Last Updated : 17 Dec, 2016 12:10 PM

 

Published : 17 Dec 2016 12:10 PM
Last Updated : 17 Dec 2016 12:10 PM

வேலையிழக்கும் கட்டுமானத் தொழிலாளர்கள்

கடந்த சில ஆண்டுகளாகவே தள்ளாடிக்கொண்டிருந்த கட்டுமானத் துறை, மத்திய அரசு அறிவித்த பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகு இன்னும் ஆட்டம் கண்டிருக்கிறது. குறிப்பாக இந்தத் தொழிலை நம்பியுள்ள ஏராளமான கட்டுமானக் கூலித் தொழிலாளர்கள் வேலையிழந்து வருகிறார்கள். எப்போது வேலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தவித்துவருகிறார்கள்.

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் முயற்சியாகக் கடந்த மாதம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பு நீக்கம் செய்து மத்திய அரசு அறிவித்தது. பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் பல்வேறு தொழில்களும் பாதிப்புக்குள்ளாயின. கறுப்புப் பணம் புழங்கும் துறைகளில் ஒன்றாகக் கருதப்படும் ரியல் எஸ்டேட் துறையும் இந்த அறிவிப்பால் பாதிப்புக்குள்ளானது. கையில் ரொக்கத்தை வைத்துக்கொண்டு வேலை செய்ய வேண்டிய துறை ரியல் எஸ்டேட் என்பதால், பணிகள் ஸ்தம்பிக்கத் தொடங்கின. மணல், செங்கல், சிமெண்ட், இரும்புக் கம்பிகள் போன்ற கட்டுமானப் பொருட்களை வாங்குவதில் கட்டுமானத் துறையினருக்குப் பிரச்சினைகள் ஏற்பட்டன.

கட்டுமானத் தொழிலில் உள்ள கூலித் தொழிலாளர்கள் தினக் கூலியாகவோ அல்லது வாரக் கூலியாகவோ பணிக்குச் செல்வது வாடிக்கை. அப்படிச் செல்பவர்களுக்குக் கூலித் தொகையைக் கொடுப்பதிலும் கட்டுமானத் துறையினருக்குச் சிக்கல் ஏற்பட்டது. இப்படிப் பல பிரச்சினைகள் முளைத்ததால் கட்டுமானப் பணிகளைப் பல கட்டுநர்களும் நிறுத்தத் தொடங்கினர். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமாகக் கட்டுமானப் பணிகள் தேக்கம் அடைந்திருக்கின்றன. சென்னையில் சுமார் 60 சதவீதக் கட்டுமானப் பணிகள் தேக்கமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளதாக இத்துறையில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.

“பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகு திருச்சியில் தற்போது 30 சதவீதக் கட்டுமானப் பணிகள்தான் நடைபெற்றுவருகின்றன. பெரும் பாலான கட்டுநர்கள் வேலையை நிறுத்திதான் வைத்துள்ளனர். கட்டுமானத் தொழிலாளர்களுக்குக் கூலி கொடுக்கப் பணம் இல்லை. இதுபோன்ற காரணங்களால் வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே வாரத்தில் 2 அல்லது மூன்று நாட்கள்தான் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்துவந்தது. இப்போது சுத்தமாக வேலை இல்லாமல் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்தார் கட்டுமான அமைப்பான கிரெடாயின் திருச்சி கிளை தலைவர் செந்தில்குமார்.

கட்டுமானத் தொழில் இப்படி நிறுத்தப்படுவதால் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருப்பது கட்டுமானக் கூலித் தொழிலாளர்கள்தான். பணிகள் நிறுத்தப்பட்டதால் பலரும் வீட்டிலேயே முடங்கிக்கிடக்கிறார்கள். சிலர் கிடைக்கும் மாற்று வேலையைச் செய்துவருகிறார்கள். சென்னையில் பெரும்பாலும் ஆந்திரா மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களே கட்டுமானத் தொழிலாளர்களாக உள்ளனர். தற்போது இவர்களில் பலரும் வேலையில்லாமல் சொந்த ஊருக்குத் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சில பில்டர்கள் வாரத்தில் ஓரிரு நாட்களே வேலையை வழங்குகிறார்கள். அந்த வேலையையும் விட்டுவிடக் கூடாது என்பதற்காக இங்கே செலவு செய்துகொண்டு தங்கியிருக்கிறார்கள்.

இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி ராஜகோபால் கூறும்போது, “கட்டுமானத் தொழிலாளியாக 20 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். இப்போது போல வேலை இல்லாமல் முன்பு எப்போதும் இருந்ததில்லை. கடினமானச் சூழலில்கூடச் சில்லறை வேலைகள் கிடைக்கும். இப்போது எங்கு போய்க் கேட்டாலும் வேலை நிறுத்தப்பட்டுள்ளது என்று பில்டர்கள் சொல்கிறார்கள். சாப்பாட்டைக் கட்டிக்கொண்டு எங்கேயாவது வேலை கிடைக்கும் என்று சுற்றிச் சுற்றி வருகிறேன். ஆனால், கிடைத்தபாடில்லை. எல்லோரும் சொல்லி வைத்தாற்போலக் கையில் பணமில்லாததால் வேலை இல்லை என்று கைவிரிக்கிறார்கள். இன்னும் எத்தனை நாளுக்கு இது நீடிக்குமோ?” என்று குடும்பச் சூழ்நிலையை எண்ணி வருத்தமாகக் கூறினார்.

500, 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு நீக்கம் பலரையும் பலவிதங்களில் பாதித்திருப்பது போலக் கட்டுமானத் தொழிலாளர்களை வேலையில்லாத நிலைக்குத் தள்ளியிருக்கிறது.

வாரத்தில் 2 அல்லது மூன்று நாட்கள்தான் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்துவந்தது. இப்போது சுத்தமாக வேலை இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x