Last Updated : 18 Jan, 2023 12:00 PM

2  

Published : 18 Jan 2023 12:00 PM
Last Updated : 18 Jan 2023 12:00 PM

பறவைகள் மீது போர் தொடுக்கும் தேசம்!

கென்யா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த 10 ஆண்டுகளாக வறட்சி வாட்டியெடுக்கிறது. குறிப்பாக, கென்யாவின் வடகிழக்குப் பகுதிகளில் கடும் வெப்பம் நிலவுகிறது. ‘ஆப்பிரிக்காவின் கொம்பு’ (Horn of Africa) என்றழைக்கப்படும் சோமாலி தீபகற்பப் பகுதி அனலில் தகித்துவருகிறது. சோமாலியா, எரித்ரியா, எத்தியோப்பியா, ஜிபூட்டி ஆகிய நாடுகளும் கென்யா, சூடான் உள்ளிட்ட நாடுகளின் சில பகுதிகளும் இந்த தீபகற்பத்தில் அமைந்திருக்கின்றன. ஆப்பிரிக்க நாடுகள் எதிர்கொண்டிருக்கும் இந்தப் பிரச்சினையின் பின்னணியில் இருப்பது காலநிலை மாற்றம்தான் என நாடுகளுக்கிடையேயான வளர்ச்சிக்கான ஆணையம் (ஐஜிஏடி) சுட்டிக்காட்டியிருக்கிறது.

இந்தப் பகுதியில், வறட்சியின் காரணமாகப் புல்வெளிகளும், நெல் வயல்களும் ஏற்கெனவே அருகிவிட்டன. கூடுதல் பிரச்சினையாக, செவ்வலகு ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவிகள் (red-billed quelea birds) உணவுப் பயிர்களைக் கபளீகரம் செய்துவருகின்றன. இதை எதிர்கொள்ள கென்ய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கை விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

பகாசுரப் பறவைகள்: செவ்வலகு ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவிகளின் பிரதான உணவு உணவுப் பயிர்களின் விதைதான் - மிக முக்கியமாக நெல் விதை. ‘இறகுகள் கொண்ட வெட்டுக்கிளிகள்’ என்றழைக்கப்படும் இந்தப் பறவைகள், பயிர்களை அழிப்பதில் பிரசித்தி பெற்றவை. ஆப்பிரிக்காவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அழிவை ஏற்படுத்திவருபவை. வயல்வெளிகளிலிருந்து இந்தப் பறவைகளை விவசாயிகள் விரட்டும் காட்சிகள் எகிப்தின் பிரமிடுகளில்கூட இடம்பிடித்திருக்கின்றன. துரித கதியில் நெல் வயல்களை அழித்துவிடும் ஆற்றல் கொண்டவை. அதிவேகத்தில் பறந்து இடம்பெயர்ந்துவிடும் என்பதால் இவற்றைச் சமாளிப்பதும் கடினம்.

ஒரு செவ்வலகு ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவியால், நாளொன்று 10 கிராம் தானியம் வரை உட்கொள்ள முடியும் என்கிறது ஐநா உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO). மேற்கு கென்யாவில் உள்ள விவசாயிகள் ஆண்டுக்கு 60 டன் நெல்லை இந்தப் பறவைகளிடம் பறிகொடுக்கிறார்கள். இந்தப் பறவைகளால் ஆண்டுக்கு 50 மில்லியன் டாலர் (நம்மூர் மதிப்பில் ஏறத்தாழ ரூ.450 கோடி) இழப்பு ஏற்படுவதாக உணவு மற்றும் விவசாய நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கென்யாவில் ஏற்கெனவே 300 ஏக்கர் நெல் வயல்களை அழித்திருக்கும் இந்தப் பறவைகள், கூடுதலாக 2,000 ஏக்கர் நெல் வயல்களை அழித்துவிடும் என அஞ்சப்படுகிறது.

இந்தச் சூழலில் இந்தப் பறவைகள் மீது கென்ய அரசு போர்ப் பிரகடனம் செய்திருக்கிறது. ஏறத்தாழ 60 லட்சம் செவ்வலகு ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவிகளை அழிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டிருக்கிறது. ஆனால், நெல் வயல்களைக் காப்பாற்றுவதற்காக, மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துவதா என சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் பதறுகிறார்கள்.

காத்திருக்கும் ஆபத்து: ஃபெந்தியான் (fenthion) எனும் பூச்சிக்கொல்லியைத்தான் இதுபோன்ற தருணங்களில் ஆப்பிரிக்காவின் பல நாடுகள் பயன்படுத்துகின்றன. மிக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய இந்தப் பூச்சிக்கொல்லிகளைத் தடைசெய்ய வேண்டும் என ஏற்கெனவே குரல்கள் ஒலித்துவருகின்றன. இந்நிலையில்தான், இந்தப் பூச்சிக்கொல்லியை பல ஏக்கர் நெல் வயல்களில் தெளிக்க கென்ய அரசு தீர்மானித்தது.

குறிப்பிட்ட ஒரு பறவை இனத்த்திடமிருந்து நெல் வயல்களைக் காப்பாற்ற ரசாயனப் பூச்சிக்கொல்லியைப் பரவலாகப் பயன்படுத்துவது தவறு எனச் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் எச்சரிக்கிறார்கள். பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படும் நிலங்கள் முறையாகப் பராமரிக்கப்படாவிட்டால், மற்ற உயிரினங்களும் உயிரிழக்கும் வாய்ப்புகள் அதிகம். விலங்குகள் மற்றும் பறவைகளின் சடலங்களை உணவாகக் கொல்லும் விலங்குகளுக்கும் ஆபத்து ஏற்படும். வேட்டையாடி உண்ணும் பறவைகளும் அழிவைச் சந்திக்கும்.

ஆபத்தான ரசாயனப் பூச்சிக்கொல்லிகளும், உரங்களும் விவசாயத்தில் பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க ஐநா சுற்றுச்சூழல் திட்டமும், ஐநா உணவு மற்றும் விவசாய அமைப்பும் தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றன. சுற்றுச்சூழல் அல்லது உடல்நலன் அடிப்படையில் தடைசெய்யப்படும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் தொழில்துறை ரசாயனங்களின் பட்டியலில் (Annex III) ஃபெந்தியானைச் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.

இத்தனைக்கும் நடுவில், ட்ரோன்களின் உதவியுடன் ஃபெந்தியான் பூச்சிக்கொல்லியை நெல்வயல்கள் மீது தூவும் பணிகள், ஜனவரி 15 முதல் தொடங்கிவிட்டன. எஞ்சியிருக்கும் நெற்கதிர்களைக் காப்பாற்ற, தற்சமயம் வேறு வழியில்லை என்கிறது கென்ய வேளாண் துறை அமைச்சகம். ஒரு கவளம் அரிசிச் சோற்றைக் காப்பாற்றிக்கொள்ள கென்ய மக்கள் படும் பாடு பரிதாபமானதுதான்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x