Last Updated : 25 Dec, 2016 03:14 PM

 

Published : 25 Dec 2016 03:14 PM
Last Updated : 25 Dec 2016 03:14 PM

கமலா கல்பனா கனிஷ்கா: புறக்கணிப்பால் போராளியானேன்

மொட்டை மாடியில் புத்தகத்தில் ஆழ்ந்திருந்தாள் கனிஷ்கா. கமலா பாட்டி கூப்பிட்டும்கூட கவனம் சிதறவில்லை. அவள் பார்வைக்கும் புத்தகத்துக்கும் இடையே கையை நுழைத்து, கனிஷ்காவின் கவனத்தைத் திருப்பினார் கல்பனா ஆன்ட்டி.

“எப்ப வந்தீங்க?” என்ற கனிஷ்கா கையில் சூடான பருப்புப் போளியைத் திணித்தார் கமலா பாட்டி.

“அப்படி என்னம்மா படிக்கிறே?” என்று கேட்டுக்கொண்டே புத்தகத்தை எடுத்துப் பார்த்தார் கல்பனா ஆன்ட்டி.

“லாஸ்ட் இன் டெரர்... இது எதைப் பத்தி?”

“ஜம்மு - காஷ்மீர் மகளிர் ஆணையத் தலைவர் நயீமா மஜுர் எழுதின புத்தகம் இது. காஷ்மீர் பற்றி நிறையப் புத்தகங்கள் வந்திருக்கு. ஆனா ஒரு பெண்ணின் பார்வையில் காஷ்மீரை விவரிக்கவே இந்தப் புத்தகத்தை எழுதியிருக்காங்க நயீமா. சர்ச்சைகள் நிறைந்த காஷ்மீரில் ஒரு பாரம்பரியமான சமூக அமைப்பில் பெண்களின் நிலை எப்படி இருக்குதுன்னு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்காங்க. குடும்பத்தில், சமூகத்தில் பெண்களின் குரல் எடுபடாமல் போனால், அதை இன்னும் உரக்கச் சொல்லணும்னு சொல்றாங்க நயீமா.”

“நீ படிச்ச பிறகு எங்களுக்கும் கொடு கனிஷ்கா. கர்நாடகாவுல ஏழாவது படிக்குற சிறுமி, மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நல வாரியத்துக்கு போன் பண்ணியிருக்கார். எனக்கும் குஜராத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞருக்கும் திருமணம் நிச்சயம் பண்ணியிருக்காங்க. என்னைக் காப்பாத்துங்கன்னு சொல்லியிருக்கார். அதிகாரிகள் அந்தச் சிறுமியைக் காப்பாத்தி, அரசு காப்பகத்துல சேர்த்திருக்காங்க. சம்பந்தப்பட்டவர்களைக் கைதும் பண்ணியிருக்காங்க” என்றார் கல்பனா ஆன்ட்டி.

“புத்திசாலிப் பொண்ணு. குழந்தைத் திருமணங்களைத் தடுக்கணும்னா, குழந்தைகள் உதவி மையத்தை 1098 என்ற எண்ணில் தொடர்புகொண்டு புகார் கொடுக்கலாம். சமூகநலத் துறை அல்லது காவல் துறைக்குத் தகவல் கொடுத்தாலும் குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்த முடியும்” என்றார் கமலா பாட்டி.

“பில்போர்டு பத்திரிகை 2016-ம் ஆண்டு சிறந்த பெண்மணிக்கான விருதை, பாப் பாடகி மடோனாவுக்குக் கொடுத்திருக்கு. அந்த விருது நிகழ்ச்சியில் மடோனா பேசியதுதான் உலகம் முழுவதும் இப்போ வலம் வந்துட்டிருக்கு. ‘உங்கள் முன் நான் ஒரு கால் மிதியடியைப் போல் நிற்கிறேன். ஆம், இசை உலகில் ஒரு பெண்ணின் நிலை அப்படித்தான் இருக்கிறது. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் தன்னம்பிக்கையைத் தாண்டி தற்காப்பு எதுவும் இல்லை. இசை உலகில் ஆணுக்கு இருக்கும் சுதந்திரம் பெண்ணுக்கு இல்லை.

இங்கே பெண்ணின் முதுமை ஒரு பாவச் செயல்போல் பார்க்கப்படுகிறது. பெண்கள் ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்டுக் கிடக்கின்றனர். பெண்கள் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது. ஒரு பெண்ணாக நம் சிறப்பை நாமே அங்கீகரிக்க வேண்டிய வேளை வந்துவிட்டது. என்னை வெறுத்தவர்கள், என்னை ஒதுக்கியவர்கள், எனக்கு வாய்ப்பை மறுத்தவர்கள் என அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன். ஏனெனில் உங்கள் புறக்கணிப்புதான் என்னைப் போராளியாக்கியது. அதுதான் இன்று நான் என்னவாக இருக்கிறேனோ அதற்குக் காரணம்’ அப்படின்னு பேசி அனைவரையும் உலுக்கிவிட்டார் மடோனா” என்றாள் கனிஷ்கா.

“அற்புதமான உரை. மடோனாவிடமிருந்து பாட்டு மட்டுமல்ல போர்க்குணத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று சிலிர்த்தார் கமலா பாட்டி.

“இதே பாணியில்தான் தன்னை வெறுத்தவர்களையும் இகழ்ந்தவர்களையும் தொடர் போராட்டத்தால் வென்றிருக்கிறார் புதுக்கோட்டை தடகள வீராங்கனை சாந்தி. பத்து ஆண்டுகள் போராடி விளையாட்டுத் துறையில் நிரந்தர பயிற்சியாளராகியிருக்கிறார்.

2006-ல் தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார் சாந்தி. பிறகு அவரிடம் நடத்தப்பட்ட பாலின பரிசோதனையின் தொடர்ச்சியாக அவரிடமிருந்த பதக்கம் திரும்பப் பெறப்பட்டது. என் மாணவர்கள் மூலம் இந்தியாவுக்குப் பல்வேறு பதக்கங்களைப் பெற்றுத் தருவதே லட்சியம்னு இப்போ சொல்லிருக்காங்க சாந்தி” என்று கல்பனா ஆன்ட்டி சொல்லி முடிக்கவும் கைத்தட்டல்கள் ஒலித்தன.

“நம் நாட்டில் மூன்றாம் பாலினத்தவருக்கான முதல் சர்வதேசப் பள்ளியான சஹஜ், கொச்சியில் திறப்பு விழா காணப்போகுது. டிரான்ஸ் இந்தியா ஃபவுண்டேஷனைச் சேர்ந்த ஆறு திருநங்கைகள் இதை நடத்தப் போறாங்க. டிசம்பர் 30-ம் தேதி செயல்பாட்டாளர் கல்கி சுப்பிரமணியம், இந்தப் பள்ளியைத் திறந்து வைக்கிறாங்க” என்றார் கமலா பாட்டி.

“ஓ… நல்ல விஷயம். இந்த மாதிரி விஷயங்களைப் பார்க்கிறபோது பாலியல் சிறுபான்மையினருக்கான அங்கீகாரம் முழுமையா கிடைக்கிற நாள் தொலைவில் இல்லைன்னு தோணுது. சரி கனிஷ்கா, நாங்க கிளம்பறோம்” என்று கமலா பாட்டியும் கல்பனா ஆன்ட்டியும் விடைபெற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x