Published : 25 Nov 2016 10:35 AM
Last Updated : 25 Nov 2016 10:35 AM

கலக்கல் ஹாலிவுட்: கதாநாயகர்களை விஞ்சும் கதாநாயகிகள்

பிரபஞ்சத்திலேயே மிகப் பெரிய சக்தியாகக் கருதப்படுவது 'பெண்' சக்தி. கல்வி, விளையாட்டு, கண்டுபிடிப்பு ஆகிய அனைத்துத் துறைகளிலும் அதிரடி செய்யத் தொடங்கிவிட்ட பெண்கள், தற்போது திரையுலகிலும் ஆழமாகக் கால்பதித்துவிட்டார்கள். கதாநாயகர்களின் ஆணாதிக்க அரசியலுக்கு வெறும் கவர்ச்சி பொம்மைகளாக ஒரு பக்கம் அரிதாரம் பூச வேண்டிய நிலை தொடர்ந்தாலும் கதைக்குத் தேவையான வலுவான கதாபாத்திரமாக மட்டுமின்றி, அதிரடிக் கதாநாயகிகளாகவும் திரையில் வலம்வந்துகொண்டிருக்கிறார்கள். அதற்கு ஹாலிவுட்டிலிருந்து பல உதாரணங்களைக் கூறலாம்.

'கில் பில்', 'லாரா கிராப்ட்', 'சார்லி ஏஞ்செல்ஸ்', 'கேட் உமன்' என நீண்டு செல்கிறது பட்டியல். தற்போது இந்த அதிரடிப் பட்டியல் இந்தியத் திரைவானிலும் இடிமுழக்கமாகக் கேட்க ஆரம்பித்துவிட்டது. பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே, வித்யா பாலான், அனுஷ்கா ஷர்மா, சோனாக்‌ஷி ஆகியோர் ஆக்‌ஷன் ரோல்களில் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே, தங்களின் அதிரடி அவதாரத்தை 'குவான்டிகோ' ஆங்கிலத் தொடரிலும் 'xxx-3' ஹாலிவுட் படத்திலும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், ஹாலிவுட் கதாநாயகிகள் அளவுக்கு அதிக எண்ணிக்கையில் நம்மவர்களுக்கு ஆக்‌ஷன் கதாபாத்திரங்கள் கிடைப்பதில்லை.

தற்போது ஹாலிவுட்டின் கதாநாயகிகளில் பலர் வில்லன்களை வேட்டையாடியது போரடித்துப்போய் இருட்டில் மனித மிருகங்களை வேட்டையாடக் கிளம்பிவிட்டார்கள்.

'வேன் ஹெல்சிங்', 'டாம் ரைடர்', 'ரெசிடண்ட் ஈவில்' ஆகிய ஹாலிவுட் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியிலும், உலக பாக்ஸ் ஆபிஸிலும் அமோக வரவேற்பைப் பெற்ற படங்கள். இந்த வரிசையில் விரைவில் வெளியாகவிருக்கும் 'அண்டர் வேர்ல்ட் சீரிஸ் - 5 ம் பாகமான 'அண்டர் வேர்ல்ட் பிளட் வார்ஸ்' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. துணிச்சலோடு, அதிரடியையும், தன்னம்பிக்கை தெறிக்கும் அழகையும் நம்பிக் களமிறங்கும் கதாநாயகிகள்தான் இந்த பிரம்மாண்ட படத்தின் கதாநாயகர்கள்.

வழக்கமாகக் கதாநாயகர்கள் ஏற்கும் சாகச வேட்டைக் கதாபாத்திரங்களை கதாநாயகிகள் இந்தப் படத்தில் ஏற்றிருக்கிறார்கள். இதனால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு உருவாகியிருப்பதாக கூறுகிறார்கள் நெட்டிசன்கள். பிரமிக்க வைக்கும் சண்டை காட்சிகளுக்காக ஆபத்தான பயிற்சிகளை மேற்கொண்டு நடித்துக்கொடுத்திருக்கிறார்களாம். அன்னா ஃபாரஸ்டர் இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் பட்ஜெட்டை இயக்குநர் ஷங்கரிடம் கொடுத்தால் அவர் ‘எந்திரன்’ படத்தின் ஐந்து பாகங்களை எடுத்துக்கொடுத்துவிடுவாராம்.

கேட் பெக்இன்செல், லாரா பல்வர் என இரண்டு ஹீரோயின்கள் செய்திருக்கும் ஆக்‌ஷன் அதிரடிகளைக் காண டிசம்பர் 2-ம் தேதிவரை காத்திருக்க வேண்டும். சோனி பிச்சர்ஸ் என்டர்டைன்மெண்ட் சார்பில் அன்றுதான் 'அண்டர் வேர்ல்ட் பிளட் வார்ஸ்' திரைப்படம் இந்தியாவில் வெளியாகவிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x