Last Updated : 05 Nov, 2016 11:40 AM

 

Published : 05 Nov 2016 11:40 AM
Last Updated : 05 Nov 2016 11:40 AM

சத்தமும் மாசும் நிறைந்த தீபாவளி!

தீபாவளி முடிந்தவுடன், மது விற்பனை நிலவரச் செய்திகள் வருகின்றனவோ இல்லையோ, பண்டிகையின்போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் ஏற்பட்டுள்ள மாசுபாடு குறித்துத் தவறாமல் செய்திகள் வந்துவிடுகின்றன. துரதிர்ஷ்டவசமாக, மது விற்பனைக்கு ஈடாக ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு மாசுபாட்டின் அளவும் அதிகமாகி வருவது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு!

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ள தகவலின்படி, சென்னையில் இந்த ஆண்டு தீபாவளி நாளில் ஏற்பட்ட மாசுபாட்டின் அளவு, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விதித்த தரக்கட்டுப்பாட்டைவிட அதிகமாக உள்ளது. குடியிருப்பு, வணிகப் பகுதிகளில் 100 மைக்ரோகிராம்களுக்கு அதிகமாக மாசுத் துகள்கள் காற்றில் கலக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியிருந்தது.

இரண்டு மடங்கு மாசு

திருவல்லிக்கேணி, பெசன்ட் நகர், நுங்கம்பாக்கம், தியாகராய நகர், சவுகார்பேட்டை ஆகிய பகுதிகளில் காற்றில் கலந்திருந்த மாசுத் துகள்களின் அளவு 102 முதல் 178 மைக்ரோகிராம்களாக இருந்ததாக வாரியத்தின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. அதேபோல, ஒலி அளவு 55 முதல் 65 டெசிபல்களுக்குள் இருக்க வேண்டும் என்றும் மத்திய வாரியம் கூறியிருந்தது. ஆனால், மேற்கண்ட பகுதிகளில் 72 முதல் 88 டெசிபல்கள்வரை ஒலி மாசு இருந்ததாகத் தமிழ்நாடு வாரியம் கூறியுள்ளது.

மழை காரணமாக 2015-ம் ஆண்டுக்கான மாசுபாடு அளவுகள் வாரியத்திடம் இல்லை. எனவே 2014-ம் ஆண்டின் மாசு அளவுகளோடு ஒப்பிடும்போது, இந்த ஆண்டு காற்று மாசுபாட்டின் அளவு சற்றே குறைந்திருக்கிறது என்பதுதான் ஒரே ஆறுதல். மாசுபடுத்தும் பட்டாசுகளுக்குக் கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக டெல்லியில் உள்ள சுற்றுச்சூழல் அறிவியல் மையம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. அவை:

# மருத்துவமனை, பள்ளிகள், மக்கள் நெருக்கம் மிகுந்த குடியிருப்புப் பகுதிகளில் பட்டாசு வெடிப்பதற்கான கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க வேண்டும்.

# தீபாவளியின்போது பட்டாசு ஏற்படுத்தும் மாசுபாட்டின் அளவு குறித்து மக்களுக்குத் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

# பட்டாசுகளின் சப்தத்துக்கான தரக்கட்டுப்பாடு, பட்டாசில் வேதிப்பொருள் பயன்பாட்டுக்கான ஒழுங்குமுறை போன்றவை தேவை.

# மாசுபாட்டுக்கு தயாரிப்பாளரே கட்டணம் செலுத்தும் வகையில் பட்டாசுகளுக்குத் தனித் தீர்வை வசூலிக்க வேண்டும்.

# பட்டாசுகளால் ஏற்படும் ஆரோக்கியச் சீர்கேடுகள் குறித்துப் பட்டாசுகளின் மேல் அறிவிப்பு வெளியிட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x