Published : 28 Nov 2016 10:20 AM
Last Updated : 28 Nov 2016 10:20 AM

உன்னால் முடியும்: பெரிய முயற்சிகளே திரும்பிப் பார்க்க வைக்கும்...

“முதல் வாய்ப்பைப் பெறுவதற்கு முன்னர் பல சோதனைகள் காத்திருக்கும், மனசை தளர விடக்கூடாது, தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டே இருப்பதுதான் வெற்றியை நோக்கிய வழி’’ என்கிறார் கண்ணன். கோயம்புத்தூர் நகரின் மைய பகுதியான கணபதியில் அபாகஸ் கருவி தயாரிக்கும் தொழில் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்தியா முழுவதும் வாடிக்கையாளர்களை உருவாக்கியுள்ள தொழில்முனைவோரான இவரது அனுபவம் இந்த வாரம் ’வணிக வீதி’-யில் இடம் பெறுகிறது.

“மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்து விட்டு உதிரிபாகங்கள் மற்றும் அச்சு தயாரிக்கும் தொழிலில் இறங்கினேன். படிக்கும் காலத்தில் வந்த ஆர்வம் மற்றும் நான்கு மாதங்கள் ஒரு நிறுவனத்தில் வேலைபார்த்த அனுபவத்தோடு சொந்த தொழிலில் இறங்கிவிட்டேன். வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப சிறப்பாக செய்தால் ஆர்டர்கள் கிடைத்துவிடும் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தேன். ஆனால் நினைத்ததுபோல அவ்வளவு சுலபமில்லை என்பதை பின்னர்தான் தெரிந்து கொண்டேன். சின்ன சின்ன வேலைகள் வந்தாலும் அதைக் கொண்டு பெரிய அளவில் வளர முடியாது. பெரிய அளவில் செய்தால்தான் நம்மை கவனிப்பார்கள்.

அதைக் கொண்டுதான் வளர முடியும் என்பதை பிறகு என் அனுபவத்தில் உணர்ந்தேன். பத்து ரூபாய் விலையில் ஆயிரம் பொருள் தயாரித்தால் கிடைக்கும் மரியாதையை விட, ஆயிரம் ரூபாய் விலையில் பத்து பொருள் கொடுக்கும்போது கிடைக்கும் மரியாதை வேறாக இருந்தது. அதுதான் நம்மை கவனிக்க வைக்கும் என்பதால் கோவையில் ஒரு முக்கிய தொழில் நிறுவனத்தில் பெரிய ஆர்டரை வாங்கி விட வேண்டும் என்று இலக்கு வைத்து வேலைகளில் இறங்கினேன். ஒரே ஒரு முறை வாய்ப்பு கிடைத்தாலும் நம்மை நிரூபித்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தேன். தோராயமாக 500 முறையாவது ஆர்டர் கேட்டு சென்ற போராட்டத்துக்கு பிறகு முதல் ஆர்டர் கிடைத்தது.

அதுபோல ஒரு எம்என்சி நிறுவன ஆர்டருக்கு அலைந்தேன். அவர்கள் எனது இடத்தை பார்த்துவிட்டு இன்ப்ராஸ்ட்ரெக்சர் மற்றும் சிஸ்டமேட்டிக் வேலைகள் இல்லை என்று சென்றுவிட்டனர். என் தயாரிப்பு தரத்தை பார்த்து வேலை கொடுங்கள், நான் வேலைகளினூடே கட்டமைப்பை மேம்படுத்துகிறேன், அதற்கு பிறகு வந்து பார்வையிட்டு முடிவு செய்யுங்கள் என்று உறுதியாக நின்று ஆர்டர் வாங்கினேன். அவர்களுக்கு 2 மாதத்தில் கிடைக்கும் வேலையை பத்து நாட்களில் முடித்து கொடுத்தேன். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் தொழில் முனைவோராக என்னை மேம்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டே இருந்தேன்.

அபாகஸ் முறை பரவலாக கவனம் பெற்று வந்தபோது அப்படியே இதற்கு மாறிக் கொண்டேன். எனக்கு ஏற்கெனவே தொழில்நுட்ப கருவிகள் தயாரிப்பது குறித்த அனுபவம் இருந்ததால் பெரிய சிரமமில்லை. ஆனால் மார்க்கெட்டிங் அப்படியில்லை. யாரும் நம்மை தேடி வர மாட்டார்கள். நாம்தான் செல்ல வேண் டும், சில பள்ளிகளில் நல்ல வரவேற்பு கிடைக்கும், சில இடங்களுக்கு பல மாதங் கள் அலைய வேண்டும். ஆனால் ஒரு முறை குறிப்பிட்ட நேரத்துக்குள் கொண்டு சென்றுவிட்டால் வாடிக்கையாளர்கள் நம்மை விட்டு விலக மாட்டார்கள். இந்த தொழிலில் ஆண்டு முழுவதும் சீரான விற் பனை இருக்காது. பள்ளிகள் தொடங்கும் ஜூன்-ஜூலை மாதங்களில்தான் அதிக விற்பனை நடக்கும்.

அதுபோல மார்க்கெட்டிங் வேலைகளை திட்டமிட்டு செய்வதில்லை. ஒரு ஊருக்குச் செல்கிறேன் என்றால் எனது பையில் நான்கைந்து அபாகஸ் கருவிகளை எடுத்துச் செல்வேன். ஒரு பள்ளிக்கூடம், ப்ளே ஸ்கூல், டியூஷன் சென்டர், டிரெயினிங் இன்ஸ்ட்டியூட் என எல்லா இடங்களுமே எனக்கான மார்க்கெட்டிங் இடங்கள்தான். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு திருமண நிகழ்ச்சிகளில்கூட எனது மார்க்கெட்டிங் வேலைகள் நடக்கும். கடந்த 10 ஆண்டுகளாக இபடித்தான் எனது பயணங்கள் அமைந்துள்ளன. தற்போது இந்தியா முழுவதும் அபாகஸ் கருவியை அனுப்பிக் கொண்டிருக்கிறேன். பத்து பேர் வேலை பார்க்கிறார்கள். கருவியை அனுப்பி வைப்பது மட்டுமல்லாமல் அபாகஸ் குறித்த பயிற்சி கொடுப்பதன் மூலம் பலருக்கு மறைமுக வேலை வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளேன்.

எனது அனுபவத்தில் நான் உணர்ந்ததும் உணர்த்துவதிலும் முக்கியமானது, தொழில்முனைவோராக எப்போதும் புத்தாக்க முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டே இருக்க வேண்டும், இல்லையென்றால் ஒரே இடத்தில் தேங்கிவிடுவோம் என்பதுதான். ஒரே வேலையை எந்த முன்னேற்றமும் இல்லாமல் செய்து கொண்டிருக்கிறோம் என்றால், எவ்வளவுதான் வருமானம் வந்தாலும் திருப்தி இல்லாமல் போய்விடும். சொந்த தொழில் என்பதே ஒரு திருப்தியான உணர்வுதானே என்றார்.

vanigaveedhi@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x