Last Updated : 13 Dec, 2016 10:28 AM

 

Published : 13 Dec 2016 10:28 AM
Last Updated : 13 Dec 2016 10:28 AM

வெற்றிப் பார்வை: வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி...

வேலை வாய்ப்பு பற்றிய செய்திகளை வெளியிடுவதில் பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை முக்கியப் பங்கு வகித்தவை நாளிதழ்களே. இன்று பல வலைத்தளங்கள் அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டுவிட்டன. வேலை வாய்ப்பு தொடர்பான தகவல்களை வெளியிடுவது மட்டுமல்லாமல் பணிவாழ்க்கைக்கான வழிகாட்டுதலையும் அவை வழங்குகின்றன. வேலை வழங்கும் நிறுவனங்களையும் வேலைக்குத் தகுதியானவர்களையும் இணைக்கும் ஊடகமாகவும் இவை செயல்படுகின்றன. ஆன்லைன் சேவை தளம் என்பதால் வேலை தேடும் ஒருவர் தன்னுடைய தகவல்களை இவற்றில் பதிவுசெய்துவிட்டால் மின்னஞ்சல், மொபைல் குறுந்தகவல் ஆகியவை மூலமாக வேலை பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

உங்களுக்கு ஏற்ற வேலை

வெவ்வேறு விதமான வேலைகள், பல தரப்பட்ட நிறுவனங்கள் பற்றிய தகவல்கள், நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிகாட்டுதல், தனிநபரின் திறனுக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள், தற்போது எந்த நிறுவனங்களில் எல்லாம் வேலை இடங்கள் காலியாக உள்ளன போன்ற பலவிதமான தகவல்களை இந்த வலைத்தளங்கள் மூலமாகத் தெரிந்துகொள்ளலாம். ஆகவே வேலை தேடும் வேட்டையில் இறங்கியவுடன் பலர் இத்தகைய ஆன்லைன் தளங்களில் பதிவு செய்கிறார்கள். ஆனால் இவற்றை அணுகுவதில் கூடுதல் கவனம் தேவை.

இந்தியாவின் வேலை வலைத்தளங்களில் (Job sites) முன்னணியில் உள்ள ஒரு நிறுவனம் கடந்த வாரம் ஒரு எச்சரிக்கை அறிவிப்பை நாளிதழ்களில் வெளியிட்டது. “சில போலி நிறுவனங்கள் எங்களுடைய நிறுவனத்தின் பெயரைச் சொல்லி அப்பாவி மக்களை ஏமாற்றுகின்றன. வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி பணம் பறிக்கின்றன. எங்களுடையது வேலை வழங்கும் நிறுவனம் அல்ல. வேலைக்கான விளம்பரங்களை வெளியிடும் தளம் மட்டுமே” எனத் தெளிவாகப் பொதுநலம் கருதி வெளியிட்டது.

வேலை வாங்கித் தருவதாகச் சொல்லிப் பணம் பறிப்பது, விளம்பரத்திலேயே வேலைக்கு உத்தரவாதம் தருவது உள்ளிட்ட இரண்டு ஏமாற்று வேலைகளைப் போலி நிறுவனங்கள் செய்வதைக் கவனிக்க வேண்டும்.

இல்லாத வேலைக்குக் காத்திருக்கிறோமா?

பெரிய நிறுவனங்களில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலையைப் பெற்றுத் தருவதாக மின்னஞ்சல் அனுப்பி ஏமாற்றும் பல போலி நிறுவனங்கள் சமீப காலமாக முளைத்துள்ளன. அவற்றை நம்பிப் பணம் அனுப்பி ஏமாறுபவர்களில் பெரும்பாலானோர் சிறுநகரங்களைச் சேர்ந்த இளைஞர்களே. படித்தவர்களே லஞ்சம் கொடுத்து வேலை வாங்கிவிடலாம் என நினைப்பது முற்றிலும் தவறு. சுயமரியாதையோடும் தன்னம்பிக்கையோடும் நேர்மையாகச் செயல்படுபவர்கள் இது போன்ற போலி நிறுவனங்களிடம் மாட்டமாட்டார்கள் என எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால் இத்தகைய போலியான நிறுவனங்கள் நூதனமான பல திட்டங்களைத் தீட்டி ஏமாற்றுகின்றன.

நேரடியாகப் பணம் கேட்டால்தானே லஞ்சம்; பித்தலாட்டம்! ஆனால் அவை பணம் கொடுத்தால் வேலை கிடைத்துவிடும் எனச் சொல்லுவதில்லை. அதற்குப் பதிலாக, “நீங்கள் இந்த வேலைக்கு முதல் கட்டமாகத் தேர்வாகி உள்ளீர்கள். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். முதல் கட்டமாகப் காப்புத் தொகை (security deposit) செலுத்தினால் கூடிய விரைவில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவீர்கள்” என்பதுபோன்ற நம்பும்படியான வார்த்தை ஜாலங்கள் மூலம் மூளையை மழுங்கடிக்கின்றன. இவற்றை நம்பி ஆன்லைனிலேயே பணம் செலுத்தி இல்லாத வேலையின் நேர்முகத் தேர்வுக்காகக் காத்திருப்பவர்கள் ஏராளம்.

போலிகள் ஜாக்கிரதை

அப்படியானால் ஆன்லைன் சேவைகளை நம்பி வேலை தேடக் கூடாதா? அப்படி அல்ல. வேலை தேடுபவர்களுக்கு வேலை வழங்குபவர்களுக்கும் இடையில் உள்ள முக்கியமான ஊடகங்களில் ஒன்று ஆன்லைன் சேவை. ஆனால் எதையும் கண்மூடித்தனமாக நம்பாமல் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். போலியான வேலை வலைத்தளங்களைக் கண்டறிய எளிய வழிகாட்டுதல் இதோ:

• வேலைக்குத் தொடர்பற்ற தகவல்களான கிரெடிட் கார்டு எண், வங்கி கணக்கு ஆகியவை கேட்கப்பட்டால் சந்தேகம் கொள்ளுங்கள்.

• வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி விசா உள்ளிட்ட செயல்முறைகளுக்குப் பணம் கேட்டால் மறுத்துவிடுங்கள்.

• பணி நியமனத்துக்கு உத்திரவாதம் தந்து பணப் பரிவர்த்தனை செய்யச் சொன்னால் விழித்துக்கொள்ளுங்கள்.

* கல்வியின் அடிப்படை நோக்கமே, எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்க்கும் அறிவை வளர்ப்பதுதான். படித்த இளைஞர்கள் அதைக் கைவரப் பெற வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x