Last Updated : 31 Dec, 2016 11:34 AM

 

Published : 31 Dec 2016 11:34 AM
Last Updated : 31 Dec 2016 11:34 AM

உயிர் வளர்த்தேனே 16: தானியக் கஞ்சிக்குத் தயாரா?

தேனும் தினை மாவும் நம் இலக்கியத்தில் புகழ்மிக்க ஓர் உணவுப் பலகாரம். அத்தகைய மரபார்ந்த சுவையுணவை நாம் கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டோம். தினை விளைவிக்கும் எளிய விவசாயக் குடும்பத்தினருக்கோ, `தினை ஒரு ஆடம்பரம்’ என்கிற அளவுக்கு அந்நியமாகிப் போன பயிராக அது இருக்கிறது. தேனீக்கள் அருகிவரும் நம் காலத்தில் தினை மாவில் தேனூற்றிப் பிசைவது என்றால், கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஆடம்பரமாகிவிடும்.

தினை மாவில் தேன் கலந்துதான் உண்ண மறந்தோம். சரி, கருப்பட்டிக்கு என்ன தடை? தினையை மையான மாவாக அரைத்து, (தேனில் ஊற வைத்து இடித்தால் மட்டுமே அதை முழுவதும் மாவாக மாற்ற முடியும். அந்த அளவுக்குக் கெட்டியானது தினை) அதில் கருப்பட்டித் தூளையும், சிறிதளவு நெய்யும் கலந்து பிசைந்து உருண்டையாகப் பிடித்தால் உயிர் கரையும் சுவையாகத் திகைப்பூட்டும்.

லட்டுக்கு அவமானம்

தினையும் வெள்ளைச் சர்க்கரையும் கலந்த லட்டை இனிப்புக் கடையில் ஒரு நாள் பார்க்க நேர்ந்தது. பொருந்தாகக் கலவையாக இருந்தாலும் தினைக்காகச் சமாதானம் செய்துகொண்டு, நான் சுவைத்த பின் உடன் வந்த நண்பரின் பள்ளிப் பையன்களுக்காகக் கால் கிலோ வாங்கினோம். பள்ளி நொறுவை இடைவேளையில் இனிப்பு டப்பாவைப் பிரித்த நண்பரின் பையன்கள் இருவரும் பெரும் கேலிக்குள்ளானார்கள்.

காரணம்? பப்ஸ், கேக், சமோசா போன்ற நொறுவையைக் கொண்டு வராமல் “இது என்னடா கார்ப்பரேசன் ஸ்கூல் பசங்களப் போல மாவுருண்டைய எடுத்துட்டு வந்து, லட்டூனூ பீத்துறீங்க?” என்று சக மாணவர்கள் அவமானப்படுத்தி இருக்கிறார்கள். அந்தப் பிஞ்சுகளின் மனதில் எந்தளவுக்கு நம் பாரம்பரியம் குறித்தும், அரசுப் பள்ளிகள் குறித்தும் நஞ்செண்ணம் விதைக்கப்பட்டிருக்கிறது? கற்றல் என்பது அறிவுக் கிளர்த்தலாக இல்லாமல், அந்தஸ்தாக மாற்றப்பட்டிருப்பதே நம் பிரச்சினை.

சரி, நம் பேசு பொருளுக்கு வருவோம். தினை மாவும் கருப்பட்டியும் கலந்து அதிரசம் சுடலாம். அரிசி மாவுக்குரிய அதே பக்குவம்தான். அதேபோலக் கருப்பட்டிப் பாகில் தினை மாவைக் கரைத்து அச்சு முறுக்கும் சுடலாம்.

உரம் தேவையில்லை

தினையே வெயில் நிறத்தில்தான் மினுமினுக்கும். எனவே, அதுவொரு வெப்பமான தானியம் என்பதைச் சொல்லத் தேவையில்லை. பொதுவாகவே சிறுதானியங்கள் வெப்பமானவை என்பதை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். வெப்பமான நிலத்தில் வெப்பத்தைக் குடித்து வளரும் இவற்றுக்கு உரமே தேவையில்லை. இயற்கையான உரத்துக்கு மாற்றாக ரசாயன உரம் போட்டால் பயிர்கள் கருகி விடும். ரசாயனக் கலப்பு சிறிதும் அற்ற சிறுதானியங்கள் நம் உடலுக்கு மிகுந்த நலம் தரும்.

அதேநேரத்தில் சிறுதானிய உணவு வகைகளை உண்பதற்கு நம் உடலைக் கொஞ்சங் கொஞ்சமாகப் பழக்கப்படுத்தினால் மட்டுமே, தற்காலத்து உடல் ஏற்றுக்கொள்ளும்.

உடலைத் தயார்படுத்துங்கள்

தற்காலத்தில் சத்தற்ற சக்கையான உணவையே பெரும்பாலும் உண்டு வருகிறோம். அவற்றை மட்டுமே செரித்துப் பழக்கப்பட்ட நிலையில், திடீரென்று உயிர்ச்சத்துகள் நிரம்பிய சிறுதானிய உணவை உண்கிறபோது, நமது உடல் தகவமைத்துக்கொள்ளச் சற்றே தடுமாறலாம். அந்த வகையில் தொடக்கத்தில் வயிற்று வலியும், வயிற்றுப் போக்கும் ஏற்படுவது இயற்கையானதே. இதுதான் சாக்கு என்று நினைத்துச் சிறுதானியங்களைத் தள்ளி வைக்க வேண்டியதில்லை. பொதுவாகச் சிறுதானியங்களை நீர்த்த கஞ்சி வடிவத்தில் அருந்திப் பழகுவதே உடல்நலனுக்கு ஏற்றது.

புளித்த மாவுக்குத் தடை

வாரம் முழுதும் இட்லி, தோசை. தோசை, இட்லி என்று மாறி மாறி உண்டி வகைகளைப் பழக்கப்படுத்தி வைத்திருக்கும் நாம், ஒரே மாவில் பலவகையான பதார்த்தங்களைச் செய்வதில் பலே கில்லாடிகள்.

மாவே புளித்த மாவு. அந்தப் புளித்த மாவில் வெந்த இட்லிகளைப் பொடித்துப் போட்டு உப்புமாவும், நுரைத்த மாவின் புளிப்பை மறைக்க வெங்காயத்தை வெட்டிப் போட்டு வெங்காய ஊத்தப்பமும் செய்து, சொந்த உடலுக்குத் துரோகம் செய்துகொள்வதில் நம்மைவிட தேர்ந்தவர் எவர் உளர்?

மாவுக்கு எப்படிக் குடுமி வைத்தாலும், அதன் புளிப்பு அடையாளம் தெரியாமல் போய்விடுமா என்ன? அந்தப் புளிப்பு மாவில் இருந்து நம் வயிற்றுக்கும் உடலுக்கும் விடுதலை அளிக்க வாரத்தில் ஒரு நாளாவது கஞ்சி அருந்திச் சிறுதானியப் பயன்பாட்டைத் தொடங்கலாம்.

தானியக் கஞ்சி

நம் உடல் இயல்பாக இருக்கும் நாட்களில், மிதமான புறச்சூழல் நிலவும் நாட்களில் சிறுதானியக் கஞ்சி தயாரித்துப் பொட்டுக்கடலை தேங்காய் சட்னி தொட்டுச் சுவைத்துப் பருகலாம்.

உமிப் போர்வை போர்த்தாத கேழ்வரகு, கம்பு போன்றவற்றை முளை கட்டியும், தினை, சாமை, குதிரைவாலி போன்றவற்றை ஊற வைத்து, உலரவிட்டு மாவாக அரைத்து வைத்துக்கொண்டால் கஞ்சியாகக் காய்ச்சிக் குடிக்கலாம். மெய்யாகவே சில நிமிடங்களில் தயாராகிவிடும் இந்த ‘சத்து மாவு கஞ்சி’, வயிற்றின் செரிமானத் திறனை அதிகரிக்கும். அதே நேரத்தில், உடலுக்கு மிகுந்த ஆற்றலை அள்ளிக் கொடுக்கும்.

பள்ளிக்குப் போகும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் விடுமுறை நாளில் இதுபோன்ற கஞ்சிகளுக்குப் பழக்கப்படுத்தி வைத்தால், துரிதப் பலகாரங்களைத் தேடி ஓட வேண்டியதில்லை. பசி என்றதும் நிமிடங்களில் தயாரித்து, மனமாரப் பசியாறலாம்.

எரிக்காமல் கரைக்க முடியுமா?

விளையாட்டுப் பயிற்சி மேற்கொள்வோருக்கும் உடற்பயிற்சி செய்வோருக்கும் ‘சத்து மாவுக் கஞ்சி’ ஊக்கச் சக்தியின் ரகசியமாக விளங்கும். மினுமினுப்பான தொப்பை கீழ் நோக்கி இறங்கத் தொடங்கியதும் ஆயிரக்கணக்கில் செலவு செய்து டிராக் சூட்டும் ஸ்போர்ட்ஸ் ஷூவும் வாங்கிவிடுகிறார்கள். அப்புறம், ஆரோக்கியம் தானாகவே உடல் தேடி வந்து சேரும் என்று கனவுலகில் மிதக்கிறார்கள்.

இன்னமும் வணிக வளாகம் கட்டாத நகர மைதானத்தில் உடலை முறுக்கி நடை பயில விரும்பும் நடுத்தர வயதினருக்கு எனது பணிவான உடல்நலக் குறிப்பு, முதலில் சத்து மாவுக் கஞ்சிக்கு மாறுங்கள். டிராக் சூட் இன்றியே ‘ஜிம் பாடிக்காரர்’ ஆவீர்கள்.

முதலில் தேவையற்ற சதையை எரிக்காமல், அதை அப்படியே திரண்ட சதையாக எப்படி மாற்ற முடியும்? எளிய, அதேநேரம் சத்து மிகுந்த உணவுக்கு மாறும்போது உடலின் செரிமான மண்டலம் தூய்மை அடைவதுடன் உபரிச் சதையும் தானாகவே வெளியேறும். அவற்றை முறுக்கிப் பிழிந்து காயப்போட வேண்டியதில்லை.

சத்து மாவுக் கஞ்சி, தானியக் கஞ்சி, தானியப் பலகாரங்கள் என்று அடுத்தடுத்த படிநிலைகளுக்கு நாம் தயாராக இருந்தால், உடல் தானாகவே வனப்பு பெறும். நம் குழந்தைகளும் உடல்நலம் பெறுவார்கள்.

(அடுத்த வாரம்: அரிசியை ஒதுக்க வேண்டாம்)
கட்டுரையாளர், உணவு எழுத்தாளர்தொடர்புக்கு: kavipoppu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x