பத்திரிகையில் அறிஞர் அண்ணாவை வெறும் அண்ணாதுரை என்று குறிப்பிட்டதற்கு வருந்தி ஒரு பதிவிட்டிருந்தார். தாய் தந்தை நமக்கு அளித்த சொந்தப் பெயரால் (அல்லது நாமே வைத்துக்கொண்ட புனைப்பெயரால்கூட) பட்டமில்லாமல் அழைக்கப்படுவது மரியாதைக் குறைவு என்ற எண்ணம் எப்போது ஏன் ஏற்படுகிறது என்பது ஒரு சுவாரசிமான உளவியல்.

அமெரிக்காவும் பாலிவுட்டும்

அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரை நேரில் பார்த்தால் மிஸ்டர் ப்ரெசிடெண்ட் என்று அழைக்கிறார்கள். அதே நேரம் அவர் பெயரைச் சொல்லி அழைத்தால் உங்களை யாரும் புரட்டி எடுக்க மாட்டார்கள். அவ்வளவு ஏன் இங்கே வட இந்தியாவில் அமிதாப், ஷாருக் கான், ஆமிர்கான் என்று கோடிகளில் புரளும் நடிகர்கள்கூடத் தங்கள் சொந்தப் பெயரைத் தாண்டிப் பட்டப் பெயர்கள் எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. அப்படியே பிறர் சூட்டியிருந்தாலும் தங்கள் படங்களில் டெண்டடேன்...டெடேன் என்று பின்னணி இசையுடன் போட்டுக் கொள்வதில்லை. இன்றைய பிரதமர் மோடி முதல் நேற்றைய பிரதமர் மன்மோகன்சிங் வரை யாரும் தங்கள் சொந்தப் பெயர்களை உபயோகிக்கத் தயங்கவில்லை.

பகடியாகும் பட்டங்கள்

இந்த வகையில் பவர் ஸ்டார், சோலார் ஸ்டார் போன்றவர்கள் வித்தியாசமானவர்கள். உண்மையில் இந்தப் பட்டங்களைக் கேலிக் கூத்தாக்கி நகைப்புக்குரிய பொருளாக்கியதில் தெரிந்தோ தெரியாமலோ இவர்கள் பங்கு முக்கியமானது. இதற்கு மேல் எந்த நடிகரும் ஸ்டார் என்ற அடைமொழியைச் சூட்டிக் கொள்வார்களா என்பது சந்தேகம்தான். அந்த வகையில் ஒரு சத்தமில்லாத புரட்சியை நிகழ்த்தி இருக்கிறார்கள் பவர் ஸ்டார், சோலார் ஸ்டார் போன்றவர்கள்.

இதனால் என்னப் பெரிய கேடு வந்து விடப்போகிறது என்று சிந்தித்தால் பெரிதாக ஒன்றும் தோன்றாது. இது ஒரு கலாச்சாரம் சம்பந்தப்பட்ட விஷயம். சம்பாதித்துச் சொத்து வாங்கி வீடு கட்டுவது போல் பட்டப் பெயர்களைச் சேர்ப்பதும் ஒரு அங்கீகாரமாகி விட்டது. ஆனால் இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் சற்றே ஆராயப்பட வேண்டியது. பட்டப் பெயரால் சூட்டப்பட்டு அழைக்கப்படும் ஒருவர் பொதுவெளியில் இயங்கும் தனக்கும் தனது உண்மையான சுயத்துக்கும் நடுவே ஒரு சுவரை எழுப்புகிறார். தனது சுயத்தைப் பொதுவான மக்களால் தொட முடியாத ஒரு தூரத்தில் வைத்துக்கொள்கிறார்.

மன்னர் ஆட்சி நடந்த காலங்களில் அவருக்குக் கட்டியம் கூற ஒருவர் இருப்பார். ராஜ குலோத்துங்கவை விட்டுவிட்டால் அவரைக் கழுவேற்றி விடுவார்கள். அப்படியிருக்க மன்னரின் பெயரைச் சொல்லி யாரேனும் அழைத்தால் என்ன நடக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். குடிகள் அழைக்க ஒரு பெயர். குடும்பம் அழைக்க ஒரு பெயர் என்பது அதிகாரத்தின் அடையாளம். நான் உன்னைவிட உயர்ந்தவன் என்ற குறியீடு. அது ஏழைப்பங்காளன் என்ற பட்டப் பெயராக இருந்தாலும் சரி, நீ எனக்குச் சமமில்லை என்று சாதாரணனுக்கு உணர்த்தும் அரசியல் அதில் அடங்கியிருக்கிறது. இவர் இனிமேல் பெயர் சொல்லி அழைக்கப்படும் நிலையைக் கடந்து உயர்ந்தவர். இவரை விமர்சிக்க நீ தகுதியற்ற சாதாரணன் என்ற அறைகூவலின் குறியீடாகவும் இதைப் பார்க்கலாம்.

பட்டங்கள் என்பவை மன்னராட்சியின் மிச்சம். தன்னை விடத் தாழ்வானவர்கள் தனது பெயர் சொல்லக் கூடாது என்ற அரசியலின் எச்சம். இன்றைய சூழ்நிலையில் இதையெல்லாம் தாண்டிப் பார்க்கும் அளவுக்கு மக்கள் வளர்ந்துவிட்டார்கள். இனியாவது பட்டங்களின் பின் ஒளியாமல் வெளிப்படையாக வாழும் தலைவர்களை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x