Last Updated : 01 Nov, 2016 12:01 PM

 

Published : 01 Nov 2016 12:01 PM
Last Updated : 01 Nov 2016 12:01 PM

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்- 20: நம்பிக்கையுடன் உழைப்பவர்களுக்கு ஐ.ஏ.எஸ். உறுதி

யூ.பி.எஸ்.சி. தேர்வில் நம்பிக்கையுடன் உழைப்பவர்களுக்கு ஐ.ஏ.எஸ். உறுதி என்கிறார் வி.விக்னேஸ்வரி. 2015-ம் ஆண்டு பேட்ச்சின் உ.பி. மாநிலப் பிரிவில் பதேபூர் மாவட்டப் பயிற்சி உதவி ஆட்சியராகப் பணியாற்றி வருகிறார் இவர்.


சேவை செய்ய அதிகாரம் தேவை

மதுரை நகரைச் சேர்ந்த விக்னேஸ்வரியின் தாய் சாந்தி அங்கு ஒரு தொடக்கப் பள்ளியை நடத்துகிறார். இவரது தந்தை வெள்ளைச்சாமி அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுப் பயிற்சியாளர். மதுரை எஸ்.பி.ஒ.ஏ. மேல்நிலைப் பள்ளியில் கணினி அறிவியல் பிரிவில் படித்த விக்னேஸ்வரி, பிறகு தியாகராஜா பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் முடித்தார். கல்லூரி கேம்பஸ் தேர்வில் வென்று டிசிஎஸ் நிறுவனத்தில் ஒரு வருடம் வேலை பார்த்தார். அப்போது யூ.பி.எஸ்.சி.யின் முதல் முயற்சி செய்தவர், அடுத்த முயற்சியில் ஆர்.பி.எஃப். (ரயில் பாதுகாப்புத் துறை) காத்திருப்பு பட்டியலில் 2015-ல் இடம் பெற்றார்.

இதன் முடிவுகள் வழக்கமாக ஒரு வருடத்துக்குப் பிறகு வெளியாகும். அதனால் மீண்டும் தேர்வெழுதி ஐ.ஏ.எஸ்.ஸுக்கு முயற்சி செய்தார். ஆனால் யூ.பி.எஸ்.சி.யின் 24 பணிகளில் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.எஃப்.எஸ். (இந்திய வெளியுறவுத்துறை) பெற்றவர்கள் மட்டும் மறு முயற்சி செய்ய முடியாது. அப்படிச் செய்ய விரும்புபவர்கள் ஏற்கெனவே தேர்வான பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும். விக்னேஸ்வரியின் கனவு ஐ.ஏ.எஸ். என்பதால் ஏற்கெனவே ஒரு பதவி கிடைத்திருந்தாலும் மூன்றாவது தடவை முயற்சி செய்து 326 -வது ரேங்க்கில் ஐ.ஏ.எஸ். ஆனார்.
“கல்லூரியில் படிக்கும்போதே மதுரையில் சில தொண்டு நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றினேன்.

அப்போது இதுபோன்ற அமைப்புகளின் மூலம் கடைசிவரை உதவிக்கொண்டு மட்டுமே இருக்க முடியும். செயல்பாட்டில் மக்களின் வாழ்க்கை நிலையை மாற்ற வேண்டுமானால் அரசுப் பதவியும் அதிகாரமும் தேவை எனப் புரிந்தது. இதற்குத் தேவையான ஐ.ஏ.எஸ். பதவியைப் பெற யூ.பி.எஸ்.சி. எழுத முடிவெடுத்தேன்” என்கிறார்.
யூ.பி.எஸ்.சி.யின் பொதுக் கல்விப் பாடங்களுக்காக சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியிலும், பொது நிர்வாகப் பாடத்துக்காக மனிதநேய அறக்கட்டளை நடத்தும் வகுப்பிலும் பயிற்சி பெற்றார்.

இவ்விரு பயிற்சி நிலையங்களில் மாதிரி நேர்முகத் தேர்வுக்கும் பயிற்சி பெற்றார். பெற்றோரின் ஊக்கம் மேலும் உற்சாகம் அளித்தது. இரண்டாவது முயற்சியின் நேர்முகத் தேர்வில் கிடைத்த குறைந்த மதிப்பெண்ணால் ஐ.ஏ.எஸ். நழுவிப்போனது. இக்குறையையும் தன் இறுதி முயற்சியில் சரி செய்து, விரும்பியதை வென்றார்.


வெற்றிக்கு எடுத்த உழைப்பு


“பயிற்சி வகுப்புகளில் படிப்பது நல்ல வழிகாட்டியாக இருக்குமே தவிர, அதனால் மட்டுமே வெற்றி கிடைத்துவிடாது. கடுமையான உழைப்பு அவசியம். நாள் ஒன்றுக்குச் சுமார் எட்டு மணி நேரமும், தேர்வு நெருங்கும் நாட்களில் 14 மணி நேரம்வரையும் படித்தேன். இதில், பயிற்சி வகுப்புகளுக்கான நேரம் தனி. நண்பர்கள் அதிகம் இல்லை என்பதால், எனக்கு இருந்த சந்தேகங்களை இணையதளங்கள் மூலமாகத் தீர்த்துக் கொண்டேன். நான் படிப்பதைச் சுருக்கமாகக் குறிப்பு எடுப்பேன்.

எனது முதல் நேர்முகத் தேர்வில் இருந்த லேசான அச்சம் அடுத்தமுறை இல்லை. இந்தச் சமயங்களில் “If you cannot do, who else can do?” என் அம்மா பல சமயங்களில் என்னை ஊக்கப்படுத்தியது” என்கிறார். சமூகப் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாநிலமான உபியில் உதவி ஆட்சியராகப் பொறுப்பேற்றிருப்பதால் ஆக்கப்பூர்வமாகப் பல காரியங்களை மென்மேலும் செய்ய வேண்டும் என்கிற உத்வேகத்துடன் இருக்கிறார் விக்னேஸ்வரி.



அதிகப்படியாகப் படிக்க வேண்டாம்

யூ.பி.எஸ்.சி. வெல்ல, ஒரு பெண்ணாக எந்தத் தடையும் எனக்கு இருந்ததில்லை. இதுபோல் எந்தப் பெண்ணுக்கும் அது தடையாக இருக்காது. இதில் தோல்விகள் ஏற்படுவது சகஜம்தான். ஆனால், அதற்காகத் துவண்டு விடாமல் அதையும் தாண்டி படிக்க வேண்டும். அந்தச் சமயங்களில் நாம் வகுத்த இலக்கை மனதில் உறுதியாக நினைக்க வேண்டும்.

சிலர் அஞ்சி மிக அதிகமாகப் படிப்பது உண்டு. இவர்களில் பலராலும் வெற்றி பெற முடியாமலும் போனதாகக் கேள்விப்பட்டுள்ளேன். எனவே, அதிகம் படிப்பதை விட அந்தத் தேர்வுக்குத் தேவையான பாடத்திட்ட எல்லைக்குள் இருப்பதை அல்லது நம் எதிர்காலப் பணிக்குப் பலன் தருவதைப் படிக்க வேண்டும். படிக்க ஒதுக்கும் நேரங்கள் அவர்களுக்கு இருக்கும் புரிதல் திறனைப் பொறுத்தது. இந்த விஷயத்தில் மற்றவர்கள் செய்கையைப் பின்பற்றாமல் இருப்பது நல்லது. இறுதி நிலையான நேர்முகத்தேர்வில் அனைவருக்கும் ஒரே வகையான கேள்விகள் கேட்கப்படும் என எதிர்பார்க்க முடியாது.



நான் படித்தவை

நூல்கள்:

•‘India's Struggle for Independence’ - Bipin Chandra, Miridula Mukherjee, Aditya Mukherjee, Sucheta Mahajan, K.N.Panikkar.

•‘A Brief History of Modern India’ - Rajiv Ahir

•‘History of the World’ - Arjun Dev

•‘India after Gandhi: The History of the World’s Largest Democracy’ - Ramachandra Guha

•‘Certificate physical and Human Geography ‘- Cheng Leong Goh

•‘Social Problems in India’ - Ram Ahuja

·‘Indian polity’ - M. Laxmikanth

·‘Challenges and Strategy - Rethinking India's Foreign Policy’ - Rajiv Sikri

·‘Indian Economy’ - Ramesh Singh



இணையதளங்கள்

·pib.nic.in

·prsindia.org

·idsa.in

·ipcs.org

·mrunal.org

·insightsonindia.com

பத்திரிகைகள்: Frontline, Yojana, Kurukshethra

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x